அன்பானவர்களே, இன்றைக்கு குருத்தோலை ஞாயிறு. இன்றைக்கு ஆண்டவர் நமக்கு ஜெயமான பாதையை உண்டுபண்ணியிருக்கிறார். அவர் ஜீவனோடிருக்கிறார். நாம் இயேசுவை கொண்டாடுவோம். அவரை நேசிப்போம். "அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்" (நீதிமொழிகள் 8:21) என்று வேதம் கூறுகிறதுபோல, அவருக்குச் செவிகொடுப்போம். நீதிமொழிகள் 8ம் அதிகாரம் தேவ ஞானம் நிரம்பியதாக இருக்கிறது. ஞானம், "அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்" என்று கூறுகிறது. தேவனுடைய ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறவர்கள், நீதியிலும் நியாயத்திலும் நடக்கும்படி வழிநடத்தப்படுவார்கள். அவர்கள் தீங்கான காரியங்களை செய்வதற்கு, எண்ணுவதற்கு, அநியாயமாய் செயல்படுவதற்கு பயப்படுவார்கள். ஞானம், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை நமக்குள் வைக்கிறது. நீதியின் வழியில் நடக்கும்படி இன்றைக்கு நீங்கள் அப்படிப்பட்ட ஞானத்தை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்.

ஒருநாள் நான் காரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் சிவப்பு விளக்கு எரிந்தது. எனக்கு முன்னே சென்ற கார் நின்றது. ஆனால், சில நொடிகளில் பின்னால் நின்ற எல்லா கார்களும் ஹாரனை ஒலிக்க தொடங்கின. போக்குவரத்து சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்தாலும், எதிர்ப்பக்கமிருந்து எந்த வாகனமும் வராததால் இவர்கள் அனைவரும் விரைந்து செல்ல துடித்தனர். ஆனாலும் எனக்கு முன் நின்றிருந்தவர் தன் காரை நகர்த்தவில்லை. ஒரு ஆட்டோ ஓட்டுநர் இறங்கிச் சென்று, "ஏன் நிற்கிறீர்கள்? யாரும் இல்லை," என்று கூறியபோதும், அந்த காரிலிருந்தவர் அதைப் பொருட்படுத்தாமல் பொறுமையாக காத்திருந்தார். பச்சை விளக்கு எரிந்த பின்னரே அவர் காரை செலுத்தினார்; அனைவரும் அவரை தொடர்ந்து சென்றனர். கட்டாயத்தின்பேரில் அவர்கள் சரியான முறையில் சென்றனர்.

அன்பானவர்களே, அது என்னை அதிகமாய் தொட்டது. ஞானம் நம்மை அப்படிப்பட்ட பாதையில் நடத்துகிறது. இன்றைக்கு இந்த ஞானத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம். ஒருவேளை பொய் சொல்லலாம்; மேலதிகாரி, பெற்றோர் அல்லது உங்களை கண்காணிக்காமல் இருக்கிறவர்களுக்கு உண்மையை மறைத்துவிடலாம் என்ற எண்ணம் உங்களுக்குள் எழும்பலாம். தவறான வழியில் செல்லும்படி சோதிக்கப்படலாம். ஞானத்தின் ஆவி, நீதியாக சிந்தித்து செயல்படும்படி நம்மை காக்கவேண்டுமென்று கேட்போம். தேவன் உங்களைக் கனப்படுத்துவார். நீதியான, நியாயமான வழிகளில் நடக்கும் உத்தமர்கள் தேவனுடைய நன்மையைச் சுதந்தரிப்பார்கள் என்று வேதம், நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் கூறுகிறது. தேவன் வைத்திருக்கும் சுதந்தரம் உங்களுக்காக காத்திருக்கிறது. அதைப் பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆசீர்வாதமான குருத்தோலை ஞாயிறுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் ஜீவிக்கிறீர்; நீர் பெற்ற வெற்றி எனக்கு நம்பிக்கையை தருகிறது. ஆண்டவரே, இன்று ஞானத்தின் ஆவியினால் என்னை நிரப்பும். அநீதியான எண்ணங்களையும் செயல்களையும் நான் புறக்கணிக்க உதவும். நான் உமக்குப் பயந்து எல்லா காரியத்தையும் நேர்மையாய் செய்யும்படி நடத்தும். சத்தியத்தை நேசிக்கவும், வஞ்சகத்திற்கு விலகவும் எனக்குக் கற்றுத் தாரும். உம்முடைய ஞானம் என் இருதயத்தை காத்துக்கொள்ளட்டும்; என் நடைகளுக்கு வழிகாட்டட்டும்; வாழ்நாள் முழுவதும் உம்முடைய சுதந்தரத்தில் நான் நடக்கும்படி செய்யட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.