தேவன், உண்மையுள்ள தம் பிள்ளைகளை மாத்திரமல்ல, அவர்களைப் பின்தொடரும் சந்ததியையும் ஆசீர்வதிக்க பிரியமாயிருக்கிறார். பெற்றோர் நீதியில் நடக்கும்போது, கர்த்தருக்குப் பயப்படும்போது, விசுவாசத்தில் உறுதியாய் இருக்கும்போது, தங்கள் பிள்ளைகள்மேல் தேவ கிருபையென்னும் ஆவிக்குரிய சுதந்தரத்தை விட்டுச்செல்கிறார்கள். கர்த்தர், நம் பிள்ளைகளை தேசத்தில் பெலத்திருக்கப்பண்ணி, தம் சமாதானத்தினால் அவர்களை நிரப்பி, தம் மகிமைக்கென்று செல்வாக்குள்ளவர்களாக நிலைநிறுத்துவார்.

வேதாகமத்தில், பெண்கள் ரூத்தின் மகனைக் குறித்து, "அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது" (ரூத் 4:14) என்று வாழ்த்தினார்கள். இதே ஆசீர்வாதம் இன்று உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்கும். வேதம், "அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்" (சங்கீதம் 112:2) என்று கூறுகிறது. நீங்கள் தேவனுடன் உத்தமமாய் நடப்பதால் உங்கள் பிள்ளைகள் செய்கிற யாவும் வாய்க்கட்டும்.

கர்த்தர், "உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்" (ஏசாயா 54:13) என்றும் வாக்குப்பண்ணுகிறார். இன்றைய உலகில், பல இளைஞர்கள், கலக்கத்துடன், மனச்சோர்வுடன், உறவு முறிவுடன், உணர்வுரீதியான வேதனையுடன் போராடிக்கொண்டுள்ளனர்.

சமீபத்தில், இன்ஸ்டாகிராம் வாயிலாக சந்தித்த ஒரு வாலிபனுடனான உறவில் இருந்து இளம் பெண்ணைக் குறித்த செய்தியை வாசித்தேன். அந்தச் செய்தி என் நெஞ்சை உடைத்தது. அவள் தாயாரும் சகோதரனும், அவள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபனுடனான உறவை விட்டுவிடுமாறு அன்புடன் அறிவுறுத்தினார்கள். அந்த உணர்வுரீதியான வேதனையை தாங்கிக்கொள்ள முடியாமல் அடுத்த நாள் அவள் தன் உயிரையே மாய்த்துக்கொண்டாள். துக்கத்திலிருந்த அந்தத் தாயாரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றது இன்னும் வேதனையைக் கொடுத்தது. இந்தச் சம்பவம் கிறிஸ்து மாத்திரமே கொடுக்கக்கூடிய சமாதானம் இன்றைய தலைமுறையினருக்கு எவ்வளவு தேவை என்பதை நினைவுப்படுத்தியது.
தம் வாக்குத்தத்தத்தில், "உன் பிள்ளைகளெல்லாரும் என்னால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்" என்று தேவன் பதிலளிக்கிறார். இயேசு, அவர்கள் உள்ளங்களை நிரப்பும்போது, நித்திய சமாதானத்தை அளித்து, பெற்றோரைக் கனம்பண்ண கற்றுக்கொடுத்து, தம் வழிகளில் நடத்துவார்.

வேதம், "நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்" (நீதிமொழிகள் 20:7) என்று நினைவுப்படுத்துகிறது. தேவனிடம் ஏறெடுக்கப்படும் எல்லா ஜெபமும், சிந்தப்படும் எல்லா கண்ணீரும், செய்யப்படும் எல்லா தியாகமும் வரும் சந்ததியினருக்கு நித்திய சுதந்தரமாக விளங்கும்.

என் தந்தையார் தேவனுடன் இருக்கும்படி சென்றபின்னர், நானும் தனிப்பட்டவிதத்தில் இந்தச் சத்தியத்தை அனுபவித்திருக்கிறேன். உண்மையான அவருடைய வாழ்க்கை, ஜெபங்கள், தியாகங்கள் என் குடும்பத்திலும் ஊழியத்திலும் பரிபூரண ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தன. இன்றும் அவரது ஆவிக்குரிய பாரம்பரியம் கணக்கற்றோரை ஆசீர்வதிக்கிறது. ஆகவே, ஒருபோதும் மனந்தளராதிருங்கள். தொடர்ந்து உத்தமமாக நடந்திடுங்கள்; தேவன் தம் வேளையில் உங்கள் பிள்ளைகளுக்கான தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்.

வேதம், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அன்புடன் போதிப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று கூறுகிறது (நீதிமொழிகள் 29:17). நாம் உண்மையாக, தேவனை நம்பும்படி பிள்ளைகளை வழிநடத்தினால், நம் விசுவாசம் அவர்களுக்கும் நம் பேரப்பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக அமையும் (2 தீமோத்தேயு 1:5). இந்தக் கிருபையை ஆண்டவர்தாமே உங்களுக்குத் தந்து உங்கள் பிள்ளைகள் தேசத்தில் பலத்திருக்கும்படி செய்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீதியாய் நடக்கவும், உமக்கு முன்பாக கறையற்றிருக்கவும் எனக்கு உதவும். என் பிள்ளைகளும் வரும் சந்ததியினரும் ஆசீர்வதிக்கப்படும்படி என் வாழ்க்கை நித்திய சாட்சியாக விளங்குவதாக. என் பிள்ளைகளை உம் சமாதானத்தினால் நிரப்பும். அவர்கள் மனச்சோர்வடைந்திடாமல், குழம்பிப்போகாமல், தீய உறவுகளுக்குள் சென்றுவிடாமல், ஆபத்தான தாக்கத்துக்கு உள்ளாகிவிடாமல் காத்துக்கொள்ளும். அவர்கள் தேசத்தில் பெலத்திருக்கவும், உம் நாமத்திற்கு மகிமை கொண்டு வரும்படியாக செல்வாக்குள்ளவர்களாக வளரும்படியும் செய்யும். உம் வார்த்தையின்படி அவர்களை அன்பாய், ஒழுக்கத்திற்குள் வழிநடத்த எனக்கு உதவும். அவர்களை வாழ்வு முழுவதும் ஆசீர்வதிக்கும்படி என் ஜெபங்கள், விசுவாசம், கீழ்ப்படிதல் ஆகியவை ஆவிக்குரிய சுதந்தரமாக விளங்குவதாக என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.