அன்பானவர்களே, இன்று தேவன் உங்களுக்கு சிறந்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். அவரே நமக்கு சிறந்ததைத் தருகிறவர். சங்கீதம் 149:4-ஆம் வசனத்தில், தேவன் என்ன வாக்களிக்கிறார் என்று பார்ப்போம். "கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்." என்பதே. சாந்தகுணத்தால் மாத்திரமே பிறருக்கு நம்மை வெளிப்படுத்த முடியும். தேவன் சாந்தகுணமுள்ளவர்கள்மேல் பிரியமாய் இருக்கிறார். பெருமையுள்ளவர்களை அவர் வெறுக்கிறார். அப்படிப்பட்டவர்களோடு அவர் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புவதுமில்லை, ஏனென்றால், பெருமையின் குணம் தேவனுடைய குணம் அல்ல. எல்லா சூழ்நிலைகளிலும் சாந்தகுணத்தோடும், பொறுமையோடும், தங்கள் நாவையும், செயல்களையும் கட்டுப்படுத்துகிறவர்கள் இவ்வுலகத்தை பொறுத்தவரை தோற்று போனவர்களாக இருக்கலாம். நம் கோபத்தை வெளிக்காட்டாமல், சாந்தமாக இருப்பது ஓர் வாக்குவாதத்தில் நாம் தோற்றதுபோல இருக்கலாம். ஆனால், தேவனுடைய பார்வையில் அதுவே உண்மையான ஜெயம்.
என் ஊழிய பயணத்தின்போது நடந்த ஓர் நிகழ்வை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஊழியத்திற்காக ஒரு பட்டணத்திற்கு பிரயாணமாய் போகும்போது, பாதுகாப்பு சோதனைக்காக விமான நிலையத்தில் காத்துகொண்டிருந்தேன். அப்போது எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் ஆய்விற்காக நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வைத்துக்கொண்டிருந்தோம். நான் எனது பொருட்களை வைத்துவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவர் தனது உடைமைகளை எங்கு வைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அநேகர், தாமதமாக வந்தாலும் முண்டியடித்து வந்து, வரிசையில் அவரை முந்திக்கொண்டு தங்கள் உடைமைகளை வைத்தார்கள். அந்த மனிதர் என்ன செய்வார் என்று நான் கவனித்தேன்.
ஆச்சரியப்படும் வகையில், அந்த மனிதர், கோபப்படாமல், ஒரு வார்த்தையும் பேசாமல் மிகுந்த பொருமையுடன் நின்றுகொண்டிருந்தார். "நான் அல்லவா முதலில் வந்தேன், நீங்கள் எப்படி எனக்கு முன்னாக செல்லலாம்?" என்று அவர் கேள்வியெழுப்பவுமில்லை. ஆனால், அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் இந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார். திடீரென அந்த பாதுகாவலர் முன்பாக வந்து, மற்ற அனைவருடைய உடைமைகளையும் தடுத்து நிறுத்தி, இந்த நபருடைய உடைமைகளை தாமே எடுத்து வந்து முன்பாக வைத்தார். பின்பு அந்த பாதுகாவலர், மற்ற அனைவரையும் பின்னால் போகும்படி கட்டளையிட்டு, இந்த நபரை வரிசையில் முதலாவதாக நிற்கும்படி செய்தார். ஆம், நண்பர்களே, சாந்தகுணமுள்ளவர்களை நம் தேவன் வெற்றியால் அலங்கரிப்பார். நாம் எல்லா சூழ்நிலையையும் எவ்வாறு சாந்தமாக கையாளுகிறோம் என்பதில் தேவன் கண்ணோக்கமாயிருக்கிறார். நமக்கு ஜெயத்தை வெகுமதியாக அளிப்பார்.
ஜெபம்:
அன்பின் தேவனே, உம்முடைய ஜனங்கள்மேல் நீர் பிரியமாய் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். சாந்தகுணத்தின் மூலம் கிடைக்கும் ஜெயத்தால் என்னை முடிசூட்டுவீராக. எல்லா சூழ்நிலையையும் நான் பொறுமையுடனும், தாழ்மையுடனும் கையாள எனக்கு உதவி செய்யும். என் நாவையும், என் செயல்களையும் கட்டுப்படுத்த எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கையும், என் குணாதிசியங்களும் உம்மை பிரதிபலிப்பதாக இருக்கட்டும். என்னிடத்திலுள்ள எல்லா அகந்தையையும், பெருமையையும் அகற்றும். நான் தாழ்மையாக, சாந்தமாக நடந்துகொள்ள என்னை ஒப்புவிக்கும் இந்த வேளையிலே, உமது தயவும், உம்முடைய ஆசீர்வாதங்களும் என்னை பின்தொடர கிருபை செய்யும். என் வாழ்வின் எல்லா காரியங்களிலும் நீர் என்னில் பிரியப்படுவீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.