அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்" (சங்கீதம் 89:17) என்ற வசனத்தை தியானிப்போம். 'கொம்பு' என்ற பதம், வேதத்தில் கௌரவத்தை, கனத்தை, அதிகாரத்தை குறிக்கிறது. பலவேளைகளில் மற்றவர்கள் நம்மை கவனிக்காததுபோல, நிராகரித்ததுபோல உணருகிறோம். நமக்கு சாதகமாக எல்லாம் நடக்கவில்லை என்றும், வாழ்க்கை ஸ்தம்பித்ததுபோலவும் உணருகிறோம். ஆனால், ஆண்டவர், அவர்தாமே நம் கொம்பை உயர்த்துவதாகவும், நம்மை கனப்படுத்துவதாகவும், அவருடைய தயவு நம் சூழ்நிலையை மாற்றும் என்றும் கூறுகிறார். தேவன் தம் தயவை நம்மேல் வைக்கும்போது, ஒரு மனிதனாலும் நம்மை கீழாக தள்ள முடியாது; அவருடைய ஆசீர்வாதங்கள் தொடர்ந்து பாயும்.

சென்னையை சேர்ந்த வாசுகி என்ற சகோதரியின் வாழ்வில் இப்படியே நடந்தது. அவர்களுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 2007ம் ஆண்டில் தன் கணவரை அவர்கள் இழந்துவிட்டார்கள். பிள்ளைகளை அவர்கள் மட்டுமே வளர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கடன் பாரம் மிகவும் அழுத்தியது. கண்ணீரும் நம்பிக்கையற்ற நிலையும் உண்டானது. 2008ம் ஆண்டில் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்கள். அங்கு சகோதரி இவாஞ்சலின் அவர்களுக்காக ஜெபித்தார்கள். அப்போதிலிருந்து அவர்கள் வாழ்வில் அற்புதங்கள் நடக்க ஆரம்பித்தன. சீஷாவின் மூலம் அவர்கள் பிள்ளைகளை கல்விக்கான உதவியை பெற்றனர்; கடினமாக உழைத்தனர்; நல்ல வேலைகளில் அமர்ந்தனர். தனக்கு இருந்த இரண்டரை லட்ச ரூபாய் கடனையும் அவர்கள் மெதுவாக திருப்பி செலுத்தினார்கள். தனக்கு இருந்த போராட்டங்களின் மத்தியிலும் ஆவிக்குரியவிதத்தில் வளர விரும்பி, ஆறு வார கால பங்காளர் பயிற்சியை பெற்றார்கள். மற்றவர்களுக்காக ஜெபிக்க கற்றுக்கொண்டார்கள்; ஜெப கோபுரத்தில் தன்னார்வ ஊழியம் செய்தார்கள். தேவன் அவர்கள் மகனின் படிப்பை குறித்த ஜெபத்திற்கு பதில் அளித்து, அவர்கள் மகன் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்கும்படி அருளினார். இன்று அவன் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறான். தேவன் ஒரு வீட்டைக் கட்டும்படி, கார் வாங்கும்படி, அவர்கள் மகள்களின் திருமணத்தை விமரிசையாக நடத்தும்படி செய்தார். மூன்று பேரப்பிள்ளைகளால் மகிழ்ச்சியடையும்படியும் அருள்புரிந்தார். பெதஸ்தா ஜெப மையத்திற்கு சென்று ஊழியம் செய்து ஜெபிக்கவேண்டும் என்ற விருப்பத்தையும் அவர்கள் பெற்றார்கள். தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள் வாழ்வில் முடிவில்லாமல் பாய்ந்தது. தேவ தயவு தன் வாழ்வையும் குடும்பத்தையும் உயர்த்தியது என்று அவர்கள் சாட்சி கூறினார்கள்.

அவ்வாறே, தேவன் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். எல்லாம் துர்பாக்கியமாக மாறிவிட்டதென நீங்கள் நினைக்கலாம். ஒருவேளை, உங்களுக்கு அன்பானோரை, உங்கள் செல்வத்தை, உங்கள் வேலையை, உங்கள் சமாதானத்தை இழந்திருக்கலாம். ஆனால், கர்த்தர், "நானே உனக்கு மகிமையாகவும், பெலனாகவும் இருக்கிறேன். என்னுடைய தயவினால் உன் கொம்பை உயர்த்துவேன்," என்று சொல்லுகிறார். உங்கள் சூழ்நிலையை அவர் அறிந்திருக்கிறார். அதை தலைகீழாக மாற்றுவார். சகோதரி வாசுகியின் வாழ்க்கையை மறுரூபமாக்கிய அதே தேவன், உங்களுக்கும் அப்படியே செய்வார். அவருடைய தயவு வரும்போது, அவர் உங்கள் தேவைகளை மட்டும் சந்திப்பதில்லை; நீங்கள் அவருடைய நன்மையை குறித்து சாட்சி பகரும்வரைக்கும் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தை அருளிச்செய்வார். ஆகவே, இந்த வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்ளுங்கள். அவரை நம்புங்கள். அவர் தரும் ஆசீர்வாதங்களுக்காக முன்னரே அவரை ஸ்தோத்திரியுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய மகிமையாகவும் பெலனாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின்மேல் உம்முடைய தயையை வைத்து என்னை உயர்த்தும். எல்லா தேவைகளையும் அருளிச்செய்து, குறைகள் யாவற்றையும் அகற்றும். என்னுடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றும்; கடன்களை ஆசீர்வாதமாக மாற்றும். என் வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் உம்முடைய ஆசீர்வாதங்கள் நிறைவாய் பாய்ந்து செல்லட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.