அன்பானவர்களே, வேதம், "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்" (அப்போஸ்தலர் 17:28) என்று சொல்லுகிறது. எந்த செயலையும் செய்வதற்கான பெலனும் எண்ணமும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றன. நாம் அவருக்குள்தான் அசைகிறோம். எல்லா கிரியைகளுக்கான சிந்தனையும் அவரிடமிருந்தே வருகின்றன. "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்" (பிலிப்பியர் 2:13) என்று கூறுகிறது. நாம் தேவ பிரசன்னத்தால் நிறைந்திருக்கும்போது, ஆண்டவர் நாமாக எதையும் செய்துவிட அனுமதிக்கமாட்டார். வேதம், "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது" (2 கொரிந்தியர் 3:5) என்றும் கூறுகிறது. தேவ கிருபையால்தான் நாம் இருக்கிறோம்.
தேவன் கிருபையாக சில நேரங்களில் எங்களுக்கு வெளிப்படுத்துகிறார். கூட்டம் ஒன்றில், நான் பரிசுத்த ஆவியினால் நிறைக்கப்படும்படி பொதுமக்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். ஜெபத்தின் நடுவே ஆண்டவர் எனக்கு ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார். ஆனால், அப்போது நான் வெளிப்பாட்டைக் கூறுவதற்கு தயங்கினேன். நான், "இப்போது ஆண்டவர் மக்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பிக்கொண்டிருக்கிறார். இந்த ஜெபத்தை நான் நிறுத்தவேண்டுமா?" என்று எண்ணினேன். ஆனால், ஆண்டவர் தொடர்ந்து வெளிப்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தார். மூன்றாவது முறையாக ஆண்டவர் தெளிவாக, "இவாஞ்சலின், இதை மக்களுக்குக் கூறு," என்று கூறினார். பிறகு நான், "இங்கே ஒரு மனிதர் இருக்கிறார். அவரது இருதயம் இரத்தத்தை மிக மெதுவாக செலுத்துகிறது. ஆண்டவர் இப்போது உங்களைத் தொடுகிறார்; உங்களைச் சுகமாக்குகிறார்," என்று கூறினேன். ஜெபம் முடிந்த பிறகு அதே மனிதர் மேடைக்கு ஓடி வந்தார்; ஆம், ஓடியே வந்தார். "நான் குணமானேன், நான் குணமானேன்," என்று மேலும் கீழும் குதித்தார்.
ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் அவரது இரகசியங்களை வெளிப்படுத்தும்படி நம் இருதயங்களை நடத்துகிறார். வேதம், "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் 8:14) என்று கூறுகிறது. அன்பானவர்களே, ஆண்டவர் உங்களையும் அவ்வாறே நடத்துவார். உங்களுக்கு வெளிப்பாடுகளை கொடுக்கும்படி, உங்களை ஆவியில் நடத்தும்படி தேவனிடம் கேளுங்கள். "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்" (எபேசியர் 2:10). நீங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். நற்கிரியைகளைச் செய்வதற்கு கிறிஸ்து இயேசுவினால் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். இதை மனதில் கொண்டவர்களாக அனுதினமும் வாழுங்கள். "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" (1 கொரிந்தியர் 9:24) என்று வேதம் கூறுகிறது. பயத்துடனும் நடுக்கத்துடனும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள். பந்தயத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். அப்போது, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி ஆண்டவர் உங்கள் இருதயத்தை அசைப்பார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நான் பிழைத்திருப்பதற்காகவும் அசைகிறதற்காகவும் இருப்பதற்காகவும் ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா விருப்பமும் செய்கையும் உம்மிடமிருந்தே வரவேண்டும். ஆண்டவரே, உம்முடைய சித்தத்தின்படி, உமக்குப் பிரியமானவற்றை செய்யும்படி எனக்குள் நீரே கிரியை நடத்தவேண்டும். தயவாய் என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி, உம்முடைய அன்பின் பிள்ளையாக நடத்தும். உம்முடைய சத்தத்தைக் கேட்கும்படி, உம்முடைய பூரண வழிகளில் செல்லும்படி என் இருதயத்தை நடத்தும். இயேசுவைபோல நற்கிரியைகளை நடத்தும்படி உம்முடைய கையின் செய்கையாயிருக்கிறேன். நீடித்த பொறுமையோடு, அனுதினமும் பக்தியோடு இரட்சிப்பு நிறைவேறவும், எனக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கும் பந்தயத்தை பெறவும் பிரயாசப்பட எனக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியினால் என்னை அனுதினமும் வழிநடத்தி, நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.