அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று நாம் தாவீது கூறிய, "அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்" (சங்கீதம் 18:19)என்ற வசனத்தை தியானிப்போம். தாவீது எதற்காக இப்படி கூறுகிறான்? முந்தின வசனங்களில், "என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்" என்றும், இதற்கு அடுத்த 20வது வசனத்தில், "கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்" என்றும் கூறுகிறான். கர்த்தர், தாவீதின்மேல் பிரியமாயிருந்தபடியினால் அவனை விடுவித்தார். தாவீது, தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாய் இருந்தான்.
"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 37:23) என்று சொல்லுகிறபடி, நாம் நீதியுள்ள வாழ்க்கை வாழும்போது, கர்த்தர் நம்மை விடுவிக்க பிரியமாயிருக்கிறார். "என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்" (சங்கீதம் 18:36)என்றும் தாவீது கூறுகிறான். மெய்யாகவே நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படுத்தப்படும்; அவன் ஒருபோதும் விழுவதில்லை. தாவீது, தன் சத்துருவான சவுலுக்கு, வெகு காலம், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்திருந்தான். அப்போது வனாந்தரத்தில் வாழ்ந்தான். இக்கட்டான நிலையில் ஆண்டவர் அவனை காப்பாற்றினார். ஆண்டவர் அவனை எல்லா சத்துருக்களிடமிருந்தும் காப்பாற்றினார். அவன், "அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்" என்று சாட்சி கூறுகிறான். விசாலமான இடம் என்பது விடுதலையைக் காட்டுகிறது; தாவீது, இப்போது ஆபத்தில் இல்லை; ஆண்டவர் அவனுக்கு விடுதலையை கொடுத்தார்.
தேவன் நமக்கு அவருடைய ஆவியை தந்திருக்கிறார்; ஆகவே, நாமும் விடுதலையை அனுபவிக்கலாம். "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு" (2 கொரிந்தியர் 3:17)என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனுடைய ஆவியால் நிரப்பப்படும்போது, ஆண்டவர் நம்மை விசாலமான இடத்துக்குக் கொண்டு வருகிறார். ஆவிக்குரிய பரிபூரணமும் விடுதலையும் உள்ள வாழ்க்கை. மட்டுமல்ல, வேதம், "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபேசியர் 2:7)என்றும் சொல்கிறது. இதுதான் விசாலமான இடம், கிறிஸ்துவுக்குள் கனத்துக்குரிய இடம். ஆண்டவர் நம்மை கிறிஸ்துவுடன் உன்னதங்களில் உட்காரப் பண்ணி எவ்வளவாய் கனப்படுத்தியிருக்கிறார்! தேவனுடைய ஆவியானவர் நமக்குள் இருந்தால் நிச்சயமாய் நமக்குப் பலன் கிடைக்கும். ஆண்டவர் நம்மை விசாலமான இடத்துக்குக் கொண்டு வருவார்; சமாதானமான, விடுதலையான, கிறிஸ்துவுடன் ஐக்கியம் கொண்ட வாழ்க்கையை தருவார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, பலத்த சத்துருவிடமிருந்தும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் என்னை மீட்கிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தாவீதை நீர் விசாலமான இடத்துக்குக் கொண்டு வந்ததுபோல, நீர் உருவாக்கியிருக்கிற விசாலமான இடத்துக்கு என்னை கொண்டு செல்லும். உம் பிரியம் எப்பொழுதும் என்மேல் இருப்பதாக. சுத்தமான கைகளோடும் இருதயத்தோடும் நீதியில் நடக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு என்பதால், தயவுசெய்து என்னை பரிசுத்த ஆவியால் நிரப்பும். உன்னதமான இடங்களில் கனத்தோடும் ஜெயத்தோடும் சமாதானத்தோடும் கிறிஸ்து இயேசுவோடு உட்காருவதற்கு எனக்கு வழியை ஆயத்தம் பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கால் வழுவாதபடி அடிதோறும் என்னை வழிநடத்துவீர் என்று விசுவாசித்து இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.