எனக்கு அருமையானவர்களே, உங்களுக்கு விரோதமாக எழும்பும் சத்துருக்களையெல்லாம் நீங்கள் மேற்கொள்ளவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். "ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (நீதிமொழிகள் 16:7) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். இது ஓர் இரகசியம்! ஜெயம், மனுஷ பெலத்தினாலோ, ஞானத்தினாலோ, செல்வாக்கினாலோ வருவதில்லை; மாறாக, வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்து, எல்லா வழிகளிலும் அவருக்குப் பிரியமாயிருக்கவேண்டுமென்று முயற்சி செய்யும்போது வரும்.
ஈசாக்கின் வாழ்க்கையில் இந்தச் சத்தியத்தை நாம் காண்கிறோம். எங்கே தங்கவேண்டும், எங்கே விதைக்கவேண்டும், எப்படி வாழவேண்டும் என்று தேவன் அவனுக்குக் கட்டளைக் கொடுத்தார். ஈசாக்கு, கர்த்தருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தான்; எல்லா தேவைகளுக்கு அவரையே நம்பினான். அவன் தண்ணீருக்காகவும், அறுவடைக்காகவும், பாதுகாப்புக்காகவும் தேவனை சார்ந்திருந்தான். பெலிஸ்தர் அவன்மேல் பொறாமை கொண்டாலும், அவன் துரவுகளை தூர்த்துப்போட்டாலும், அவன் முன்னேற்றத்தை எதிர்த்தாலும், அவர்களால் தேவனுடைய ஆசீர்வாதங்களை தடுக்க இயலவில்லை. ஈசாக்கு எவ்வளவு அதிகமாக தேவனை நம்பினானோ, அந்த அளவு அதிகமாக செழிப்படைந்தான். தேவனுடைய கரம் அவன்மேல் இருப்பதை அவன் சத்துருக்கள் ஒப்புக்கொண்டு, சமாதானம் பண்ணிக்கொள்வதற்காக வந்தனர். விரோதம் சாதிக்க முடியாததை, தேவ தயவு சாதித்தது. அவ்வண்ணமே, நீங்கள் தேவனுடைய வழிநடத்துதலை உண்மையாய் பின்தொடரும்போது, தேவன் உங்களுக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் உங்களைக் குறித்துக் கொண்டிருக்கும் நோக்கத்தையும் எந்தச் சத்துருவாலும் நிரந்தரமாக தடுக்க முடியாது.
விசுவாசிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சத்துரு, பக்தியின் பகையாகும். மாம்சீக மனம் தேவனுக்கு விரோதமான பகையாக இருக்கிறது என்றும், அது தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக எப்போதும் மக்களை இழுத்துக்கொண்டிருக்கிறது என்றும் வேதம் கூறுகிறது (ரோமர் 8:7). உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்றும் வேதம் எச்சரிக்கிறது (யாக்கோபு 4:4). கிறிஸ்துவை அறியும் முன்பு அநேகர் பாவ இச்சைகளோடு வாழ்ந்து, தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருப்பர். ஆனாலும், பரிசுத்த ஆவியின் கிரியையினால், தேவன் இருதயங்களையும் சிந்தைகளையும் மறுரூபப்படுத்துகிறார். அவரை அனுதினமும் தேடி, பரிசுத்தத்தில் நடப்பதற்கான கிருபையை தரும்படி கேட்கும்போது, அவர் பாவ பழக்கவழக்கங்களின்மேலும், உலக, மாம்சீக இச்சைகளின்மேலும் வெற்றியை தருகிறார். நாம் கிறிஸ்துவை முழுமையாக சரணடையும்போது, பக்தியின்மேலான பகை, வலிமையிழந்து போகும்.
கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞரைக் குறித்தும் வேதம் உரைக்கிறது. தேவனுக்குரியவற்றைக் காட்டிலும் பூமிக்குரிய ஆசைகளையும், சுயநல நோக்கத்தையும் கொண்டிருப்போரின் மனங்களை அது விவரிக்கிறது (பிலிப்பியர் 3:18). மாறாக, சிலுவையின் மெய்யான செய்தி, தேவ அன்பை, தியாகத்தை, மன்னிப்பை, மீட்பை வெளிப்படுத்தும். தமக்கு முன்பாக தாழ்மையாயிருந்து, மற்றவர்களை மன்னிக்கிறவர்களை, தேவையோடு இருக்கிறவர்களுக்கு உதவுகிறவர்களை இயேசு ஆசீர்வதிக்கிறார். உலகம், கிறிஸ்துவின் தியாகத்தின் வல்லமை அறியாதிருக்கலாம்; ஆனால், விசுவாசிகள், இயேசு சிலுவையில் செய்து முடித்த கிரியையிலிருந்தே ஆவிக்குரிய ஆசீர்வாதங்களெல்லாம் வருகின்றன என்பதை விசுவாசிகள் அனைவரும் அறிந்திருப்பர். அவரது தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவரது மாதிரியின்படி வாழும்போது, எல்லா எதிர்ப்புகளையும் மேற்கொள்ளவும், மற்றவர்கள் முன்பு தம் குணாதிசயத்தை வெளிப்படுத்தும்படி தேவனே நம்மை பெலப்படுத்துவார்.
விசுவாசிகள் அடிக்கடி சந்திக்கும் இன்னொரு சத்துரு, தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு எதிர்ப்பு ஆகும். யூதாஸ் காரியோத்து காட்டிக்கொடுத்தன் வாயிலாக இயேசுவின் ஊழியத்தைத் தடுக்க முயற்சித்தான். சாத்தானால் தூண்டப்பட்டு அவன் ஆண்டவரைக் காட்டிக்கொடுத்தான். காட்டிக்கொடுக்கப்பட்ட பிறகும் தேவ நோக்கம் தோற்கடிக்கப்படவில்லை. இயேசு, விருப்பத்துடன் சிலுவைக்குச் சென்றார்; பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார்; உலக மக்களின் பாவங்களுக்காக மரித்தார்; வெற்றியோடு மறுபடியும் எழுந்தார். தேவனுடைய திட்டத்தை யூதாஸால் தடுக்க இயலவில்லை. அதேபோன்று உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளும், எதிர்க்கும், நம்பிக்கைத் துரோகம் செய்யும் மக்கள் இருக்கலாம். தேவன் உங்களுக்கு செய்யும்படி ஒன்றை கொடுத்துவிட்டால், அவரது நோக்கம் நிறைவேறுவதை எந்த மனுஷனாலும், மனுஷியாலும் தடுக்க முடியாது. இயேசுவை தாங்கிய கர்த்தர், உங்களையும் தாங்குவார்; அவர் நினைத்தவை உங்கள் வாழ்வில் நிறைவேறும்படி செய்வார்.
ஆகவே, எதிர்ப்பை, குறைசொல்லுதலை, துரோகத்தைக் கண்டு அதைரியமடைந்துவிடாதீர்கள். கீழ்ப்படிதலுடன், தேவனுடைய வேளையை நம்பி, அவருடைய அழைப்புக்கு தொடர்ந்து உண்மையாயிருங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா சத்துருக்களைக் காட்டிலும் ஆண்டவர் பெரியவராயிருக்கிறார். பக்தியின் பகையை மேற்கொள்ளும்படி அவர் உங்களைப் பெலப்படுத்துவார்; சிலுவையின் அதிகாரத்தால் உங்களுக்கு ஜெயத்தைத் தந்து, அவர் உங்களுக்குத் தந்து பணியை நிறைவேற்ற உதவுவார். உங்கள் வாழ்க்கையை அவர் கரங்களில் நீங்கள் தந்திருப்பதால், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை உங்களில் கிரியை செய்யும்; உங்கள் வாழ்வில் அவரது நோக்கம் நிச்சயமாக நிறைவேறும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா சத்துருக்களின்மேலும் ஜெயம் கிடைக்கும் என்று நீர் தந்துள்ள வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்குப் பிரியமாக வாழ்வதற்கு எனக்கு உதவி செய்யும். என்னை புண்படுத்தியவர்களை மன்னிக்கும்படியும், பரிசுத்தத்தில் நடக்கும்படியும் என்னை பெலப்படுத்தும். உம் பரிசுத்த ஆவியானவர் என் அடிகளை வழிநடத்தி, எல்லா சதியாலோசனைகளுக்கும் என்னை விலக்கிக் காத்துக்கொள்வாராக. சிலுவையின் வல்லமையினால் எனக்கு ஜெயத்தைத் தந்திடவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


