பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய தினம், விசேஷித்த நாளாகும். என் அருமை அம்மா சகோதரி ஸ்டெல்லா தினகரனின் பிறந்தநாள். என்னுடைய திருமணம் முடிந்த பிறகு, என்னுடைய சொந்த தாயாரை இழந்தேன். ஆனால், அம்மா சகோதரி ஸ்டெல்லா தினகரன் அந்த இடத்தை நிரப்பினார்கள். ஒரு தாயைப் போல என்னை கரிசனையாய் கவனித்தார்கள். இன்றும் எனக்காக ஜெபித்து தாங்குகிறார்கள். இப்படி ஒரு தாயாரைப் பெற்றிருப்பது எனக்கு சிலாக்கியம். இன்றைக்கு, "நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்" எரேமியா 29:12 என்ற வசனத்தை தியானிப்போம்.

மக்கள், பொதுவாக தாங்கள் பேசுவதை யாராவது கேட்கவேண்டும் என்று வாஞ்சிக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் டிவிட்டர், ஸ்நாப்சாட், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கணக்கு வைத்திருக்கிறார்கள். யாராவது தங்கள் கருத்தைக் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனாலும் உண்மையாக யாராவது கேட்கிறார்களா என்று தெரியாது. ஆனால் தேவ பிள்ளைகளாகிய நாம் அவர் நமக்குச் செவிகொடுக்கவேண்டும் என்று விரும்புகிறோம். தாவீது, "ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக" (சங்கீதம் 130:2)என்று கூப்பிடுகிறான். "கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்" என்று சங்கீதம் 5:1-ல் கூறுகிறான். நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்க தாமதிக்கிறபோது, நாமும் தாவீதைப்போல கூப்பிடுகிறோம். பெரும்பாலும் உலக மக்கள் செய்வதுபோல, உயரதிகாரிகளிடம், அவர்கள் கேட்பார்கள் என்று நம்பி செல்கிறோம். ஆனால், அவர்கள் கேட்காமலிருக்கலாம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்டவர் அல்ல.

2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு இந்த பூமியில் ஊழியம் செய்தபோது, அவரை விசுவாசித்தவர்கள், அடிக்கடி இடைப்பட்டார்கள். 12 ஆண்டுகளாக உதிரப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண், அவர் ஊழியம் செய்ய சென்று கொண்டிருந்தபோது இடைப்பட்டாள். யவீரு என்ற ஜெப ஆலய தலைவனும் இயேசுவுக்கு இடைப்பட்டான். ஆனால், இயேசு ஒருபோதும் அவசரப்படவில்லை. அவர் பொறுமையாக நின்று கவனித்தார். அவர்கள் வீட்டுக்கே சென்று, தொட்டு சுகப்படுத்தினார். அவரிடம் வந்த யாவரும் சுகமடைந்தனர்; அற்புதங்களைப் பெற்றனர். கண் தெரியாத மனுஷன், "ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்," என்று கூப்பிட்டபோது, இயேசுவால் தொடர்ந்து நடக்க இயலவில்லை. அவர் நின்றுவிட்டார். அவர் அந்த கண் தெரியாத மனுஷனை அழைத்து, தொட்டு சுகப்படுத்தினார். இயேசு உங்கள் இருதயத்தை கவனிக்கிறார். உங்கள் மௌனமான உரையாடல்களை கவனிக்கிறார். பலமுறை நானும் தேவனிடம் அவ்வாறு பேசியிருக்கிறேன். கேட்பதற்கு யாருமே இல்லை என்று உணரும்போது, இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர். நான் பேசுகிறேன்," என்று கூறுவேன். என்னால் அவரிடம் பேசாமல் இருக்கமுடியாது. என்னுடைய உறவுப்பெண்ணான ஜைராவுக்கு ஆறு வயதாகிறது. அவள் ஒருமுறை இப்படி ஜெபித்தாள். "ஆண்டவரே, என்னால் பேசுவதை நிறுத்த முடியாது. ஏனென்றால் நீர் கேட்டுக்கொண்டிருக்கிறீர் என்பது எனக்கு தெரியும். ஆனால், மக்களுக்காக நான் நிறுத்தித்தான் ஆகவேண்டும் என்று கூறினாள். அவ்வளவு இனிமையானவள்.

அன்பானவர்களே, தேவனிடம் தொடர்ந்து பேசுங்கள். பரலோகத்தின் கதவை தட்டிக்கொண்டே இருங்கள். தேவன் தாமதப்படுத்துவதுபோல் தெரியும். ஆனாலும், விடாதிருங்கள். ஆவியில் ஜெபம்பண்ணுங்கள் என்று பவுல் கூறுகிறார். உபத்திரவங்கள் வரும்போது, வார்த்தைகள் அமையாதபோது, ஆவியில் ஜெபம்பண்ணுங்கள். தேவனுடைய பாஷையில் ஜெபியுங்கள்; அப்போது கேட்கப்படும். உங்கள் அற்புதம் சமீபித்திருக்கிறது. மனந்தளராதிருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் கூப்பிடும்போதெல்லாம் நீர் கேட்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வேறு யாரும் கேட்காதபோதும், நீர் என் வார்த்தைகளையும், கண்ணீரையும், மௌனமான மொழியையும் கவனிப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். நீர் எனக்கு தயை பாராட்டுவீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் பொறுமையாகக் கேட்டு, வல்லமையாக பதில் அருளுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். பதில் தாமதிக்கிறபோதும் ஒருபோதும் மனந்தளராதிருக்க எனக்கு உதவி செய்யும். ஆவியில் ஜெபிக்கவும், எனக்கான அற்புதம் சமீபித்திருக்கிறது என்று அறிந்துகொள்ளவும் எனக்குக் கற்றுத்தாரும். ஆண்டவரே, எப்போதும் எனக்கு சமீபமாய் இருப்பதற்காக உமக்கு நன்றி. நான் முழுவதுமாக உம்மை நம்புகிறேன். எனக்கு செவிகொடுக்கிறீர் என்பதை அறிந்து உம்மிடம் பேசுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.