"சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக," (1 சாமுவேல் 1:17) என்று வேதம் கூறுகிறது. பிரதான ஆசாரியனான ஏலி, அன்னாள் என்ற பெண்ணிடம் இந்த வார்த்தைகளைக் கூறுகிறான். அன்னாளுக்குப் பிள்ளையில்லாதிருந்தது. அவள் கணவன், அவளை அதிகமாய் நேசித்தான். ஆனால், அவள் கர்ப்பந்தரிக்கவில்லை. அன்னாள், தனியாக தேவனுடைய ஆசரிப்புக்கூடாரத்துக்குள் ஓடி, தேவ சமுகத்தில் தன் இருதயத்தை ஊற்றிவிட்டாள். அவளால் தன் துக்கத்தையும் நிந்தையையும் தாங்க இயலவில்லை. அப்போதுதான் பிரதான ஆசாரியன், "அன்னாளே, நீ சமாதானத்துடன் போ. உன் இருதயத்தை தேவனிடம் ஊற்றிவிட்டாய். தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்காக சமாதானத்துடன் செல்," என்ற வாக்குத்தத்தத்தைக் கூறினான். தேவன், ஜெபத்திற்குப் பதில் அளிக்கிறவராதலால், நீங்கள் தேவ சமாதானத்தை, தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஏலி, "இஸ்ரவேலின் தேவன், நீ அவரிடம் கேட்டதை அருளிச் செய்வாராக," என்று கூறினான்.
இயேசு, "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்," என்றும், "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்." என்றும் கூறியுள்ளார் (யோவான் 14:13,14; 16:24). உங்கள் பரம தகப்பனானவர், நீங்கள் கேட்டுக்கொள்கிற யாவற்றையும் கொடுப்பார். ஆகவே, அன்பானவர்களே, ஆசீர்வாதமாக இருக்கும்படி ஆண்டவர் உங்களை தெரிந்துகொண்டுள்ளார் என்று விசுவாசித்திடுங்கள். அந்த இருதயத்தை அன்னாளுக்குக் கொடுத்தார். தேசத்திற்கு ஆசீர்வாதத்தை உருவாக்கிட தேவன் தன்னை அழைத்திருக்கிறார் என்பதை அவள் விசுவாசித்தாள். ஆகவேதான் அவள் ராஜாக்களை அபிஷேகம் செய்ய சாமுவேல் தீர்க்கதரிசியை இஸ்ரவேல் தேசத்துக்காக பெற்றெடுத்தாள். ஆம், ஏலி, "அன்னாளே, நீ கர்த்தரிடம் எதையெல்லாம் கேட்டுக்கொண்டாயோ, அதை அவர் உனக்கு அருளிச்செய்வார்," என்று கூறினான். தேவனிடம், ஒரு குழந்தையை மட்டுமல்ல; ஒரு தீர்க்கதரிசியை அவள் கேட்டிருப்பாள் என்று நான் நம்புகிறேன். ஆகவேதான் தேவனுடைய தீர்க்கதரிசியை பெற்றெடுத்தாள்.
ஆம், நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசனங்களையும் தேவனுடைய தீர்க்கதரிசிகளையும் கொண்டு வருவீர்கள். இப்போது, இயேசு அழைக்கிறார் அந்தப் பணியைத்தான் செய்து வருகிறது. என் தந்தை சகோ. தினகரனை 2008ம் ஆண்டில் நான் இழந்தபோது, ஆண்டவர், "என் மகனே, இனி ஒரு சகோதரன் தினகரன் அல்ல. இப்பொழுதிலிருந்து நான் உலகத்தில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அந்த வல்லமையில் நடக்கும்படியான கிருபையை உனக்குத் தருவேன். தரிசனங்களைக் காணும் வாலிபர்களை எழுப்பப் போகிறேன். உன் குமாரரும் குமாரத்திகளும், தங்கள் தலைமுறையில், வாழ்க்கையில் முதன்முறையாக என்னை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்," என்று கூறினார். இந்த ஊழியத்தின் மூலம் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். ஏனென்றால், தீர்க்கதரிசனத்தின் ஆவி, இயேசுவைப் பற்றிய சாட்சியாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது (வெளிப்படுத்தல் 19:10). நீதியில் தேவ ராஜ்யத்தை கட்டும் சாமுவேல் தீர்க்கதரிசிகளை எழுப்புவதே இயேசு அழைக்கிறார் ஊழியத்தைக் குறித்து தேவனுடைய திட்டமாயிருக்கிறது. ஏழைக் குழந்தைகளை பராமரிக்கும்படி, மனுக்குலத்தின் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் காணும் தேவ ஜனங்களை உருவாக்கும்படி, தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் எழுப்புவதற்காக, இயேசு அழைக்கிறார், காருண்யா மற்றும் சீஷா பங்காளர்களாக நீங்களும் எங்களுடன் நிற்கிறீர்கள். அன்னாளுக்குப் பதில் அளித்ததுபோல, தேவன் உங்களுக்கும் பதிலளிக்கிறார். நீங்கள் பாக்கியம் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகள் வர்த்திப்பார்கள். நீங்கள் விருத்தியாவீர்கள். "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்," என்று வேதம் கூறுகிறபடி, கர்த்தர் உங்களுக்குத் தருகிறவை யாவற்றையும் அவருக்குத் திரும்ப தருவதாக நீங்கள் உடன்படிக்கை செய்யும்போது, தேவனுடைய கரம் உங்கள்மேல் வரும். தேவனின் அருட்கொடைகளும், பதில்களும் வந்து சேர்வதாக.
ஜெபம்:
அன்பு ஆண்டவரே, என் உள்ளத்தை உம் முன்னே ஊற்றுகிறேன். இன்று எனக்கு உம் சமாதானத்தையும் நிச்சயத்தையும் அளித்தருளும். உம் சித்தத்தின்படியே என் விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுத்தருளும். உம் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேறும்வண்ணம் என் வாழ்விலிருந்து பலனற்ற காரியம் அனைத்தும் விலகிச் செல்வதாக. என்னை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பி, தலைமுறைகளுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


