எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, தேவனுடைய கிருபையால் நாம், "உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்" (லேவியராகமம் 26:13) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிக்கிறோம். தாம் ஒருவரே எல்லா பாரத்திலும் அடிமைத்தனத்திலும் இருந்து தம் மக்களை விடுவிப்பதாக கர்த்தர் நினைவுப்படுத்துகிறார். கர்த்தர், "நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்," என்றும், "நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்," என்றும் கூறுகிறார் (எரேமியா 2:20; லேவியராகமம் 26:13). தம் பிள்ளைகளை விடுவித்து அவர்களை மீண்டும் கௌரவிக்கவேண்டும் என்றே தேவனின் இருதயம் எண்ணுகிறது.
அன்பானவர்களே, இன்று நீங்கள் கனத்த பாரத்தைச் சுமந்துகொண்டிருக்கலாம். உங்கள் இருதயம் கவலையால், பயத்தால், ஏமாற்றத்தால், பணக்கஷ்டத்தால், வியாதியால், குடும்பப் பிரச்னைகளால், உணர்வுரீதியான வேதனையால் பாரப்பட்டிருக்கலாம். இதுபோன்ற பாரங்கள் உங்கள் தோள்களின்மேல் நுகத்தடி போலவும், வாழ்க்கையை கட்டியிருக்கும் சங்கிலி போலவும் தோன்றலாம். ஆனால், கர்த்தர், "எல்லா கட்டுகளிலிருந்தும் என்னால் உன்னை விடுவிக்க முடியும்," என்று அன்போடு கூறுகிறார். எந்தப் பிரச்னையும் அவருக்குப் பெரியதல்ல; அவரது பலத்த வல்லமைக்கு முன் எந்தச் சங்கிலியும் உறுதியானதல்ல.
வேதம், தேவன் மக்களிடையே எந்த வேறுபாடும் பார்க்காது, உள்ளங்களை விசுவாசத்தினால் சுத்திகரிக்கிறார் என்று கூறுகிறது (அப்போஸ்தலர் 15:9,10). அவரில் விசுவாசமுள்ளவர்கள் அனைவருக்கும் இரட்சிப்பும் விடுதலையும் உண்டு. ஆகவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வைத்து தேவனுடைய பிள்ளையாக மாறவேண்டும். நீங்கள் அவரில் விசுவாசம் வைக்கும்போது, அவரது வாக்குத்தத்தங்கள் உங்களுக்குரியவையாகும்.
இயேசுதாமே எல்லா பாரங்களையும் சிலுவையில் தம்மீது சுமந்தார் என்பதை மறந்துபோகாதிருங்கள். அவர் நம் பாவங்களை, கவலைகளை, வேதனையை, சாபங்களை சகித்தார். "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்," (கலாத்தியர் 2:20) என்று வேதம் கூறுகிறது. உங்களை கிறிஸ்துவுடன், அவரது மரணத்துடனும் உயிர்த்தெழுதலுடனும் அடையாளப்படுத்தும்போது, உங்கள் வாழ்விலுள்ள பாவத்தின், பயத்தின், கட்டுகளின், எல்லா நுகத்தடிகளின் அதிகாரமும் முறிக்கப்படும். உங்கள் கடந்த கால, நிகழ்கால போராட்டங்களின் கீழ் நீங்கள் வாழமாட்டீர்கள்.
ஆகவே, அன்பானவர்களே, எதைக் குறித்தும் கலங்காதீர்கள். எல்லா பாரத்தையும் ஜெபத்தில் ஆண்டவரிடம் கொண்டு வாருங்கள். எல்லா இருதய வலியையும், கவலையையும், முடியாத சூழ்நிலையையும் அவரது அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுங்கள். இஸ்ரவேலரின் நுகத்தடியை முறித்த அதே தேவன், உங்கள் வாழ்விலுள்ள நுகத்தடியையும் இன்று முறிக்க வல்லவராயிருக்கிறார். அவர் உங்களை விடுவிப்பார்; பெலப்படுத்துவார்; தலை நிமிர்ந்து நடக்கப்பண்ணுவார். உங்களுக்காக ஆண்டவர் ஓர் அற்புதத்தை இப்போதும் நடப்பித்துக்கொண்டிருக்கிறார் என்று விசுவாசித்திடுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எல்லா நுகத்தடிகளையும் முறித்து, உம் பிள்ளைகளை விடுவிக்கிற தேவனாயிருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா பாரத்தையும், துக்கத்தையும், வேதனையையும் உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் சுமப்பதற்காக உமக்கு நன்றி. என்னை அடிமையாக்கி வைத்திருக்கும் கவலை, பயம், இருதய வலி, வியாதி, பணக்கஷ்டம் போன்ற எல்லா சங்கிலிகளையும் இன்று உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம் மகத்தான வல்லமையால் எல்லா கட்டுகளையும் உடையும்; நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி விடுதலையோடு நடக்கப்பண்ணும். விசுவாசத்தினால் என் உள்ளத்தை சுத்திகரித்து, உம்மை முழுவதுமாக நம்புவதற்கு உதவி செய்யும். பயத்திற்குப் பதிலாக தைரியத்தாலும், கலக்கத்துக்குப் பதிலாக சமாதானத்தினாலும், அவநம்பிக்கைக்குப் பதிலாக நம்பிக்கையினாலும் என்னை நிரப்பும். உம் பலத்த கரம் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அமர்வதாக. எல்லா ஒடுக்குதலிலிருந்தும் என்னை விடுவித்து, ஜெயமும் சந்தோஷமுமுள்ள வாழ்க்கைக்குள் நடத்தும். இப்போதும் நீர் அற்புதங்களைச் செய்கிறீர் என்று நம்பி இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


