அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்" (சங்கீதம் 44:5) என்ற வசனத்தை தியானிக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உண்மையான வெற்றி, மனுஷீக பெலத்தினாலோ, ஆயுதங்களாலோ அல்லது ஞானத்தினாலோ வருவதில்லை; ஆனால், தேவ வல்லமையினால் வரும் என்று சங்கீதக்காரன் நினைவுப்படுத்துகிறான். இந்த சங்கீதத்தின் 6 முதல் 8 வசனங்களில், "என் வில்லை நான் நம்பேன்; என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்" என்று அவன் கூறுகிறான். வாழ்க்கையில் போராட்டங்களை நாம் சந்திக்கிறபோது, சுயத்தை நம்புவதை, பெருமை கொள்வதை தவிர்க்கவேண்டும் என்று இது நமக்குக் கற்பிக்கிறது. சத்துருக்களோ, உபத்திரவங்களோ நமக்கு விரோதமாய் வரும்போது, நாம் நம்மை நம்பாமல், ஆண்டவர்மேலேயே முழு நம்பிக்கையையும் வைக்கவேண்டும். கர்த்தரின் நாமத்தினால் கோலியாத்துக்கு விரோதமாக நின்ற தாவீதைப்போல, நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவ வல்லமையை அறிக்கையிட்டு, அவரது பரிசுத்த நாமத்தை துதிக்கவேண்டும்.
வேதாகமம் முழுவதும், தங்கள் உபத்திரவ காலத்தில் கர்த்தரிடம் திரும்பிய பக்தியுள்ள ஆண்களையும் பெண்களையும் பார்க்கிறோம். தாவீது, அடிக்கடி தேவனை நோக்கி, "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" (சங்கீதம் 57:2). அசீரியர்களால் மிரட்டப்பட்டபோது எசேக்கியா, மனுஷீக உதவியை தேடி ஓடவில்லை. மாறாக தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர், "நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன்" (2 இராஜாக்கள் 19:34) என்று கூறினார். பவுலும், "பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்" (ரோமர் 12:19) என்று நமக்குக் கட்டளையிடுகிறான். இந்த வசனங்கள், நம்முடைய சுய பெலத்தினால் சண்டையிடாமல், பெருமையோ, கோபமோ மேற்கொள்ள இடங்கொடாமல், நம்முடைய யுத்தங்களை தேவனே செய்யும்படி தாழ்மையாக அவரை அனுமதிக்க நினைவுறுத்துகின்றன.
எனக்கு அன்பான தேவ பிள்ளையே, இன்றைக்கு மற்றவர்களின் செயல்களால் நீங்கள் ஒடுக்கப்பட்டு, உபத்திரவப்பட்டு, நசுக்கப்பட்டிருக்கலாம். மனந்தளராதிருங்கள். தேவன் உங்கள் மீட்பராக, உங்கள் பயங்கரமான பராக்கிரமசாலியாக, சமாதானத்தை அருளுகிறவராக இருக்கிறார். வேதம், "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 16:8) என்று கூறுகிறது. நீங்கள் கர்த்தரை உங்களுக்கு முன்பாக வைத்திருந்தால், அவர் உங்கள் வலது பக்கம் நிற்பார்; உங்களை மீட்பார். ஒரு மனுஷனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமானவையாக இருந்தால், அவன் சத்துருக்களும் அவனோடு சமாதானமாகும்படி செய்வார் என்பதை மறந்துபோகாதிருங்கள். ஆகவே, பழிவாங்காதிருங்கள். கர்த்தருடைய வேளையின்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள். அவர் நியாயஞ்செய்வார்; சத்துருக்களை அமைதியாக்குவார்; உங்களுக்குச் சமாதானம் தருவார். அவரது நாமத்தைத் துதித்து, அவருக்கு உண்மையாக இருப்பதே உங்கள் பங்காகும்.
ஜெபம்:
பரம தகப்பனே, என் மீட்பராகவும் என் கேடகமாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பெலவீனனா(ளா)ன எனக்காக நீரே யுத்தம் செய்து எனக்கு வெற்றியை அருளிச்செய்யும். என் வலப்பக்கத்தில் நின்று என்னை பாதுகாத்தருளும். அலைக்கழிக்கிற எல்லா அலைகளும் அமைதியாகி, என் குடும்பத்திற்கு சமாதானத்தை அளிக்கட்டும் என்று இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.