அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதிலும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் இணைந்து, "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்" (யோவான் 6:35) என்ற வார்த்தையை தியானிப்போம். சிப்ஸ் ஒன்றுக்கான (Lay's chips) விளம்பரத்தில், "ஒரே ஒரு சிப்ஸை மட்டும் யாராலும் சாப்பிட முடியாது," என்று போடுவார்கள். மக்கள், அதை ஒன்றன்பின் ஒன்றாக சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும், அவர்கள் பசி ஒருபோதும் உண்மையாய் ஆறிவிடாது. உலகப் பிரகாரமான பொருட்களை நாம் சேர்க்கும்போதும் அப்படியே ஆகும். நாம் பணத்தை துரத்தினோமானால், எவ்வளவு பெரிய தொகையும் நம் உள்ளான வேட்கையை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது; மேலும் மேலும் நம் ஆசையை தூண்டிக்கொண்டே இருக்கும். உலகம் தரும் இன்பத்தை நாம் தேடினால், அது ஒருபோதும் நம்மை நிறைவு செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகூட, அதன்பேரில் பேராசை கொண்டிருந்தால், நம் வயிற்றை ஒருபோதும் முழுவதும் நிறைத்திடாது. சிலர், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்; உடலுக்கு இன்பம் என்பதுபோல் வயிற்றை நிறைப்பதற்கு முயற்சி செய்வார்கள்; ஆனாலும் மேலும் பசியோடுதான் இருப்பார்கள்.

13 வயதில் ஆண்டவர் என்னை தம் பரிசுத்த ஆவியினால் நிறைத்தார். உலகத்தில் எந்த ஒன்றாலும் நிரப்ப முடியாத அளவுக்கு என் இருதயம் நிறைந்தது. சிறுவயதிலிருந்தே நான் பரிசுத்த ஆவியை வாஞ்சித்து ஜெபித்துக்கொண்டிருந்தேன். என் தந்தையின் கூட்டம் ஒன்றில், அவர் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் என்னை சந்தித்தார்; தம் ஆவியினால் நிரப்பினார். என் உள்ளத்தில் தேவ சமுகத்தில் மூழ்கி, சொல்லிமுடியாத சந்தோஷத்தால் நிறைந்தேன். அதன் பிறகு, அடுத்த மூன்று நாட்கள், எதையும் சாப்பிடவோ, அருந்தவோ எனக்கு விருப்பம் எழவில்லை. பரிசுத்த ஆவியானவர் எனக்குள் பொங்கியெழுந்து, அதன் முன்னர் ஒருபோதும் அனுபவித்தறியாத சந்தோஷமான சமுகத்தை அருளினார். இந்நாள் வரைக்கும், எண்ணிப்பார்க்க இயலாத வகையில் அந்த பிரசன்னத்தை அனுபவித்து மகிழ்கிறேன்; எப்போதும் அது என்னை திருப்திப்படுத்துகிறது.

ஆகவே, இன்றிலிருந்து தேவன் அனுதினமும் தம் வார்த்தையை பரிசுத்த ஆவியினால் உங்களுக்குப் போதிப்பார் என்று கூறுகிறேன். வேதாகமத்திலிருந்து வார்த்தை உங்கள் ஆத்துமாவை நிறைக்கும்; உங்கள் தீவிர பசியை ஆற்றும். இயேசு, "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்," என்று கூறினார். ஆகவே, தினமும் காலையில் தேவனிடமிருந்து இந்த வார்த்தையைப் பெறுங்கள். இன்றிலிருந்து தேவன் தம்மிடமிருந்து மாத்திரமே வரும் மெய்யான திருப்தியை தந்தருளுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் தீவிர பசியை திருப்தியாக்கும் ஜீவ அப்பமாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தினமும் காலையில் உம் வார்த்தையால் நிரப்பப்படும்படி வாஞ்சித்து உம்மிடம் வருகிறேன். உம் வசனத்தை நான் வாசிக்கும்போது, ஜீவனை அளிக்கும் வாக்குத்தத்தத்தை நான் பெற்றுக்கொள்ளும்படி பரிசுத்த ஆவியினால் எனக்குக் கற்பித்தருளும். உம் சமுகத்தாலும், சொல்லிமுடியாத சந்தோஷத்தாலும் என் உள்ளத்தை நிரப்பிடும்; உம்மைப்போல இந்த உலகில் ஒன்றும் என்னை திருப்திப்படுத்த முடியாது. உம் வார்த்தையானது பயத்தை ஓட்டி, என் விசுவாசத்தை பெலப்படுத்தட்டும்; எனக்கு நம்பிக்கையை அளிக்கட்டும். ஆண்டவரே, அனுதினமும் உம் வார்த்தையை நிறைவேற்றும்படி என்னை பெலப்படுத்தும். என்னை வழிநடத்தி, நிரப்பி, உம் அன்பில் வேரூன்றியிருக்கச் செய்யும். ஆண்டவரே, பரிசுத்த ஆவியினால் என்னை எப்போதும் சந்தித்து, மெய்யான திருப்தியை அருளுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.