அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது" (சங்கீதம் 94:19) என்று கூறுகிறது. இந்த உலகில் நாம் வாழும் நாள் வரை, உபத்திரவங்களையும் இக்கட்டான சூழ்நிலைகளையும் சந்திக்கவேண்டியதிருக்கும். சிலவேளைகளில், இந்தச் சூழ்நிலைகள் நமக்குள் விசாரத்தைப் பெருகப்பண்ணும். ஆனால், கவலைகள் நம்மை மலைக்கப்பண்ணும்போது, கர்த்தர் தம் ஆறுதலை அளித்து நம் உள்ளங்களை பெலப்படுத்துகிறார். அவரது ஆறுதல், அவரது வார்த்தையின் வாயிலாக, மக்கள் வாயிலாக, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தினால் வருகிறது. கர்த்தரின் சமுகம் நம் ஆத்துமாக்களை புதுப்பிக்கிறது; மறுபடியும் எழும்புவதற்கு, அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்கு, ஜெயத்தை அடைவதற்கு நமக்கு பெலன் அளிக்கிறது. நீங்கள் இருக்கும் சூழ்நிலைகளை வெட்கம் அடையாமல் மேற்கொள்ளுவீர்கள். கர்த்தர், புதிய காரியங்களை உங்கள் வாழ்க்கையில் நடத்தி, நீங்கள் அவற்றை செய்து முடிக்கும்படி பண்ணுவார். அவர் உங்களை உயர்த்துவார்; கனப்படுத்துவார்; நிலைப்படுத்துவார்.
கர்த்தர், நம் மேன்மையைப் பெருகப்பண்ணி எப்பக்கத்திலும் ஆறுதல் அளிப்பார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 71:21). ஆகவே, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. கர்த்தர், இந்தக் கிருபையை இன்று உங்களுக்கு அளிப்பார். வேதம், "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" (சங்கீதம் 34:18,19) என்றும் கூறுகிறது. ஆகவே, நீங்கள் இன்று எப்படியான உபத்திரத்தை எதிர்கொண்டாலும், கர்த்தர் அதிலிருந்து உங்களை மீட்டு விடுவிப்பார். தடைகளை நீக்கிப்போடுகிறவர் தம் ஜனங்களுக்கு முன்பாகச் செல்கிறார் என்று வேதம் கூறுகிறது (மீகா 2:13). தடைகளை அகற்றும் இயேசு உங்களுக்கு முன்பாகச் செல்கிறார். ஆகவே, பயப்படாதிருங்கள். கர்த்தர்தாமே உங்களுக்கு முன்னே சென்று, வழியை உண்டாக்குவார்.
அன்பானவர்களே, இயேசு தாமே ஆழ்ந்த வியாகுலத்தையும் பாடுகளையும் அனுபவித்திருப்பதால் அவரால் உங்கள் வேதனையைப் புரிந்துகொள்ள முடியும். சிலுவைக்குச் செல்லும் முன்பு அவர் எவற்றையெல்லாம் சகித்தார் என்று யோசித்துப் பாருங்கள். கெத்செமனே தோட்டத்தில் இயேசு மிகவும் வியாகுலமடைந்தார். அவரது வேர்வை இரத்தமாக வெளிப்பட்டது. அவர், காட்டிக்கொடுக்கப்படுவதும், பொய்யான குற்றச்சாட்டுகளும், நிராகரிக்கப்படுவதும், அநீதியான தீர்ப்பும் தனக்குக் காத்திருக்கிறது என்பதை அறிந்திருந்தார். "இந்தப் பாத்திரத்தை என்னை விட்டு எடுத்துப்போடும்," என்று அவர் ஜெபித்தார். ஆனாலும், பிதாவின் சித்தத்தை அறிந்து, தம்மை முழுமையாக அர்ப்பணித்து, "என் சித்தமல்ல, உம் சித்தமே நடப்பதாக," என்று கூறினார். நித்திய ஆவியினாலே அவர் பழுதற்ற பலியாக தம்மைத்தாமே அர்ப்பணித்தார் (எபிரெயர் 9:14). பரிசுத்த ஆவியால் பெலப்படுத்தப்பட்டு, இயேசு தைரியமாக சிலுவைக்குச் சென்றார்.
அவரது பாடு அங்கே முடிந்துவிடவில்லை. சிலுவையில் அவர் அதிகமாக வருத்தப்பட்டார். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கூப்பிட்டார். அவர் இந்த வேதனைகளைச் சகித்து, பாவத்தின் வல்லமையிலிருந்து, பாடுகளிலிருந்து, வருத்தத்திலிருந்து நம்மை விடுவித்து, பிதாவின் அன்புக்குள்ளும் ஆதரவுக்குள்ளும் கொண்டு வந்தார். தாம் பலியானதினிமித்தம், அவர் பாடுகளின் வல்லமையை ஜெயித்தார். இயேசு, பாடனுவித்தபோதும், காட்டிக் கொடுக்கப்பட்டபோதும், தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் ஜெபித்தார்.
ராஜாதி ராஜாவாக அவர் மூன்றாம் நாளில் எழுந்திருந்தார். இன்றும் ஜீவிக்கிறார். அவர், விடாய்த்துப்போனதும் பாரமானதுமான உள்ளத்தில், "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, உங்களை பாரத்தை என் கரங்களில் வைத்திடுங்கள். நீங்கள் அநியாயமாய் நடத்தப்பட்டால், மனம் சோர்ந்துபோகாதீர்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் அருளுவேன். பயப்படாதிருங்கள்," என்று கூறுகிறார்.
ஆகவே, பிரியமானவர்களே, கலக்கம், பாடுகள், நிராகரிப்பு, துரோகம் அல்லது எந்த ஏமாற்றமும் உங்களை மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள். வியாகுலப்பட்ட வேளையில் இயேசுவை பெலப்படுத்திய அதே கர்த்தர் உங்களையும் பெலப்படுத்துவார். உங்கள் பாரங்களை அவரிடம் ஒப்படையுங்கள்; அவரது பூரண சித்தத்தை நம்புங்கள். நீங்கள் பாடுகளையும் வெட்கத்தையும் அனுபவித்த அதே இடத்தில் கர்த்தர் உங்களை ஆறுதல்படுத்துவார். அவர் உங்களைச் சீர்ப்படுத்துவார்; கனப்படுத்துவார்; உங்கள் வாழ்வில் மகிமையைக் கொண்டு வருவார். உங்கள் துக்கத்தைச் சந்தோஷமாகவும், உங்கள் போராட்டங்களை சாட்சியாகவும் அவர் மாற்றுவார். கர்த்தர் இன்று உங்களோடிருக்கிறார்; உங்களுக்கு முன்செல்கிறார்; எல்லா இக்கட்டுகளின் வழியாக அவர் ஜெயத்தோடு உங்களை வழிநடத்துகிறார். ஆகவே, தைரியமாயிருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா உபத்திரவத்திலும் என்னோடு இருப்பதற்காகவும், விசாரங்கள் பெருகும்போது என் உள்ளத்தைத் தேற்றுவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் வார்த்தையை நம்புவதற்கும், எல்லா பாரங்களையும் உம் கரங்களில் ஒப்படைப்பதற்கும் எனக்கு உதவி செய்யும். நான் பாடுகளை, நிராகரிப்பை, துரோகத்தை, அநியாயத்தை, ஏமாற்றத்தை சந்திக்கநேரும்போது, "என் சித்தமல்ல; உம் சித்தமே ஆகக்கடவது," என்று கூறும் கிருபையை அளித்திடும். உம் பரிசுத்த ஆவியினால் என்னை பெலப்படுத்தும்; எல்லா உபத்திரவங்களையும் மேற்கொள்ள உதவும். நான் வெட்கத்தையும் துக்கத்தையும் அனுபவித்த இடத்தில் என்னை சீர்ப்படுத்தும். என் உள்ளத்தை உம் சமாதானத்தால் நிரப்பி, உம் நோக்கத்தை நிறைவேற்றும்படி பெலப்படுத்தும். என்னை புண்படுத்தியோரை மன்னிக்கவும், உம் அன்போடு ஆசீர்வதிக்கவும் எனக்கு உதவும். உம் தேறுதல், கனம், மகிமை என் வாழ்வில் வெளிப்படுவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


