அன்பானவர்களே, உங்கள் இருதயத்தில் உள்ள எல்லா விருப்பங்களையும் தம் முன் திடநம்பிக்கையோடு கொண்டு வரலாம் என்று இன்று ஆண்டவர் அன்புடன் நினைவுப்படுத்துகிறார். நீங்கள் அவரது பூரண சித்தத்தின்படி கேட்கும்போது, அவர் உங்கள் ஜெபத்திற்குச் செவிகொடுப்பார்; தம் ஏற்றவேளையில் அவற்றுக்கு பதில் கொடுப்பார் (1 யோவான் 5:14). பலவேளைகளில் நம் எதிர்பார்ப்புகளின்படியே வாழ திட்டமிடுகிறோம். குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்துகொள்ள, படிப்பை முடிப்பதற்கு, வேலையை தேடிக்கொள்வதற்கு அல்லது நம் கனவுகளை சாதிப்பதற்கு விருப்பப்படுகிறோம். ஆனால், தேவனுடைய எண்ணங்கள் நம் விருப்பங்களைக் காட்டிலும் எப்போதும் உயர்ந்தவையாயிருக்கின்றன. அவர் கரங்களில் நம் திட்டங்களை அர்ப்பணிக்கும்போது, அவர் கூடாதவற்றையும் கூட செய்கிறார்.

ஒருவேளை நீங்கள் ஓர் அற்புதத்திற்காக இன்று காத்திருக்கலாம். ஒரு குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருக்கலாம். "மற்றவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறதே, நான் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும்?" என்று துக்கத்தோடிருக்கலாம். மற்றவர்களெல்லாம் களிகூர்ந்திருக்கும்போது, என் ஜெபங்களுக்கு பதில் ஏன் தாமதிக்கிறது என்று திகைக்கலாம். ஆனாலும் ஆண்டவர், "என்னைக் கேள்," என்கிறார். அவர் உங்களை மறக்கவில்லை.

பெதஸ்தா சிறப்பு ஆசீர்வாத கூட்டத்தில் அற்புதமான ஒரு சாட்சியைக் கேட்டோம். ஒரு தம்பதி தங்களுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகி விட்டன என்று கூறினர். மனைவி கருத்தரிக்கும்போதெல்லாம் சில வாரங்களிலேயே கலைந்து விடும் என்று கணவர் கூறினார். பலமுறை இப்படி மனதை உடைக்கும் நிகழ்வுகள் நடந்ததாகக் கூறினர். அவர்கள் மனமுடைந்தனர்; தைரியத்தை இழந்தனர். பலர் இன்று அதே நிலையைக் கடந்து சென்றுகொண்டிருக்கலாம். முழு பிரசவ காலம் வரைக்கும் கரு தங்காமல் ஏமாற்றமடையலாம்; மற்றவர்களின் புண்படுத்தும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கலாம்.

2023ம் ஆண்டு அவர்கள், தேவனுடைய இடைப்படுதலை நாடி பெதஸ்தா ஜெப கோபுரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஜெப வேளையில், மாமாவும் அத்தையும், "அடுத்த ஆண்டு உங்களுக்கு அழகான குழந்தை இருக்கும்," என்று தீர்க்கதரிசனமாக கூறியிருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய அந்த வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டார்கள். சரியாக ஒரு வருடம் கழித்து, பத்து வருடங்கள் காத்திருந்த பின், ஆண்டவர் ஆரோக்கியமான ஆண் குழந்தையைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார். கிட்டத்தட்ட அவர்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்தபிறகு, தேவன், கூடாததாக காணப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்து, அவர்கள் துக்கத்தை நித்திய சந்தோஷமாக மாற்றினார்.

அவ்வாறே ஆண்டவர் இன்றைக்கு உங்களோடு பேசுகிறார். மற்றவர்களின் வாழ்க்கையோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதிருங்கள். உங்கள் இல்வாழ்க்கையை, பிள்ளைகளை, வேலையை அல்லது முன்னேற்றத்தை வேறு யாருடனும் ஒப்பிடாதீர்கள். தேவன், விசேஷித்த ஆசீர்வாதத்தை உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எல்லாவற்றையும் அவர் கரங்களில் ஒப்படையுங்கள்; அவரது வேளையை நம்புங்கள். அந்தக் குடும்பத்திற்கு ஓர் அற்புதத்தைச் செய்த தேவன், அதேபோன்ற அற்புதத்தை உங்களுக்கும் செய்ய வல்லவராயிருக்கிறார். இன்று கூடாததாக காணப்படுவது, தேவனால் கூடாதது எதுவுமில்லையென்பதால் அது, நாளையே உங்கள் சாட்சியாக மாறலாம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பூரண சித்தத்தின்படி, நான் கூப்பிடும்போதெல்லாம் எனக்குச் செவிகொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய எல்லா திட்டங்கள், ஆசைகள், கனவுகளையெல்லாம் உம் வேளையை நம்பி, உம் அன்பின் கரங்களில் ஒப்படைக்க எனக்கு உதவும். ஆண்டவரே, நான் குழந்தையாகிய ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு தம்பதிக்காகவும் ஜெபிக்கிறேன். அவர்கள் கண்ணீரைத் துடையும்; பெற்றோராகும் சந்தோஷத்தை அவர்களுக்கு அளித்திடும். வேலையில், பொருளாதாரத்தில், படிப்பில், குடும்ப வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிற அனைவரையும் பெலப்படுத்தும். கூடாதவை, ஏமாற்றம், பயம் யாவற்றையும் அகற்றிடும். உம் வாக்குத்தத்தங்களுக்காக பொறுமையாக காத்திருக்கும்படி என் உள்ளத்தை விசுவாசத்தால் நிரப்பும். அற்புதங்களைச் செய்யும் உம் வல்லமைக்கும், மாறாத உண்மைக்கும் என் வாழ்க்கை சாட்சியாக அமையவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.