தேவன், "என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்" (யாத்திராகமம் 33:19) என்று சொல்லுகிறார். இந்த வாக்குத்தத்தம் மோசேக்கு மாத்திரம் உரியதல்ல; அவருடைய பிள்ளைகள் அனைவருக்குமானது. தம்முடைய தயையை அவர் வெறுமனே கடந்துபோக மட்டும் செய்யமாட்டார்; அதை நம்மீது ஊற்றுகிறார். நம் தேவன் நல்லவர். யோசபாத், "தேவன் நல்லவர். அவரது இரக்கங்களுக்கு முடிவில்லை," என்று அறிக்கையிட்டான். எதிரிகள் அவனுக்கு விரோதமாக எழும்பியபோது, அவன் தன் கைகளை உயர்த்தினான்; பாடகர்களை ஆராதனை செய்யும்படி நடத்தினான்; தேவனுடைய தயையை மட்டுமே அறிவித்தான். கர்த்தர் தம் ஜனங்களின் பாடல்களை கனம்பண்ணினார்; அவர்கள் சத்துருக்களை அழித்தார்; அவர்கள் பயத்தை ஜெயமாக மாற்றினார். தேவன் ஏற்கனவே யுத்தத்தை வென்றுவிட்டமையால் யோசபாத் கொள்ளையை சேகரித்து ஐசுவரியங்களை கொண்டு வந்தான். மெய்யாகவே அவரது இரக்கத்திற்கு முடிவில்லை; தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் அவர் பிரியமாயிருக்கிறார்.

"அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை" (எரேமியா 32:40) என்று கர்த்தரே கூறியிருக்கிறார். தயையும் இரக்கமும் செழிப்பும் அவருடைய சுபாவமாகும். அவர் பாவத்தை, பயத்தை, உலகை நம்புவதை விட்டு தம்மிடமாய் திரும்பி, முழுவதுமாக அர்ப்பணிக்கும்படி அழைக்கிறார். நாம், "ஆண்டவரே, உம் சித்தம் ஆகக்கடவது," என்று கூறும்போது, அவருடைய தயை நம்மேல் வருகிறது. அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம், கிருபையின்மேல் கிருபை, தயைக்குமேல் தயை பெறுகிறோம் என்று வேதம் கூறுகிறது (யோவான் 1:16). தம் பிள்ளைகள்மேல் தயையும் இரக்கமும் ஆசீர்வாதமும் கிருபையும் முடிவின்றி பாயவேண்டுமென்பதே தேவனுடைய விருப்பம்.

அவருடைய தயையைக் குறித்த அருமையான சாட்சியை சகோதரி அலோக் சஹா பகிர்ந்துகொண்டுள்ளார்கள். அவர்களுடைய கணவர் இருபதாண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். சம்பாதிப்பவற்றையெல்லாம் வீணாக்கினார். அவர்கள், இரண்டு பிள்ளைகளையும் வளர்ப்பதற்காக சமையல்வேலை செய்தார்கள். வறுமை, கடன், கடன் கொடுத்தவர்களின் துன்புறுத்தல் இவற்றுக்கிடையே வாடகைக்கு இருந்த வீட்டினுள் மழைக்காலத்தில் அடிக்கடி தண்ணீர் உள்ளே வரும். உறவினர்கள் அவர்களைக் கைவிட்டதால், வாழ்க்கையை முடித்துக்கொள்ளுமளவுக்கு அவர்கள் மனமுடைந்தார்கள். அந்தத் தருணத்தில் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள், அவர்களை இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு அழைத்தார்கள். விரைவிலேயே அவர்கள் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கினார்கள். இயேசுவை குறித்து அவர்கள் கேள்விப்பட்டதும் நம்பிக்கையும் சமாதானமும் அவர்கள் உள்ளத்தை நிரப்பியது; தற்கொலை எண்ணம் மறைந்துபோனது. அவர்கள் தன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, ஒழுங்காக ஜெபத்திற்கு வந்தார்கள். 2018ம் ஆண்டு ரூர்கேலாவில் இயேசு அழைக்கிறார் கூட்டம் நடந்தபோது, நான், "ஜெப கோபுரமாகிய கர்த்தருடைய வீட்டைக்  கட்டுங்கள்; அவர் உங்கள் வீட்டைக் கட்டுவார்," என்று கூறினேன். தன்னால் கொடுக்க முடிந்த சிறிய காணிக்கையை ஜெப கோபுரத்தைக் கட்டுவதற்காக அவர்கள் கொடுத்தார்கள். 2020ம் ஆண்டு பெருந்தொற்றின்போது, தேவன் அவர்களுக்கு கொல்கத்தாவில் அழகிய வீட்டைக் கொடுத்தார்; இருபது ஆண்டு அடிமைத்தனத்திற்குப் பிறகு அவர்கள் கணவருக்கு குடியிலிருந்து விடுதலை கொடுத்தார்; அவர்கள் கடன்களையெல்லாம் அடைத்து முடித்தார்; அவர்கள் குடும்பத்தை பூரணமாக ஆசீர்வதித்தார். இன்றைக்கு அவர்கள் மகளுக்குத் திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பேரப்பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். எவ்வளவு ஆச்சரியமான இயேசுவை நாம் சேவிக்கிறோம். அவர்களுக்குச் செய்தவர், உங்களுக்கும் அப்படியே செய்வார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; அவருடைய தயை ஒருபோதும் மாறாது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய தயையைக் குறித்த வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய தயையை மோசேயின் முன்பாக கடந்துபோகச் செய்ததுபோல, இன்றைக்கு என் வாழ்விலும்  நிரம்பி வழியும்படி செய்யும். ஆண்டவரே, என் பயங்கள், போராட்டங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். என்னுடைய பெலவீனத்தை உம் பெலத்தாலும், என் குறைவுகளை உம்முடைய பூரணத்தினாலும், என் அவநம்பிக்கையை நம்பிக்கையாலும் நிரப்பும். உம்முடைய இரக்கம் என்னை தாங்குவதாக; உம்முடைய ஆசீர்வாதங்கள் பாயட்டும்; கிருபையின்மேல் கிருபை உண்டாகட்டும். எனக்காக நீர் யுத்தம்பண்ணுவீர்; என் பயத்தை வெற்றியாக மாற்றுவீர் என்று நம்பி, யோசபாத்தைபோல குரலை உயர்த்தி உம்மை ஆராதிக்க எனக்குக் கற்றுத்தாரும். உம்முடைய நித்திய தயைக்கு என் வாழ்க்கை சாட்சியாக விளங்கவும், எனக்கு நன்மை செய்வதை ஒருபோதும் நீர் நிறுத்தமாட்டீர் என்ற சத்தியத்தில் நான் இளைப்பாறவும் உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.