பிரியமான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம், "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" (சங்கீதம் 50:15) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், இந்த உலகம் இருளுக்குள் கிடக்கிறது. திடீரென விபத்துகள் நடக்கின்றன; உயிர்களை இழந்துபோகிறோம். நானும் அவ்வாறே பல உபத்திரவங்களை பார்த்திருக்கிறேன். ஆனாலும், "கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்" (எபிரெயர் 13:6) என்று கூறுவதை மறந்துபோகக்கூடாது. அப்படிப்பட்ட உபத்திரவ காலங்களில் கர்த்தர் உங்களுக்குச் சகாயராயிருக்கிறார். ஆகவே, நீங்கள் வருத்தப்பட தேவையில்லை; பயப்பட அவசியமில்லை. நீங்கள் தைரியமாக, "பிசாசு எனக்கு என்ன செய்ய முடியும்? இந்தக் காரியங்களால் எனக்கு என்ன நடக்கும்?" சொல்லலாம். உங்கள் கண்களை கர்த்தர்மேல் வைத்திருந்தால், அப்படி நம்பிக்கையுடன் பேசலாம். ஆண்டவர், உங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுப்பார், அல்லேலூயா!
எங்கள் சொந்த வாழ்க்கையிலும் பலமுறை அதை அனுபவித்திருக்கிறோம். மக்கள் எங்கள் குடும்பத்தைக் குறித்தும், ஊழியத்தைக் குறித்தும் மோசமான காரியங்களை பேசுவார்கள். ஆனால், நாங்கள் அவர்களைப் பார்க்கமாட்டோம். நாங்கள் இயேசுவையே பார்ப்போம். ஆண்டவர், எங்களுக்கு சமாதானத்தை, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தந்திருக்கிறார். இந்த வேண்டாத பேச்சுகளிலிருந்து அவர் எங்களை வல்லமையாய் விடுவித்திருக்கிறார். ஆகவேதான், சங்கீதம் 145:18, "உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்" என்று சொல்கிறது. எங்கள் மகனை நாங்கள் பக்தியுள்ள வழியில், அவன் பக்தியுள்ள மகனாக வளருவான் என்ற நம்பிக்கையில் வளர்த்தோம். ஆனால், பிசாசானவன், இளவயதிலேயே அவனை இயேசுவிடமிருந்து விலக்குவதற்கு முயற்சித்தான். அவன் இருளுக்குள் விழுந்துவிட்டான்; எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆகவே நான், "வாரத்தில் ஒருநாள் முழுவதும் நான் உபவாசித்து ஜெபிக்கட்டும்; அவன் பிசாசின் கட்டுகளிலிருந்து விடுபடட்டும்," என்று கூறினேன். ஒரு வாரம் கடந்தது. இரண்டு வாரங்கள் கடந்தன. மூன்று வாரங்களும் கடந்தன. அப்போது அற்புதம் நடந்தது. தேவன் அவனை இருளுக்குள் இருந்து, அவரது தெய்வீக பரிசுத்தத்திற்குள் நடத்தினார். 17 வயதிலிருந்தே ஆண்டவர் அவனை வல்லமையாய் பயன்படுத்தத் தொடங்கினார்.
ஆம், அன்பானவர்களே, நீங்களும் இருள் உங்களைச் சூழ்ந்திருப்பதாக உணரலாம். "ஐயோ, நான் இருளுக்குள் இருக்கிறேனே.. எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லையே," என்று புலம்பலாம். நான், "இயேசுவை பிடித்துக்கொள்ளுங்கள். உபத்திரவ காலத்தில் அவரைக் கூப்பிடுங்கள்," என்று சொல்லுவேன். தேவன் நிச்சயமாகவே உங்களை விடுவிப்பார்; அவர் உங்களைக் கைவிடமாட்டார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய வசனம் (சங்கீதம் 50:15) கூறுகிறபடி, இன்றைக்கு உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உபத்திரவத்தின் மத்தியிலும், இருளின் மத்தியிலும், பயத்தின் நடுவிலும் என்னுடைய சகாயரும் விடுவிக்கிறவருமாயிருக்கிற உம்மை நோக்கியே பார்க்கிறேன். நீர் என்னோடு இருப்பதால் நான் பயப்படுவதில்லை. நீர் என் அருகில் இருப்பதால் சத்துரு எனக்கு என்ன செய்யக்கூடும்? எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தினால் என் இருதயத்தை நிரப்பிடும். உம்மையே பற்றிக்கொள்ளவும், உம்மையே நம்பவும், உம்முடைய வல்லமையான இரட்சிப்பு வரும்வரை காத்திருக்கவும் என்னை பெலப்படுத்தும். சத்தியத்தின்படி உம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு நீர் சமீபமாயிருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். உம்முடைய வெளிச்சம் என் வாழ்வில் இருளாயிருக்கிற எல்லா பகுதிகளிலும் பிரகாசிப்பதாக. உம்முடைய உதவியையும், உம்முடைய வெற்றியையும் இயேசு என்னும் வல்லமையான நாமத்தில் பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.