அன்பானவர்களே, இன்று, "பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்" (யோசுவா 1:6) என்ற வசனத்தை தியானிப்போம். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் தங்கள் சுதந்தரத்தை பெற்றுக்கொள்ள இருந்தார்கள். யோசுவா அவர்களை வழிநடத்த வேண்டியதிருந்தது. தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்படி  அவர்களை பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு அழைத்து வந்தார். தங்கள் தேசத்தை சுதந்தரிப்பதற்கு அவர்கள் விரோதிகளுக்கு எதிராய் போரிடவேண்டியதிருந்தது. வலுவானவர்கள் ஏற்கனவே அந்த தேசத்தில் வசித்து வந்தார்கள். இஸ்ரவேலர் அவர்களைக் குறித்து பயந்திருக்கக்கூடும். அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள நேரிட்டது. இஸ்ரவேலர் அதிகமாய் பயப்பட்டபடியினால், யோசுவாவும் அசைக்கப்பட்டிருக்கலாம். பயம் அவனைப் பிடித்திருக்கலாம். ஐந்தாம் வசனத்தில், கர்த்தர் யோசுவாவிடம், "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று கூறினார்.

மோசே மக்களுக்கு ஊழியம் செய்தபோதெல்லாம் யோசுவா அவனோடு இருந்தான். ஊழியத்தின் விவரங்கள் அவனுக்கு பழக்கமாகியிருந்தன. ஆகவே, கர்த்தர் தாம் மோசேயுடன் இருந்ததுபோல் அவனை பெலப்படுத்தவேண்டியதிருந்தது. மோசேயின்மேல் இருந்த கிருபை யோசுவாமேல் வந்தது. தேவனுடைய மனுஷனுக்கோ, மனுஷிக்கோ சேவை செய்வதால் வரும் ஆசீர்வாதம் இதுவாகும். கர்த்தர், இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதற்கு கிருபையாக யோசுவாவை தெரிந்துகொண்டார். ஆகவேதான் கர்த்தர் அவனிடம் மீண்டும் மீண்டும், "பலங்கொண்டு திடமனதாயிரு" என்று பேசினார். "பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்," (யோசுவா 1:9) என்றும் அவனிடம் கூறினார். தேவனுடைய இந்தக் கட்டளையைக் கேட்டபிறகு யோசுவாவுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கும்! தேவ பிரசன்னத்திலிருந்து தைரியம் பாய்ந்து வருகிறது. தைரியமே தலைமையேற்று நடத்துவதற்கான அடிப்படையாகும். தலைமையேற்று நடத்தும் நாங்கள் எப்போதும் தேவ பிரசன்னத்தில் இருக்கவேண்டும். அதை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எங்கு சென்றாலும், எதைச் செய்தாலும் இயேசுவின் குணத்தைக் காண்பிக்கவேண்டும். தேவனுடைய வார்த்தையின் மூலம் மாத்திரமே இது வரும். எவ்வளவு அதிகமாக அவரது வார்த்தையை வாசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவரது பிரசன்னத்தை பெற்றுக்கொள்வோம். தேவனிடம் எப்படி சேருவது என்று மக்கள் கேட்பார்கள். அன்பானவர்களே, அதற்கு இதுவே  ஒரே வழியாகும்.

யோசுவா தேவனுடைய வார்த்தையை சார்ந்திருந்தான். தேவன், அவன் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து தொடர்ந்து அவனிடம் பேசிக்கொண்டே இருந்தார். "என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக" (யோசுவா 1:7) என்று கூறினார். என் கணவரின் தகப்பனாகிய மறைந்த சகோ. தினகரன், என் தம்பி ஆனந்துக்கு அறிவுரை கூறுவார். அவர், அவனை 'குட்டிப்பையா' என்றே அழைப்பார். அவர், "ஆனந்த், நீ தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொள். அவரது வார்த்தையை வாசிக்காமல் வீட்டை விட்டுச் செல்லாதே. நீ தனியாய் இருப்பதுபோல் உணரலாம். ஆனால், நீ அவருடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டால், அவர் உன்னை அழகாக வழிநடத்துவார். நீ வெற்றியாய் வாழ்வாய்," என்று கூறுவார். மக்கள் தங்கள் வேதாகமத்தில் எழுதும்படி என் தகப்பனிடம் கொடுக்கும்போதெல்லாம், அவர், 'நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக' என்ற ஒரே வசனத்தை அடிக்கடி எழுதுவதைப் பார்த்திருக்கிறேன்.  அன்பானவர்களே, அப்படிச் செய்தால் தேவ பிரசன்னம் உங்கள்மேல் வரும். அப்போது நீங்கள் சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பீர்கள். அதைத்தான் வேதம், "நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்" (நீதிமொழிகள் 28:1) என்று கூறுகிறது.

ஜெபம்:
பரம தகப்பனே, நான் செல்லுமிடங்களிலெல்லாம் என்னோடு இருப்பதாக நீர் வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயம் என் உள்ளத்தைப் பிடிக்க முயற்சிக்கும்போது, உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பதற்கு எனக்கு நினைவுப்படுத்தும். உம் சமுகத்தால் என்னை சூழ்ந்துகொண்டு, நான் உம் வார்த்தையை விட்டு வலப்புறமாவது இடப்புறமாவது விலகாமல் இருக்க உதவி செய்யும். அனுதினமும் உம் வாக்குத்தத்தங்களைப் பற்றி கொள்ள எனக்குக் கற்பித்தருளும். உம் வாக்குத்தத்தங்களை அனுதினமும் பற்றிக்கொள்ள எனக்குக் கற்றுத்தாரும். நான் நம்பிக்கையற்றவனா(ளா)ய், தனிமையாய் உணரும் தருணங்களிலும் உம் அன்பின் கரத்தினால் என்னை வழிநடத்தும். வேதாகமத்தில் நீர் யோசுவாவை பெலப்படுத்தியதுபோல உம் கிருபை என்னை பெலப்படுத்தட்டும். ஆண்டவரே, என்னை நீதிமானாக்கி, சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.