அன்பானவர்களே, உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். நாம் இணைந்து இன்று தேவனுடைய ஆசீர்வாதத்தில் களிகூரப்போகிறோம். கர்த்தர், "ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்" (எரேமியா 31:14) என்று இன்று வாக்குக்கொடுக்கிறார். அப்படிப்பட்ட செழிப்பும் கொழுமையுமான ஆசீர்வாதம் வருகிறது. தேவன், நம்மை அவரது ராஜரீக ஆசாரியக்கூட்டமாக, அவரை துதிக்கும்படி, அவருக்குச் சொந்தமானவர்களாக தெரிந்துகொண்டிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (1 பேதுரு 2:9). நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருப்பதால் தேவனுடைய ராஜரீக ஆசாரியராக இருக்கிறீர்கள்.

அப்படிப்பட்ட மக்கள்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்; அவர்களை தம் கொழுமையான ஆசீர்வாதங்களினால், செழிப்பினால் நிரப்புகிறார். சிலர், "இது உன் விதி. இப்படி அழிந்துபோவது உன் விதி," என்று கூறலாம். ஆனால், உங்கள் விதி, ஆண்டவர் உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பார் என்று கூறுகிறது. ஆமென்! அதுவே உங்கள் இறுதியான விதியாக இருக்கும்.

யாக்கோபைப் பாருங்கள். தனிமையின் வழியாக, உபத்திரவத்தின் வழியாக கடந்து சென்று கொண்டிருந்த அவன், கர்த்தரை சார்ந்து, அவரை நோக்கிப் பார்த்தான். அப்போது, கர்த்தர், "நான் உன்னைப் பூமியின் தூளைப்போலாக்குவேன். உன் சந்ததியார் பூமியின் தூளைப்போல பெருகுவார்கள். நான் இந்தத் தேசத்தை உனக்குத் தருவேன். நீ வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் பெருகுவாய்," என்று கூறினார். அவ்வளவு பலத்த ஆசீர்வாதம்! இன்று, யாக்கோபிலிருந்து அதைக் காண்கிறோம்; இஸ்ரவேலின் சந்ததி முழுமையும் உலகிற்கு ஆசீர்வாதமாக உள்ளது. ஆமென்! அப்படிப்பட்ட ஆசீர்வாதம் வருகிறது. இறுதியாக அந்தச் செழிப்பான இடத்திற்கு ஆண்டவர் உங்களைக் கொண்டு வந்து சேர்ப்பார். ஆகவே, இன்றைய உபத்திரவங்களைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். தேவனுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னை உமக்குச் சொந்தமானவன்(ள்) என்று அழைத்து, உம்முடைய ராஜரீக ஆசாரியத்துவத்தை தந்ததற்காக ஸ்தோத்திரிக்கிறேன். இன்று கொழுமையைக் குறித்த உம் வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொள்கிறேன். நான் அழிந்துபோவேன் என்ற எல்லா பொய்யையும் நீர் அதம் பண்ணிப்போடவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உபத்திரவங்களைத் தாண்டி, நீர் வாக்குப்பண்ணிய கொழுமையான திருப்திக்குள் கடந்து சென்று, உம் கரத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள எனக்கு உதவி செய்யும். உம்மையே முழு மனதுடன் நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.