அன்பானவர்களே, தேவன் எல்லா தீமைக்கும் உங்களை விலக்கி பாதுகாத்து, உயர்த்த தீர்மானித்துள்ளார். தேவன் இந்த உலகில் தீமையை அனுமதிக்கிறார். தீமையின் மத்தியிலும் நம் வாழ்வில் தம் வல்லமையை வெளிப்படுத்தி, எல்லா தீமையையும் மேற்கொள்ளவும் அவற்றுக்கு மேலாக உயரவும் பெலன் தருகிறார். தைரியமாயிருங்கள். தீமையால் உங்களை அழிக்க முடியாது; உங்களைத் தொட முடியாது. தீமை உங்களைச் சூழ்ந்துகொண்டு அதன் வலிமை பெருகுவதுபோல காணப்பட்டாலும், தேவன் அதன் நடுவிலும் தம் பாதுகாப்பின் வல்லமையை வெளிப்படுத்துகிறார். வேதத்தில், "கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்" (சங்கீதம் 121:7) என்று வாசிக்கிறோம். எந்தத் தீமை வந்தாலும், தேவன் உங்கள் ஆத்துமாவை கறைபடாமல் பாதுகாப்பார். ஒரு மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும், தன் ஆத்துமாவை இழந்துபோனால் அவனுக்கு என்ன நன்மை கிடைக்கும்? ஆகவே, நம் ஆத்துமா தேவனோடு ஒன்றாய் இருக்கவேண்டும். அது பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே முக்கியம். மரணத்திற்குப் பிறகு ஆத்துமா தேவனோடு இணைக்கப்படவேண்டும். பரலோகத்தில் பரிசுத்தம் இருக்கிறது. பரலோகத்தில் உலகபிரகாரமான இல்லறமோ, உலக இச்சைகளோ கிடையாது. எல்லோரும் தேவனோடு இணைக்கப்பட்டு, தேவதூதர்களைப்போல் இருப்போம். வேதம் அப்படி சொல்கிறது; இயேசுவும் அப்படியே கூறியுள்ளார். ஆகவே, நாம் தேவ கிருபையை பெற்றுக்கொண்டு பரிசுத்தமாய் வாழவேண்டும்.

தேவனுடைய வார்த்தையைப் பாருங்கள். நம் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளும்படி தேவன் இந்த உலகின் தீமையிலிருந்து நம்மை விடுவிக்கிறார். இன்றைக்கான கிருபையை தேவன்தாமே உங்களுக்குத் தந்து உங்களைப் பாதுகாப்பாராக. "ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்" (நீதிமொழிகள் 13:20) என்று வேதம் கூறுகிறது. ஆவிக்குரியவிதத்தில் பார்க்க இயலாதவர்கள், எளிதாக இந்த உலகின் தீமையில் பிடிக்கப்படுவார்கள். ஆனால், தேவன் நம்மை ஞானிகளோடே நடந்து, ஞானத்தை சம்பாதித்துக்கொள்ள அனுமதிக்கிறார். கர்த்தருக்குப் பயப்படும் பயமே மெய்யான ஞானமாயிருக்கிறது. தேவ பயம் என்பதற்கு தேவன் மீதான பக்தி என்றே அர்த்தம். தேவ பயம் ஞானத்தை அளிக்கிறது. இந்த உலகத்தின் வழிகளில் நாம் நடக்கக்கூடாது; பாவிகளின் பாதையில் நிற்கவும் கூடாது.

சிலர் உலக தரங்களின்படி ஞானமுள்ளவர்களாகக் காணப்படலாம்; ஆனால், பாவ பழக்கவழக்கங்களில் ஈடுபடலாம். ஒரு முறை ஒரு மாவட்ட ஆட்சியர் என்னிடம், "ஏன் எல்லா மாணவ மாணவியரும் ஜெபிக்கவேண்டும்?  நாம் எல்லோரும் பொறியியல் படிக்கிறோம். நாம் குடிக்கிறோம்; நாம் உண்ணுகிறோம்; மருந்துகளையும் அனுபவிக்கிறோம். அதுதான் வாழ்க்கை. அதுவே மாணவனின் வாழ்க்கை. நாம் வெற்றியடைவில்லையா? நமக்கு ஞானம் இல்லையா?" என்று கூறினார். ஆனாலும், அடுத்த நாளே அரசாங்கம், அந்தப் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டது. கடைசி வரைக்கும் அவருக்கு உயர்ந்த பதவி கொடுக்கப்படவேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

ஆம், உலக ஞானம் இருக்கிறது. ஆனால், தேவ பயம் இல்லையென்றால் எந்தப் பயனும் இருக்காது. நமக்கு தேவ பயம் இருந்தால் மாத்திரமே, நட்சத்திரங்களைப் போல பிரகாசிப்பதற்கான கிருபையை பெற்றுக்கொள்வோம். தேவன் இந்தக் கிருபையை உங்களுக்குத் தந்தருள்வாராக. உங்கள் வெளிச்சத்தில் எல்லோரும் களிகூருவார்கள். தேவன் தீமையிலிருந்து உங்களை இரட்சித்து, அவரை நேசிப்பதற்கு உதவுவார். தேவன் அவரை நேசிப்பதற்கு, அவருடன் உலாவுவதற்கு, மற்றவர்களுடன் இசைந்து வாழ்வதற்கான கிருபையை உங்களுக்கு அருளுவார். அவர் தீங்குக்கு உங்களை விடுவித்து, அவரது வழிகளில் நடப்பதற்கான கிருபையை தருவார்.

"நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்" (ஆதியாகமம் 50:20) என்று யோசேப்பு தன் சகோதரரிடம் கூறினான். அவனுடைய சகோதரர் அவனுக்கு விரோதமாக தீங்கை யோசித்தார்கள். அவனை அடிமையாக விற்றுப்போட்டார்கள்; இன்னொரு நாட்டு அவன் கொண்டுபோகப்பட்டான். ஆனால், தேவன் அவனோடிருந்தார். தேவன் யோசேப்பை ஆசீர்வதித்து, ராஜாவை போன்ற உயர்ந்த ஸ்தானத்துக்கு உயர்த்தினார்; அவனால் அநேக மக்களை காப்பாற்ற முடிந்தது. தேவன் எல்லாம் நன்மையாக மாறும்படி செய்தார். வேதம், "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11) என்று கூறுகிறது.

அன்பானவர்களே, உங்களைக் குறித்த எண்ணங்களையும் நினைவுகளையும் தேவன் அறிந்திருக்கிறார். அவை தீமைக்கானவையல்ல; சமாதானத்துக்கும், நம்பிக்கைக்கும், ஆசீர்வாதமான எதிர்காலத்துக்கும் உரியவையே. அவர் தம் பிள்ளைகளை தீமையிலிருந்து விடுவிப்பார். ஞானத்தோடு நடப்பதற்கு உதவுவார்; அநேகருக்கு வெளிச்சமாக வைப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா தீமையிலிருந்தும் என்னை பாதுகாத்து, உமக்கு முன்பாக என் ஆத்துமா பரிசுத்தமாக இருக்கும்படி செய்யும். ஞானமாக நடப்பதற்கான கிருபையை தந்தருளும்; தேவ பயத்தோடு மெய்யான ஞானத்தில் வளரச் செய்யும். உலகத்தின் பாவமான பாதையில் நடக்காதிருக்க உதவி செய்யும். எனக்கு எதிராக யோசிக்கப்படும் எல்லா தீமையையும், யோசேப்புக்கு செய்ததுபோல நன்மையாக மாற்றும். உம்மை நேசிப்பதற்கு, உம்மோடு நடப்பதற்கு, அநேகருக்கு வெளிச்சமாக மாறுவதற்கான கிருபையை தந்தருளும். சமாதானத்துக்கான, நம்பிக்கைக்கான, ஆசீர்வாதமான எதிர்காலத்துக்கான உம் யோசனைகள் என் வாழ்வில் நிறைவேறும்படி செய்திடும். உமக்கு உண்மையாக ஊழியம் செய்வதற்கு என்னை பெலப்படுத்தும்; பிறருக்குச் சேவை செய்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஆசீர்வதித்தருள வேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.