பிரியமானவர்களே, தேவனுடைய இருதயம், "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32) என்று வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இயேசு, நமக்கான கிரயத்தை சிலுவையில் செலுத்திவிட்டார். தேவன், நாம் வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதங்களையும் மிகுதியாக அனுபவித்து மகிழவேண்டும் என்று விரும்புகிறார். இயேசுவுடன் எல்லா ஆசீர்வாதங்களும் வருகின்றன. மெய்யான சந்தோஷம் வெகுமதியால் மட்டும் கிடைப்பதல்ல; கொடுப்பவரில் காணப்படுகிறது. கிறிஸ்துவை மையமாகக் கொண்டு நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்போது, நம் வாழ்க்கை, மற்றவர்களுக்கு தேவ சந்தோஷத்தையும், இரட்சிப்பையும், ஆசீர்வாதங்களையும் கொண்டு வருவதாக விளங்கும். இவ்வாறாக தேவனுடைய ஆசீர்வாதங்கள், நாம் அனுபவித்து மகிழ்வதற்காக மட்டுமல்லாமல், அவரது தயவை உலகத்தோடு பகிர்ந்துகொள்வதற்காகவும் மிகுதியாகக் கொடுக்கப்படுகிறது.

முதலாவதாக, தேவன் தம்முடைய மிகப்பெரிய ஆசீர்வாதமாகிய இரட்சிப்பை அருளுகிறார். வேதம், "அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12) என்று கூறுகிறது. இது அனைவருக்குமே விசேஷித்த ஈவாக இருக்கிறது. இயேசு என்ற பெயருக்கே, நம்மை பாவத்திலிருந்து விடுவித்து புதிய வாழ்க்கையை அருளும் இரட்சகர் என்று பொருள் (மத்தேயு 1:21). இரண்டாவதாக, அவர், கிறிஸ்துவுக்குள், பரிசுத்த ஆவியின் வரங்கள் உள்பட, சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார் (எபேசியர் 1:3; 1 கொரிந்தியர் 12:8-10). இந்த வரங்கள் தேவனோடு தொடர்பு கொள்ளவும், அவரது ஞானத்தை கண்டுகொள்ளவும், வாழ்வில் அவரது வல்லமையை அனுபவிக்கவும் நம்மை பெலப்படுத்துகிறது. மூன்றாவதாக, தேவன் நமக்கு ஞானத்தையும் அறிவையும் சம்பூரணமாக தருகிறார். கிறிஸ்துவுக்குள் ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது என்று வேதம் கூறுகிறது (கொலோசெயர் 2:3). நாம் அவரை ஏற்றுக்கொள்ளும்போது, இந்த பொக்கிஷங்களெல்லாம் நம் வாழ்வில் பொழிகின்றன.

மேலும், தேவன் இந்த உலகத்தின் ஐசுவரியத்தையும் பொருட்களையும் கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். வேதம், "அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே" (2 கொரிந்தியர் 8:9) என்று சொல்லுகிறது. சுய லாபத்திற்காக அல்லாமல், கிறிஸ்துவுக்குள் போதும் என்ற மனதோடு இருக்கவும், மற்றவர்களிடம் உதார குணத்தைக் காட்டவும் தக்கதாக நாம் எப்பக்கமும் வர்த்திக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நிறைவாக, அவர் பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு வல்லமை அளிக்கிறார் (அப்போஸ்தலர் 1:8; 10:38). இந்த வல்லமை, சத்துருவை மேற்கொள்ளவும், ஒடுக்கப்பட்டவர்களைக் குணமாக்கவும், அற்புதங்களை அனுபவிக்கவும் நமக்கு உதவுகிறது (மாற்கு 16:17). இயேசு நம்மிடையே தங்கியிருக்கும்போது, ஆசீர்வாதங்களை அனுபவிப்பதோடு, வாழ்க்கையை மறுரூபமாக்கும் அவருடைய வல்லமையையும் நாம் சுமந்து செல்வோம். இயேசுவின் நாமத்தில் இரட்சிப்பை, ஆவிக்குரிய ஈவுகளை, ஞானத்தை, ஐசுவரியத்தை, வல்லமையை ஏராளமாய், இலவசமாக அனுபவித்து மகிழ்வீர்களாக.

ஜெபம்:
அன்பின் தகப்பனே, என்னிமித்தம் உம் குமாரனை பலியாக்கியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசுவின் மூலம் சகல ஆசீர்வாதங்களையும் என்னை அனுபவிக்கச் செய்வீராக. என் வாழ்வை இரட்சிப்பின் சந்தோஷத்தினால் நிரப்பும். என்மேல் எல்லா ஆவிக்குரிய ஈவையும் பொழிந்தருளும். பரத்திலிருந்து ஞானத்தையும் அறிவையும் எனக்கு அருளிச்செய்யும். சகல தேவைகளையும் கொடுத்து, என்னை உதாரகுணமுள்ளவனா(ளா)க்குவீராக. பரிசுத்த ஆவியின் மூலம் உம் வல்லமையினால் என்னை மூடுவீராக. என் மூலமாக அற்புதங்களும் சுகமும் பாய்ந்து செல்வதாக. மற்றவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.