அன்பானவர்களே, இன்றைக்கு, "ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" (தானியேல் 12:3) என்ற வசனத்தை தியானிப்போம். அநேகவேளைகளில் நாம் ஒருவரை நீதிக்குள் நடத்துவது என்பது அவர்களுக்கு பிரசங்கிப்பது அல்லது வேதத்தைக் குறித்து அவர்களுடன் பேசுவது என்று நினைக்கிறோம். நேரடியாக அவர்களிடம் சென்று, நீதியைக் குறித்துப் பேசுவதே அவர்கள் அதை அறிந்துகொள்ள ஒரே வழி என்று நினைக்கிறோம். ஆனால், அன்பானவர்களே, பலவேளைகளில் மிக எளிதான, அதிக பயனுள்ள வழி, இன்னொருவர் நீதியாய் வாழ்வதைக் கண்டு ஒருவர் நீதி என்றால் என்ன என்று புரிந்துகொள்வதுதான். 'செயல்களே உரக்கப் பேசும்' என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலும் மக்கள் நீதியை, அது இதுதான் என்று கூறப்படுவதைக் காட்டிலும் நீதியாக வாழ்வதன் மூலமாகவே புரிந்துகொள்கிறார்கள். ஒருவர் தேவனுடைய பிள்ளையாக இருப்பதை காண்பதினால், உண்மையாக தன் வாழ்க்கையை நடத்துவதால், ஒருவரை அக்கறையாய் பராமரிப்பதால், அன்றாட வாழ்வில் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்வதால் புரிந்துகொள்கிறார்கள். அதாவது, அன்பானவர்களே, மெய்யான நீதிமானாக / நீதியுள்ள பெண்மணியாக நீங்கள் வாழ்ந்துகாட்ட வேண்டும். இக்கட்டுகளின் மத்தியிலும் சத்தியத்திற்காக நீங்கள் உறுதியாக நிற்கும்போது, மக்கள் உங்கள் மூலமாக நீதியைக் காண்பார்கள். இதன் மூலமாக நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குள் அவர்களை வழிநடத்த முடியும்.

எமி கார்மைக்கேல் என்ற மிஷனெரி அப்படியே செய்தார்கள். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அவர்கள் இந்தியாவில் 55 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அடிமைத்தனத்திற்குள் இருக்கும் இளம் பெண்களை, தங்கள் கௌரவத்தை குலைக்கும் செயல்களை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படும் இளம் பெண்களை மீட்டு பராமரிப்பதே அவர்கள் சேவையாக இருந்தது. அப்படிச் செய்யும்போது அவர்கள் பிடிக்கப்பட்டால், உள்ளூர் அதிகாரம் படைத்தவர்களால் கடும் உபத்திரவத்திற்குள்ளாக நேரிடும் என்று தெரிந்தும் அவர்கள் அஞ்சவில்லை; உறுதியாக நின்றார்கள்; இந்த இளம் பெண்களை பராமரித்தார்கள்; பாதுகாத்து வைத்தார்கள்; அவர்களுக்கு இயேசுவைப் பற்றி கூறினார்கள்; கல்வி போதித்து, நேசித்து, தேவனுடைய பார்வையில் அவர்கள் விலையேறப் பெற்றவர்கள் என்ற சத்தியத்தைப் போதித்தார்கள். அந்தப் பெண்களில் அநேகர் தேவன் தங்களை நேசிக்கிறார் என்ற திடநம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் வளர்ந்தார்கள். இன்றும் அந்த இல்லம் டோனாவூர் ஐக்கியம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இப்போதும் அவர்கள் நூற்றுக்கணக்கான குழந்தைகளை மீட்டு, பாதுகாப்பாக தங்க வைத்து, இயேசுவின் அன்பினால் அவர்களை பெலப்படுத்துகிறார்கள்.

அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையும் செயல்களும் உங்களை நீதிக்கு நேராக வழிநடத்த முடியும். நீங்கள் நட்சத்திரங்களைப்போல என்றைக்கும் பிரகாசிக்க முடியும். எமி கார்மைக்கேலின் பணி இன்றும் தொடர்கிறது. அவ்வாறே, மற்றவர்களை நீதிக்குள் நடத்தும்போது என்றென்றைக்கும் உங்களைப் பிரகாசிக்கப்பண்ணுவார். இயேசுவின் அன்பை பரம்பச் செய்து, உங்களோடு கூட அனைவரும் பிரகாசிப்பார்கள். எவ்வளவு அழகான விஷயம். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையையும் இந்தப் பணிக்கு அர்ப்பணிப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உலகத்திற்கு வெளிச்சமாயிருப்பதற்கு என்னை அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் என்றென்றைக்கும் நட்சத்திரங்களைப்போல பிரகாசிப்பார்கள் என்ற உம் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. இப்போதும் ஆண்டவரே, என் வாழ்க்கை உம் அன்பையும், சத்தியத்தையும், நீதியையும் பிரதிபலிக்க உதவி செய்யும். என் செயல்கள், வார்த்தைகளைக் காட்டிலும் உரக்கப் பேசட்டும். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் சத்தியத்தில் நான் உறுதியாய் நிற்க உதவி செய்யும். என் வாழ்க்கை உம்முடைய பரிசுத்தத்திற்கு சாட்சியாக அமையட்டும். மற்றவர்களை பராமரிக்க என்னை பயன்படுத்தும்; உண்மையாய் நேசிக்கும்படி, உத்தமமாய் நடக்கும்படி, மற்றவர்கள் என்னில் உம்மை காணட்டும், அவர்கள் என் வாழ்க்கையின் மூலம் உம்மிடம் ஈர்க்கப்படுவார்களாக. தகப்பனே, உம்முடைய தெய்வீக ஊழியத்திற்கு இன்றைக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்; என் வாழ்க்கை பிரகாசிக்கிற நட்சத்திரமாக, மற்றவர்களை உம்மிடம் வழிநடத்துவதாக அமையட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.