அன்பானவர்களே, இன்று ஆண்டவரிடமிருந்து ஒரு நன்மையைக் காணப்போகிறோம். அதை நமக்குத் தருவதற்கு அவர் இப்போதே வரப்போகிறார். தேவனுடைய வார்த்தையில் நாம் தேடும்போது, "காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்" (யோவான் 20:29) என்ற வசனத்தை காண்கிறோம். இயேசு, இதை தம் சீஷனான தோமாவிடம் கூறுகிறார். "தோமாவே, நீ என் காயங்களைத் தொட்டால்தான் விசுவாசிப்பேன் என்று கூறுகிறாய். ஆனால், காணாமலே என்னை விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்," என்று கூறினார். நாமும் அதே இடத்தில்தான் இருக்கிறோம். விசுவாசமே, நம்மை ஆண்டவர் இயேசுவின்மேல் நம்பிக்கை வைக்கும்படி செய்கிறது. நீங்கள் இயேசுவை காணாவிட்டாலும், அவரைப் பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் அவரை நம்பியிருக்கிறீர்கள். ஆண்டவர் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறார். அவர் உங்களைக் குறித்து, உங்கள் விசுவாசத்தைக் குறித்து, "என் பிள்ளை என்னைக் காணவில்லை. ஆனாலும் என்மேல் விசுவாசம் வைக்கிறான்(ள்)" என்று ஆச்சரியப்படுகிறார். இன்று அந்த விசுவாசத்தால் ஆண்டவர் இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள்.

ஒரு பெண்மணி இப்படி கூறினார்கள்: அவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்து குழந்தையில்லாத நிலையில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்துக்கு வந்தார்கள். மருத்துவர்கள், "கருவுற வழியே இல்லை; மருத்துவரீதியாக அது முடியாது," என்று கூறினார்கள்.  மக்கள் அவர்கள் கணவரை, "இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள். அப்போதுதான் உனக்குக் குழந்தை பிறக்கும்," என்று கூறினார்கள். ஆனால், அவர்கள் கணவரோ, ஆண்டவரை விசுவாசித்து, அவர்களிடம், "இல்லை. தேவனே உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவர் நமக்காக ஓர் அற்புதத்தைச் செய்வார்," என்று கூறினார். அப்படி ஒரு நம்பிக்கையை தேவன்மேல் வைப்பது ஆச்சரியமாகும்.

அவர்கள் தம்பதியராய் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்துக்கு வந்தனர். ஜெப வீரர் அவர்களுக்காக ஜெபித்து, "செல்லுங்கள். தேவன் உங்களுக்குக் குழந்தையைத் தருவார்," என்று கூறினார். அந்த மாதத்தில் அவர்கள் கருத்தரித்தார்கள்; அழகிய பையன் அவர்களுக்குப் பிறந்தான். அவர்கள் வியந்து, இணைந்து தேவனை துதித்தார்கள். ஆம், நீங்கள் ஆண்டவரை கண்டிருக்கமாட்டீர்கள்; ஆனாலும், அவரில் விசுவாசம் வைக்கிறீர்கள். ஆகவே, இன்று நீங்கள் அவரது அற்புதத்தைக் காண்பீர்கள். தமது பரிசுத்த ஆவியின் மூலம் ஆண்டவர் உங்களுக்குள் ஜீவிப்பார். நீங்கள் அவரை அனுபவிப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் வந்து என் உள்ளத்தில் வாசம்பண்ணுவீராக. நாம் உம்மைக் காணாவிட்டாலும் நீர் உம் பரிசுத்த ஆவியை எனக்குத் தந்திருக்கிறீர். ஆண்டவரே, என் உள்ளத்தில் வாசம்பண்ணும்; பெரிதான உம் அன்பையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க எனக்கு உதவும். என்னை நிரப்புகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்மை நோக்கி கூப்பிடும் விசுவாசத்தை தயவாய் நோக்கிப் பார்ப்பீராக. எனக்குப் பதில் அளித்து, இப்போதே ஓர் அற்புதத்தைச் செய்வீராக. என் நம்பிக்கையை முழுவதும் உம்மேல் வைத்திருப்பதால், இப்போதே எனக்கு ஓர் அற்புதத்தைச் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். உம்மை காணாவிட்டாலும் உம்மை விசுவாசிப்பதால் இந்த அற்புதத்தால் என்னை கனப்படுத்துகிறீர். அதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.