எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் அறிந்திருக்கிறபடி, இந்த நாள் எனக்கு அருமையான ஒரே மகள் ஏஞ்சலை நான் இழக்கக்கொடுத்த துன்பமான தருணமாகும். இந்த கொடிய இழப்பின் மத்தியிலும், இன்றைக்கு நாம் தியானிக்கிற வசனத்தின்படி, ஆண்டவர் என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார்.

இன்றைக்கு நமக்கு என்ன வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது? "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33). ஆம், அன்பானவர்களே, நீங்கள் தேவனை தேடினால், அவர் எல்லா ஆசீர்வாதங்களையும் கூடுதலாக நமக்குக் கொடுப்பார்.

"ஐயோ, நான் என் கணவரை இழந்துவிட்டேனே... என் மகளை இழந்துவிட்டேனே," என்று அழுது புலம்பாதீர்கள். என்னுடைய எல்லா வேதனை, இழப்பின் மத்தியிலும் நான் இயேசுவை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொண்டேன். நானும் என் குடும்பத்தினரும் இயேசுவின்மேல், அவர்மேல் மாத்திரமே கண்களை வைத்திருக்கக் கற்றுக்கொண்டோம். அவர் எங்களுக்கு அநேக பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறார். "மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்" (1 யோவான் 2:16)என்றும், "சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்" (சங்கீதம் 143:3)என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.

ஆம், பிசாசு கெர்ச்சிக்கிறான்; யாரை விழுங்கலாம் என்று வகை தேடுகிறான். ஆனால், இயேசுவின் இரத்தமானது உங்களைக் கழுவி, சுத்திகரித்து கண்களின் இச்சையிலிருந்து வெளியே கொண்டு வருகிறது. உங்களுக்கு சமாதானம், சந்தோஷம் இல்லையென்றால், சகல ஆசீர்வாதத்தையும் வழங்கும் இயேசுவிடம் வாருங்கள். வேதத்தில் மரியாள், அவளுடைய சகோதரியாகிய மார்த்தாள், லாசரு ஆகியோரை குறித்து வாசிக்கிறோம். மரியாள், தேவனுடைய பிரசன்னத்தை நாடி அவரைப் பற்றிக்கொண்டாள். அதன் மூலமாக நல்ல பங்கை தெரிந்துகொண்டாள் (லூக்கா 10:42). வேதாகமத்தில் ஏராளமானோர் இருளினால் நிறைந்தவர்களாய் இயேசுவிடம் வந்தார்கள். தேவ பிரசன்னமும் தேவனுடைய வார்த்தையும் அவர்களைக் கிட்டிச்சேர்த்தது. எல்லா இருளிலிருந்தும் அவர்கள் உலகத்தின் வெளிச்சத்தினிடத்தில் வந்தார்கள். இப்போதும் எல்லா இருளையும் விட்டு உங்களால் வெளியே வர முடியும். ஆண்டவர், உங்களுக்கு சமாதானம், சந்தோஷம் இவற்றுடன் தம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்களையும் கொடுப்பார்.

ஜெபம்:
அருமையான பரம தகப்பனே, திறந்த இருதயத்துடன், உம்முடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதலாவது தேடி உம்மண்டை வருகிறேன். ஆண்டவரே, துக்கத்தினால், சோதனைகளினால், இருளினால் நிறைந்திருக்கும் இவ்வுலகில் சமாதானத்தின், சந்தோஷத்தின், பூரண ஆசீர்வாதத்தின் காரணராக உம்மையே பார்க்கிறேன். இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினால் என்னை கழுவியருளும். கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை, சத்துரு என்னை உம்முடைய வெளிச்சத்திலிருந்து இழுப்பதற்கு திட்டமிடும் பொல்லாத யோசனைகளினின்று என்னை விடுவித்தருளும். எல்லாவற்றை காட்டிலும் மரியாளைப்போல நல்ல பங்கை தெரிந்துகொள்ள எனக்கு உதவும். என்னுடைய பாதை வேதனையானதாக, தெளிவில்லாததாக இருப்பினும் உம்முடைய வசனத்தைப் பற்றிக்கொண்டு, உம்முடைய சத்தியத்திலே நடக்கும்படி செய்யும். உம்முடைய மகிழ்ச்சியே என் பெலனாக இருக்கட்டும். உம்முடைய சமாதானம் என் இருதயத்தைக் காத்துக்கொள்ளட்டும். உம்முடைய அன்பு, ஆழமான ஐக்கியத்திற்குள்ளாக அனுதினமும் என்னை நடத்தட்டும் என்று இயேசுவின் நாமத்தின் ஜெபிக்கிறேன், ஆமென்.