எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கான வாக்குத்தத்த வசனம், "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு" (எபேசியர் 3:20) என்று கூறுகிறது. ஆம், அன்பானவர்களே, ஆண்டவரிடம் கேளுங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கு பல்வேறு தேவைகள் இருக்கலாம். இப்போதும், விசேஷித்த ஏதோ ஒரு காரியத்தின் தேவையால் உங்கள் இருதயம் கலங்கியிருக்கலாம். ஆனால், தேவனுடைய வார்த்தையை வாசித்து, அவரது வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். வேதம், "தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது," (2 நாளாகமம் 16:9) என்று கூறுகிறது. அன்பானவர்களே, உங்கள் இருதயம் எப்படியிருக்கிறது? உத்தம இருதயம் உங்களுக்கு இருக்கிறதா? உங்கள் எல்லா தேவைகளையும் தேவனால் சந்திக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா?
தேவ வல்லமையால் நிரம்புங்கள். தேவன் தம் மகத்தான வல்லமையால் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார். வேதம், "வல்லமை தேவனுடையது," (சங்கீதம் 62:11) என்று கூறுகிறது. தேவனுடைய பாதத்தில் காத்திருங்கள்; உங்களை அவரது மகிமையான வல்லமையாலும், பரிசுத்த ஆவியாலும் நிரப்பும்படி கேளுங்கள். நீங்கள் கர்த்தருக்குள் பெலப்படுவீர்கள். "சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்," (கொலோசெயர் 1:11) என்று வேதம் கூறுகிறது. காத்திருந்து, இவ்விதமான வல்லமையால் உங்களை நிரப்பும்படி கர்த்தரிடம் கேளுங்கள். நீங்கள் தேவ வல்லமையால் நிரப்பப்படும்போது, தேவ ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்று பாக்கியமடைவீர்கள். "தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்," (1 கொரிந்தியர் 6:14) என்று வேதம் கூறுகிறது.
நீங்கள் தேவ வல்லமையினால் நிரப்பப்படும்போது, ஆண்டவர் நீங்கள் செய்யும்படி விரும்புகிற எல்லாவற்றையும் உங்களால் நிறைவேற்ற முடியும். நீங்கள் எப்போதும் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கவேண்டாம். மாறாக, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தினால் நிரப்பப்படுவீர்கள். ஆண்டவர் உங்கள் இருதயத்தை பெலப்படுத்துவார்; பாரங்களை அகற்றுவார்; தம் தெய்வீக வல்லமையால் உங்களை ஜெயம் பெறச் செய்வார். ஆகவே, அவரது சமுகத்தில் காத்திருங்கள்; அவரது வாக்குத்தத்தங்களை நம்புங்கள்; சந்தோஷமான அனுபவத்தால் உங்களை நிரப்பும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். நாம் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமான காரியங்களை தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உமக்கு முன்பாக விசுவாசமாகவும் உண்மையாகவும் இருக்கின்ற இருதயத்தை எனக்குள் உண்டாக்கும். பெலவீனத்தின், தேவைகளின் நேரங்களிலும் உம் வாக்குத்தத்தங்களை நம்புவதற்கு எனக்கு உதவும். என்னிலிருந்து எல்லா சந்தேகத்தையும் பயத்தையும் கவனமற்றதன்மையையும் அகற்றும். உம் பரிசுத்த ஆவியால் என்னை நிறைத்து, உம் பலத்த வல்லமையால் என்னை திடப்படுத்தும். சந்தோஷத்தோடும் திடநம்பிக்கையோடும் பொறுமையாய் உம் பாதத்தில் காத்திருக்க எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். ஆண்டவரே, நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாக எனக்குச் செய்திடும். உம் பலத்த வல்லமையோடு எழுந்து, வெற்றிக்குள் என்னை வழிநடத்தும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


