எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, நாம், "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்" (யோவேல் 2:28) என்ற வார்த்தையை தியானிப்போம். அன்பானவர்களே, நீங்கள் தேவ வல்லமையோடு இருந்தால், தேவ ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் நீங்கள் வேறான நபராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை தெய்வீகமானதாக இருக்கும். ஆண்டவராகிய இயேசுதாமே தேவ வல்லமையை பெற்றிருந்தார் (அப்போஸ்தலர் 10:38). ஆகவேதான் அவர் செய்கிற யாவும் வல்லமையுடையதாய் இருந்தது. அவ்வாறே, தேவன் உங்கள் வாழ்க்கையையும் மாற்றுவார்.
பேதுருவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவன், ஆண்டவராலே அவரது சீஷனாக தெரிந்துகொள்ளப்பட்டான்; எப்போதும் அவன் இயேசுவுடனே இருந்தான்; அவரது எல்லா செய்திகளையும் கேட்டான். ஆனாலும், இயேசு பிடிக்கப்பட்டபோது, அவன் வெளியே நின்றான்; மனுஷர்பேரிலான பயம் அவனை நிரப்பியிருந்தது. அவன் இயேசுவை மூன்று முறை மறுதலித்தான் (லூக்கா 22:56-61). இயேசு, மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபோது, தேவனுடைய வல்லமையைக் குறித்தும், ஆண்டவரின் பாதத்தில் காத்திருந்து அதைப் பெற்றுக்கொள்ளும் வழிகள் குறித்தும் சீஷருக்குக் கூறினார். அப்போஸ்தலர் 1ம் அதிகாரம் அதைக் குறித்துக் கூறுகிறது. இயேசுவுடன் இருந்த அனைவரும் ஒருமித்துக் கூடிவந்து, இந்த தெய்வீக அனுபவத்தைப் பெறுவதற்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள் என்று வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 1:14). இயேசுவை மூன்று முறை மறுதலித்த பேதுருவும் அப்போது தேவ வல்லமையைப் பெற்றுக்கொண்டான்.
அவன் தேவ வல்லமையினால் நிரப்பப்பட்டு, பரிசுத்த ஆவியின் பெலத்தோடு, இயேசுவைப்போல் ஊழியம் செய்ய ஆரம்பித்தான். எங்கள் குடும்பத்திலும் நாங்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியின் நிறைவை குறித்து அறியாதிருந்தோம். ஆலயத்திற்குச் செல்வோம். ஆனால், தேவன் தம் வார்த்தையை எப்படி பெற்றுக்கொள்வது? தேவ வல்லமையை எப்படி பெற்றுக்கொள்வது? என்று கற்றுக்கொடுத்ததுடன், எங்கள் ஒவ்வொருவரையும் தம் வல்லமையினால் நிரப்பினார். இதுவரை அவர் தம் மகிமைக்காக எங்களை பயன்படுத்திவருகிறார். அன்பானவர்களே, குடும்பமாய் ஆண்டவருக்கென்று பணி செய்வது மிகவும் அழகாக இருக்கிறது. இன்றைக்கு ஆண்டவர் உங்களை அவ்வண்ணமே ஆசீர்வதிப்பார். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்.
ஜெபம்:
அன்பு ஆண்டவரே, பரிசுத்த ஆவியானவரை என்மேல் ஊற்றுவதாக நீர் கொடுக்கும் வல்லமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் அபிஷேகிக்கப்பட்டவர். ஆகவே, என்னை உம் வல்லமையினாலும் சமுகத்தினாலும் நிரப்பும். என் உள்ளத்திலிருந்து எல்லா பயத்தையும் கலக்கத்தையும் அகற்றி, விசுவாசத்தில் தைரியங்கொள்ளச் செய்திடும். தினமும் உம் பாதத்தில் ஜெபத்தோடு காத்திருக்க எனக்குக் கற்றுத்தாரும். பேதுருவின் வாழ்க்கையை நீர் மாற்றியதுபோல என் வாழ்க்கையையும் மறுரூபப்படுத்தும். ஆண்டவரே, என் வாழ்க்கையையும் குடும்பத்தையும் உம் மகிமைக்காக பயன்படுத்தும். என் வாழ்க்கை, இந்த உலகிற்கு உம் மகத்துவத்தை காட்டுவதாக அமையவேண்டுமென்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


