எனக்கு அன்பானவர்களே, இன்று உங்கள் அறுவடையின் நாள். தேவன் உங்களுக்காக வைத்திருக்கிற சிறந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள். நீதிமொழிகள் 11:28-ல் வேதம் கூறுகிறது, “துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்" என்று. ஒரு அலுவலகத்தில் ஒருவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வேலையை சரியாக செய்யாமல், மற்றவர்களுடன் பேசிக்கொண்டும், எப்போதும் அங்குமிங்குமாக அலைந்துகொண்டும் இருப்பார். ஆனால், அவரது அதிகாரியின் முன்பாக, இவர்தான்  சிறந்த அலுவலக ஊழியர்போல காட்டிக்கொள்வார். அதே அலுவலகத்தில், வேறொருவர் தன்னுடைய வேலையை சரியாக செய்து, கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அந்த முதல் நபரோ, இவரை பற்றி தவறான காரியங்களை மேலதிகாரியிடம் சொல்லிக்கொடுத்து, அவரைப் பற்றி தீய செய்திகளை பரப்பி வந்தார். அதனால் அந்த நல்ல ஊழியர்மீது அந்த அதிகாரிக்கு கெட்ட அபிப்பிராயம் ஏற்பட்டது. ஆனால், அந்த வஞ்சகமான ஊழியரோ, தொடர்ந்து பலரைப்பற்றி குறை கூறிக்கொண்டு, தான் மட்டும் சிறந்தவர்போல காண்பித்துக்கொண்டேயிருந்தார். அதனால் அவரது  அதிகாரி அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கொடுத்தார். இதனை பயன்படுத்திக்கொண்டு, அவர் பிறரது வேலையையும் தாமே செய்ததுபோல காண்பித்தார். ஆனால், சூழ்நிலை நெடுநாள் நிலைக்கவில்லை. உண்மை ஒரு நாள் வெளிவர ஆரம்பித்தது. இவரது வஞ்சக செயல்கள் அனைத்தும் அதிகாரிக்கு தெரியவந்தது. உடனே அந்த அதிகாரி, அவரை வேலையிலிருந்து நிறுத்தினார். மேலும், அங்கு அமைதியாக உழைத்துக்கொண்டிருந்த அந்த ஊழியர்தான் அலுவலகத்தில் உண்மையான உழைப்பாளி என்பதை அறிந்துகொண்டார். அந்த வஞ்சகம் நிறைந்தவரின் பொறுப்புகள் அனைத்தையும் இவருக்கு கொடுத்து, இவரை உயர்த்தி வைத்தார்.

ஆம் நண்பர்களே, இந்த வசனம் மிகவும் உண்மையானது. துன்மார்க்கர்  விருதாவேலையைச் செய்கிறார்கள்; அவர்கள் உயரே எழும்புவதுபோல இருக்கலாம், ஆனால், அவர்களின் உயர்வு நிலையானதல்ல. அது ஏமாற்றத்தைத் தரும். ஆனால், நீதியில் விதைத்து, தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நேர்மையாக நடப்பவர்களோ, நிச்சயம் அதற்கான பலனை அறுப்பார்கள். நிலையான அஸ்திபாரம் கொண்ட மெய்ப்பலனை பெறுவார்கள். தேவனால் வரும் அந்த ஆசீர்வாதத்தை யாராலும் பறிக்க முடியாது. நீங்களும் நீதியில் விதைத்ததினால் இப்படிப்பட்ட ஆசீர்வாதத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இன்று நீங்கள் அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்பின் தேவனே, வேதத்தில் கூறப்பட்டிருக்கும், நீதியில் விதைக்கிறவர்கள், மெய்ப்பலனைப் பெறுவார்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உண்மையாய் நடப்பதற்கும், வேலை ஸ்தலத்தில்  நேர்மையாய் நடப்பதற்கும், நான் செய்யும் எல்லாவற்றிலும் உம்மை உயர்த்தவும், இன்று என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நான் எதிர்ப்பார்ப்பதற்கான பதில் வர தாமதமானாலும், நீர் என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும், நான் விதைத்ததையும் அறிந்திருக்கிறீர் என்று உம்மில் விசுவாசமாயிருக்க உதவி செய்யும். பிறர் தீய வழியில் உயரும்போது, நான் அதைக் கண்டு பொறாமை கொள்ளாதவாறு என் இருதயத்தைக் காத்துக்கொள்ளும். நான் மனம் தளராமல் இருக்க உதவி செய்யும், ஏனென்றால், நீர் எனக்காக வைத்திருக்கிற தகுந்த நேரமும், ஆசீர்வாதமும் சிறந்தது. நிலையான அஸ்திபாரமாகிய உமது வேதத்தில் என் வாழ்வை நிலைநிறுத்தும். எனது அறுவடை உமது தயவினால் வளமானதாகவும், என்றும் நிலைத்திருக்கும் மெய்ப்பலனாகவும்  இருக்கட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.