அன்பானவர்களே, தேவன், தம்முடைய நோக்கங்களுக்கு பயன்படும்வண்ணம் உங்களை பரிசுத்தமாக்குவதற்கு விரும்புகிறார். இந்த உலகத்தில் நற்கிரியைகளைச் செய்யும் பாத்திரமாக உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார். "ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்" (2 தீமோத்தேயு 2:21). பரிசுத்தமாவதற்கு முதல் படி, அறிக்கையிடுதல் ஆகும். நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிடும்போது எல்லா அநியாயங்களும், பாவமும், அடிமைத்தனங்களும் நீங்கும்படி நம்மை மன்னித்து சுத்திகரிக்க இயேசு உண்மையுள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9). நம்முடைய பெலவீனங்களை தாழ்மையுடன் அவர் முன் கொண்டு வரவேண்டும்; மறுரூபமாக்கும் அவரது வல்லமை நமக்குத் தேவை என்று ஒத்துக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்யும்போது, இயேசு, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று கூறுகிறார். முழுமையாக அவருக்கு அர்ப்பணித்த உள்ளம் நமக்கு இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

பரிசுத்தம், நாம் மற்றவர்களுடன் சமாதானமாக இருப்பதையும் காட்டுகிறது. யாவரோடும் சமாதானமாயிருக்கும்படி வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. சமாதானமில்லாமல் நம் இருதயம் பரிசுத்தமாக இருப்பது சாத்தியமில்லை (எபிரெயர் 12:14). குடும்பத்திலிருக்கிறவர்களுடனும் உடன் விசுவாசிகளுடனும் ஒப்புரவாகிறதற்கு பெரும்பாலும் தாழ்மையும் தியாகமும் அவசியமாயிருக்கிறது. மன்னிப்பதற்கு நமக்கு தாழ்மை தேவையாயிருக்கிறது. சமாதானத்தை சீர்ப்படுத்துவதற்கு ஏதேனும் கொடுக்கவேண்டியுள்ளது. பகையை வைத்திருப்பது தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்பதைத் தடுக்கிறது (ஏசாயா 1:15; 1 யோவான் 3:15). நம்முடைய இருதயத்திலிருந்து கசப்பை அகற்றி சமாதானம் பண்ணி, ஒப்புரவாகும்போது மெய்யான பரிசுத்தம் வருகிறது. அப்படிச் செய்யும்போது, நம்மை சுத்திகரித்துக்கொள்வதோடு, நம்மைச் சுற்றிருப்பவர்களுக்கு தேவனுடைய அன்பையும் காட்டுகிறோம்.

இறுதியாக, நாம் பரிசுத்தத்திலும் சமாதானத்திலும் வாழும்போது தேவன் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி நம்மை பெலப்படுத்துகிறார். ஆவியினால் நிரப்பப்பட்டவர்களுக்கு பாவத்தை மன்னிக்கவும், தேவனின் கிருபையோடு ஊழியம் செய்யவும் அதிகாரம் உள்ளது என்று வேதம் வாக்குக்கொடுக்கிறது (யோவான் 20:22,23). நாம் பரிசுத்தத்தில் நடந்து, ஒப்புரவாகி, தாழ்மையோடு இருக்கும்போது தேவனால் தம் ராஜ்யத்தை விரிவாக்கும்படி நற்கிரியைகளைச் செய்வதற்கு நம்மை பயன்படுத்த முடியும். பரிசுத்தம் என்பது நம்முடைய தனிப்பட்ட நன்மைக்காக அல்ல; மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கும், முறிந்துபோனதை சீர்ப்படுத்தவும், நடைமுறை வழிகளில் தேவ அன்பை விளக்கவும் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கிறது. பரிசுத்தமாகவும், பயனுள்ளவர்களாகவும், சமாதானம்பண்ணுகிறவர்களாகவும் இருந்து தமது இருதயத்தை நம் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் பிரதிபலிப்பதற்கான கிருபை தேவன் நமக்குத் தந்தருள்வாராக.

ஜெபம்:
அன்பின் தகப்பனே, எல்லா பாவமும் பெலவீனமும் நீங்க என் இருதயத்தை சுத்திகரித்தருளும். எல்லாவற்றையும் உம்மிடம் அறிக்கையிட்டு அர்ப்பணிக்க எனக்கு உதவும். உம்முடைய சமுகத்தை தரிசிக்கும்படி பரிசுத்தமுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருளும். என் வாழ்வில் எல்லோருடனும் சமாதானத்தை எனக்கு அருளிச்செய்யும். என்னை புண்படுத்தியவர்களை மன்னிப்பதற்கு எனக்கு உதவும். உடைந்த உறவுகளை சீர்ப்படுத்துவதற்கு தாழ்மையை எனக்குக் கற்றுத்தாரும். நற்கிரியைகளைச் செய்யும்படி உம்முடைய ஆவியினால் என்னை நிரப்பும். உம்முடைய கரங்களில் பயன்படுத்தப்படும்படி என்னை பரிசுத்தமாக்கும். என் வாழ்க்கை, உம் அன்பையும் கிருபையையும் காட்டுவதாக அமையவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.