எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்" (சகரியா 8:12) என்று கூறுகிறது. எவ்வளவு ஆசீர்வாதமான வாக்குத்தத்தம்! நம் வாழ்வு எப்பக்கமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்குமானால், இந்த உலகில் வேறு எதை அதிகமாகக் கேட்க முடியும்? இந்தச் சிறந்த ஆசீர்வாதத்தை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு, நாம் வாழ்வின் எல்லா தேவைக்கும் அவரையே சார்ந்திருக்கவேண்டும். வேதம், "நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்" (தீத்து 3:14) என்று கூறுகிறது.
நாம் எப்படி தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்? வேதம், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" என்று இயேசு கூறுவதை அழகாக விளக்குகிறது (யோவான் 15:5). கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதே கனி கொடுப்பதற்கு முக்கியமாகும்.

வேதம், "அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்," (எபிரெயர் 13:15) என்று கூறுகிறது. தேவ பிள்ளையே, எப்போதும் துதி பலியை செலுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். நன்றியால் நிறைந்த இருதயம் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை ஈர்க்கும். தேவனை ஸ்தோத்திரிப்பதால் சம்பூரண பலன் உண்டாகும் என்றும், தேவ பிள்ளைகளுக்காக ஸ்தோத்திரிப்பதையும் ஜெபிப்பதையும் தான் ஒருபோதும் நிறுத்துவதில்லை என்றும்,  அவர்கள் ஞானத்தையும் வெளிப்பாட்டையும் ஆவிக்குரிய அறிவையும் அடைந்து தேவனை அதிக ஆழமாய் புரிந்துகொள்ளவும், தங்கள் அழைப்பை குறித்த நம்பிக்கையை  பெற்றுக்கொள்ளும்படி ஜெபிப்பதாகவும் பவுல் கூறுகிறான் (2 கொரிந்தியர் 9:12; எபேசியர் 1:16-20).

ஆம், அன்பான தேவ பிள்ளையே, நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்காகவும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனை துதிக்கவேண்டும். வேதம், "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்," என்று நம்மை ஊக்குவிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:18). நாம் தொடர்ந்து தேவனை துதித்து, அவருடைய நன்மைக்காக அவரை ஸ்தோத்திரிக்கும்போது நம் வாழ்வில் அவரது பரிபூரண ஆசீர்வாதங்கள், சமாதானம், சந்தோஷம் நிரம்பும். அன்பானவர்களே, நம் வாழ்வை முற்றிலுமாக தேவனுக்கு அர்ப்பணிப்போம். நமக்கு அவர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூர்ந்து, அவரது இரக்கத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்போம். நாம் அவரில் நிலைத்திருந்து, தொடர்ந்து அவரை துதித்தால், அவர் தாம் வாக்குக்கொடுத்துள்ளபடியே நம் வாழ்வை கனியுள்ளதாகவும் செழிப்பானதாகவும் மாற்றுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வில் கிருபையாக நீர் பொழிந்தருளியுள்ள எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். திராட்சச்செடியில் கொடிகள் இணைந்திருப்பதுபோல உம்மோடு இணைந்திருக்கவும், உம் மகிமைக்கென்று நித்தியமான கனிகளைக் கொடுக்கவும் எனக்கு உதவி செய்யும். எல்லா தேவைக்காகவும் உம்மையே நம்பியிருக்கவும், என் உள்ளத்திலிருந்து இடைவிடாமல் உம்மை துதிக்கவும் ஸ்தோத்திரிக்கவும் கற்றுக்கொடுத்தருளும். உம் ஞானத்தினாலும், சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் என்னை நிரப்பியருளும். ஆவிக்குரியவிதமாகவும், சரீர பிரகாரமாகவும், பொருளாதார ரீதியாகவும் எல்லாவிதத்திலும் என் வாழ்க்கையில் கனி காணப்படுவதாக. உம் நன்மையைக் காணும்படி என் கண்களைத் திறந்து, உம்மோடு நெருங்கி சஞ்சரிக்க என்னை விசுவாசத்தில் பெலப்படுத்துவீராக. உம் பரிபூரண ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் புரண்டோடி, மற்றவர்களும் என் வாயிலாக ஆசீர்வாதம் பெறவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.