அன்பானவர்களே, நாம் புத்தாண்டுக்குள் வந்துவிட்டோம். ஆண்டவர் இன்றைக்கு உங்களை விசேஷித்தவிதமாய் ஆசீர்வதிக்கப்போகிறார். வேதம், "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை" (ரோமர் 10:11)என்று கூறுகிறது. எந்தச் சூழ்நிலையையும் தலைகீழாக மாற்ற தேவனால் முடியும். உங்கள் வெட்கம் அனைத்தையும் கனமாக மாற்ற அவரால் முடியும். மக்கள் உங்களுக்குத் தீமை செய்ய நினைக்கலாம்; ஆனால், ஆண்டவர் அனைத்தையும் நன்மைக்கேதுவாக மாற்றுவார். ஆகவேதான், வேதம் நீ ஒருபோதும் வெட்கப்படமாட்டாய் என்று வாக்குப்பண்ணுகிறது. முடிவு மகிமையாய் இருக்கும். ஆண்டவரையே சார்ந்திருக்கிறவன் ஒருபோதும் ஏமாற்றமடையமாட்டான். உங்கள் எதிர்காலம் நேர்த்தியாய் இருக்கும். உங்களுக்கு நிச்சயமாய் எதிர்காலமும் நம்பிக்கையும் உண்டு; உங்கள் நம்பிக்கை அற்றுப்போகாது. இக்கட்டான நேரங்களிலும் எதிர்காலத்தைக் குறித்த உத்தரவாதமான நம்பிக்கை உண்டு; நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடையமாட்டீர்கள்.
"இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்," என்று வேதம் கூறுகிறது (ஆபகூக் 2:4). நீதிமான்கள் தங்கள் முழு நம்பிக்கையையும் இயேசுவின்மேல் வைக்கிறார்கள். ஆண்டவர் ஒருபோதும் அவர்களை ஏமாற்றமாட்டார். நாம் விசுவாசித்தால் போதும். ஆம், அவரது வார்த்தையையும், வாக்குத்தத்தங்களையும் விசுவாசிக்கவேண்டும். இதையே ரோம நூற்றுக்கு அதிபதியும் செய்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (மத்தேயு 8:5-10). ரோமர்களால் யூதர்களை நம்ப முடியாது. ஆனால், அவன் யூதராகிய இயேசுவை விசுவாசித்தான். நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் திமிர்வாதத்தில் கிடந்தான். ஆகவே, வேலைக்காரனை சுகமாக்கும்படி இயேசுவை அவன் வேண்டினான்.
இயேசு, "நான் உன் வீட்டுக்கு வருகிறேன்," என்று கூறியபோது, நூற்றுக்கு அதிபதி, "நீர் என் வீட்டுக்கு வருகிறதற்கு நான் பாத்திரன் அல்லேன். ஒரு வார்த்தை மாத்திரம் கூறும். என் வேலைக்காரன் குணமாவான். எனக்குக் கீழே அநேக சேவகர்கள் இருக்கிறார்கள். நான் அதிகாரமுள்ளவன். ஆனாலும் உம் வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன்," என்று கூறினான். அவனது வேலைக்காரன் குணமாவான் என்று ஆண்டவர் கூறினார். அந்தத் தருணத்திலே, அவன் விசுவாசித்தபடியே, அவன் வேலைக்காரன் குணமானான். ஆண்டவர், "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை," என்று கூறி அவன் விசுவாசத்தைப் பாராட்டினார். அன்பானவர்களே, நீங்கள் எல்லாவிதங்களிலும் நெருக்கப்பட்டு திகைத்துப்போயிருக்கலாம். ஆனாலும் இயேசுவை பற்றிக்கொண்டிருக்கலாம். நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைவதில்லை. தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டிருப்பதால், அவர் ஒருபோதும் உங்களை வெட்கமடைய விடமாட்டார். விசுவாசியுங்கள். ஒருபோதும் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் வாழ்வில் தேவனுடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும். இன்றும் ஆண்டவர் உங்கள் வெட்கத்தை கனமாக மாற்றுவார்.
ஜெபம்:
பரம தகப்பனே, நான் உம்மேல் விசுவாசம் வைத்திருக்கிறபடியால், உம் ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் வருவதாக. மக்கள் என்னை ஏமாற்றியிருக்கலாம்; நான் வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையையும் இழந்திருக்கலாம். ஆனாலும், உம்மால் கூடாத காரியம் எதுவுமில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீர் எல்லா தீமையையும் நன்மையாய் மாற்றுவீர். என் வாழ்வில் நடந்தவை அனைத்தையும் தலைகீழாய் மாற்றுவீர். வெட்கத்துக்குப் பதிலாக இரட்டிப்பான கனத்தை நான் பெற்றுக்கொள்ளட்டும். எங்கெல்லாம் நான் வெட்கத்தினூடாய் சென்றேனோ அதே இடத்தில் நீர் என்னை உயர்த்தி கனப்படுத்தும். நான் மீண்டும் மீண்டும் தவறினாலும் எல்லா தோல்வியையும் வெற்றியாக மாற்றும். ஆண்டவரே, நான் காத்திருக்கிறேன். இன்றைக்கு அது நடக்கட்டும். என் வாழ்வில் உம் வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றும். உம் வாக்குத்தத்தங்களை நான் பற்றிக்கொண்டிருப்பதால் இன்றைக்கு அற்புதத்தை பெற்றுக்கொள்ள உதவும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


