அன்பானவரே, இன்றே இரட்சணிய நாள். ஆகவேதான் வேதம் இரட்சிப்பு மிகப்பெரிய ஈவு என்று கூறுகிறது. இன்றைய வாக்குத்தத்தம், "இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்" (ஏசாயா 12:2) என்று கூறுகிறது. இரட்சிப்பு என்பதற்கு அழிவிலிருந்து காக்கப்படுதல் என்று அர்த்தம். ஆனால் மிகப்பெரிய அழிவு பாவத்தினால் வருகிறது. பாவத்தின் சம்பளம் மரணம். பாவம், ஆத்துமாவை, ஆவியை, உறவுகளை கொல்லுகிறது. மிக மோசமாக, அது ஜீவனை தரும் இயேசுவிடமுள்ள உறவை துண்டிக்கிறது. மரணம் கொடியது; பாவம் கொடியது; ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்; இயேசு நம்மை இரட்சிக்க காத்திருக்கிறார். தகப்பனிடமிருந்து சென்று பணத்தை பாவத்தில் அழித்துப்போட்டு, பன்றிகள் மத்தியில் அநாதைபோல வாழ்ந்த மகனை குறித்து வேதத்தில் வாசிக்கிறோம் (லூக்கா 15ம் அதிகாரம்). தன் தகப்பனுடைய ஊழியக்காரர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பதை உணர்ந்த அவன், மனந்திரும்பிய இருதயத்துடன் வந்தான். அவன் மெலிந்துபோய், அழுக்காக, வெட்கப்பட்டு, வெறுங்காலுடன், உடைந்துபோயிருந்தாலும் தகப்பன் ஓடிச்சென்று அவனை கட்டியணைத்து, முத்தமிட்டு, "என் மகன் மரித்தான்; இப்போது உயிர்த்தான்," என்று கூறினார். மகன், தன் தவற்றை அறிக்கை செய்து, மன்னிக்கக் கோரினான். அதுவே மெய்யாக உயிர்த்தெழுவதாகும்.
நாம் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, தேவனை நோக்கி, "தகப்பனே, நான் பாவம் செய்தேன். என்னை மன்னியும். என்னை மறுபடியும் உம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்," என்று கேட்கும்போது, பரம தகப்பன் நம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு, எல்லாவற்றையும் திரும்ப தருகிறார். வீடு திரும்பிய பாவியைக் குறித்து பரலோகமும் தேவதூதர்களும் மகிழ்கிறார்கள். தேவனே உங்களை இரட்சிக்கிறவர். ஆகவே, அவரை நம்புங்கள்; பயப்படாதிருங்கள். அவர் ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதற்கு அல்ல; மன்னிக்கிறதற்கு காத்திருக்கிறார். மனந்திரும்புங்கள். துன்மார்க்கத்தை விட்டுவிடுங்கள். இயேசுவிடம் வாருங்கள். உங்களுக்கு உதவும்படி அவரிடம் கேளுங்கள். அவர் உங்களை இரட்சிப்பார்; மாற்றுவார்; மறுரூபமாக்குவார்; ஆசீர்வாதங்களினால் மறுபடியும் அலங்கரிப்பார். அவர் உங்களை வேலைக்காரனாக பக்கத்தில் ஒதுக்கிவைக்காமல், தம்முடைய அன்பின் பிள்ளையாக அணைத்துக்கொள்வார்.
இரட்சிப்பின் மாண்பை உணர்த்தும்வண்ணம் பூனாவை சேர்ந்த ஹர்ஷ் மோசஸ் மதாங்கரின் சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். அவர் தேவ பயத்தில் வளர்க்கப்பட்டார். ஞாயிறுபள்ளியின் பாடகர் குழுவில் இருந்தார். இளைஞனாக கிராம ஊழியத்திலும் ஈடுபட்டார். ஆனால் இளம்பருவத்தில் ஹர்ஷ் வழிவிலகிப்போனார். ஜெபிப்பதை நிறுத்தினார். ஆலயத்தை அசட்டை பண்ணினார். மது அருந்த தொடங்கினார். போதை மருந்தை பயன்படுத்தவும், புகை பிடிக்கவும் ஆரம்பித்தார். அவரது முரட்டாட்டம் வீட்டில் சச்சரவை ஏற்படுத்தியது. பெற்றோருடன் சண்டையிட்டார். அவரது தாயார் உபவாசித்து ஊக்கமாக அவரது ஆத்துமாவுக்காக ஜெபித்தார்கள். ஒரு மறுவாழ்வு மையத்தில் நேரம் செலவழித்தாலும் எதுவும் மாறவில்லை. பாவத்தின் ஆழத்தில் விழுந்தார்; உலக இன்பங்களின் பின்னே சென்றார். 2023ம் ஆண்டு நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பட்டாசு அவர் முகத்தில் வெடித்தது. அவர் தீவிர காயமுற்று, பார்வையிழந்தவராய், இரத்தம் கொட்டிய நிலையில், சுயநினைவற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்கள் கழித்து, மருத்துவர்கள் அவருடைய இடக்கண்ணை அகற்றவேண்டும் என்று கூறினார்கள். மனமுடைந்த அவரது தாயார் ஜெப உதவியை நாடினார்கள். ஹர்ஷின் சகோதரி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள். நான் ஜெபத்துடன் பதில் அனுப்பினேன். ஜெப வீரர்களும் அவருக்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" என்ற வாக்குத்தத்த வசனமும் அனுப்பப்பட்டது. அந்த வார்த்தைகள் அவர் உள்ளத்தை குத்தின. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஹர்ஷ், தேவனை நோக்கி, "ஆண்டவரே, என்னை மன்னியும். நான் மனந்திரும்புகிறேன். என்னை சுகமாக்கும்," என்று கதறினார். அவரது வேதனையின் ஜெபத்திற்கு தேவன் செவிகொடுத்தார். அந்த தருணத்திலிருந்து காரியங்கள் மேம்பட தொடங்கின. மருத்துவர்கள் அவரது உடல்நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். தன் தாயாரிடம் கண்ணீருடன், "நான் பார்வையை இழந்தாலும், இயேசுவை விடமாட்டேன்," என்று கூறினார். ஹரீஷின் பாட்டி, உடனே இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர் திட்டத்தில் அவரை இணைத்தார்கள். தேவன் அற்புதம் செய்தார். அவரது இடக்கண் காப்பாற்றப்பட்டது. பார்வை முற்றிலும் திரும்பியது. 40 நாட்களுக்குள்ளாக ஹர்ஷ் முழுவதும் குணமடைந்தார். பெரிதான அற்புதம் என்னவெனில், அவரது பார்வை திரும்ப கிடைத்தது மட்டுமல்ல, அவரது வாழ்க்கை மறுரூபமானதும் ஆகும். பழைய நண்பர்கள் அவரை கைவிட்டாலும், இயேசு அவருக்கு சிறந்த நண்பரானார். 2024ம் ஆண்டு ரூத் என்ற கர்த்தருக்குப் பயந்த பெண்ணை அவர் திருமணம் செய்தார். இருவரும் ஆண்டவராகிய இயேசுவை பின்பற்றுவதோடு அவருக்கு உண்மையாய் ஊழியமும் செய்கிறார்கள். சரீரத்தை சுகப்படுத்துவதுடன் ஆத்துமாவையும் இரட்சிக்கும் இயேசு எவ்வளவு பெரிய இரட்சகர். அன்பானவரே, இன்றைக்கு உங்கள் வாழ்க்கையை அவருக்குக் கொடுப்பீர்களா? அவர் எல்லாவற்றையும் புதிதாக்குவார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, இயேசு கிறிஸ்து மூலமாக நீர் அருளும் இரட்சிப்பு என்னும் ஈவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என் பாவங்களை உம்மிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை கேட்கிறேன். இளைய குமாரனை அவன் தகப்பன் அணைத்துக்கொண்டதுபோல, நீர் என்னை இன்றைக்கு அணைத்துக்கொள்ளவேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். என்னை கழுவும்; சீர்ப்படுத்தும்; உம்முடைய அன்பினால் நிரப்பும். பாவத்தை விட்டுவிட்டு திரும்பவும், உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்துடன் செல்லவும் உதவி புரியும். என்னை உம் வேலைக்காரனாக அல்லாமல் அன்பான பிள்ளையாக ஏற்றுக்கொள்வதற்கு நன்றி. உம்மை முழுவதுமாக நம்புகிறேன். நான் பயப்படமாட்டேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.