எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்" (ஓசியா 14:7) என்ற வசனத்தை வாக்குத்தத்தமாக தியானிக்க இருக்கிறோம். என்னுடன் இணைந்து அதை வாசியுங்கள். ஆம், நீங்கள் செழித்துப் படருவீர்கள். "செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்," என்றும் வேதம் கூறுகிறது (சங்கீதம் 66:12). இவையே இன்றைக்கு உங்களுக்கான தேவ வாக்குத்தத்தங்கள்.

இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? "கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்" (நீதிமொழிகள் 28:25) என்று வேதம் கூறுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். ஆண்டவர், எல்லாவித தனிமையின் வழியாகவும், ஒன்றுமில்லாமையின் வழியாகவும் எங்களைக் கடந்து செல்லப்பண்ணி தம்மை மாத்திரமே நோக்கிப்பார்க்கச் செய்தார். எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆரம்ப கட்டங்களிலேயே ஆண்டவர் இந்தப் பாடத்தை நமக்குத் தெளிவாகப் போதித்தார். தேவைகள் மிக அதிகமாக இருந்தன; ஆனாலும் எந்த மனுஷனிடமோ, மனுஷியிடமோ நாங்கள் ஒருபோதும் சென்றதில்லை. என் கணவர் எப்போதும் தேவனிடமே சென்று, அவரை மாத்திரமே நோக்கிப் பார்த்தார்.

எங்கள் குடும்ப வாழ்க்கையின் ஆரம்பத்தில், பல பிரச்னைகள் இருந்தன. பணம் இல்லை; சந்தோஷம் இல்லை; வாழ்க்கையில் சமாதானமும் இல்லை. ஆனால், தேவன் அவரைக் கிட்டிச்சேர எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். நாங்கள் ஆண்டவரை விசுவாசித்து அவரை நோக்கிப் பார்த்தபோது, அவர் சமாதானத்தோடும் நேர்த்தியாகவும் எல்லாவற்றையும் அருளிச்செய்தார். தாவீது, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்", என்றும், "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்" (சங்கீதம் 23:1,6) என்றும் கூறுகிறான். ஆம், அன்பானவர்களே, சிறிதோ, பெரிதோ எதையும் தேவனிடம் கேட்பதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். அவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். முழங்காற்படியிட்டு அவரிடம் இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வீர்கள். என் வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றிருக்கிறேன்; நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இன்றைக்கு உம்மை முழுவதுமாக நம்புவதற்கு தீர்மானிக்கிறேன். எல்லாவற்றுக்கும் உம்மையே ஏறெடுத்துப் பார்க்க எனக்குக் கற்றுக் கொடுத்தருளும். எனக்குத் தேவை உண்டாகும்போது, எனக்கு வேண்டியவற்றை அருளுகிறவராகவும் என் சமாதானமாகவும் விளங்கிடும். எவ்வித பயமும் சந்தேகமும் இல்லாமல் உம்மையே பற்றிக்கொள்ள எனக்கு உதவி செய்யும். உம் வல்ல கரத்தில் என் வாழ்க்கை செழித்து படர்ந்திடட்டும். உம் மிகுதியான ஆசீர்வாதங்களை நன்றியுடன் பெற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.