அன்பானவர்களே, இன்றைக்கு, "நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்" (சங்கீதம் 92:12) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிப்போம். தேவன் எப்போதுமே நீங்கள் தமக்குள் வளரவேண்டும் என்று விரும்புகிறார். இங்கே சங்கீதக்காரன், நீதிமான், பனையைப்போலவும், கேதுருவைப்போலவும் இருப்பான் என்று கூறுகிறான். எப்போது இது நடக்கும்? நீதியின் சூரியனான கிறிஸ்து உங்கள்மேலும் என்மேலும் பிரகாசிக்கும்போது நாம் அவருக்குள் வளர்ந்து செழிப்போம். பனைமரத்தைப் பாருங்கள். அது அநேக பயனுள்ள பொருள்களை தரும்; அழகாகவும் இருக்கும். உன்னதப்பாட்டில் சாலொமோன், உன் உயரம் பனைமரத்தொழுங்குபோல இருக்கிறது என்று கூறுகிறான். பனை மரங்களில் பல வகைகள் உண்டு. இஸ்ரேல் தேசத்தில் பனை மரங்கள் சாலையோரம் நடப்படும். அவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அவற்றின் பழங்கள், இனிப்பான பேரீச்சைகள், சாலையோரம் விழுந்திருக்கும்; நாம் அதன் வழியாக கடந்து செல்லும்போது அவற்றை பொறுக்கியெடுத்து, சாப்பிடலாம். பனைமரம், அழகானது மட்டுமல்ல; அர்த்தமுள்ளதும் கூட.

ஆகவேதான் சாலொமோன் ராஜா, ஆலயத்தின் வெளிப்பிரகாரத்திலும் உள்பிரகாரத்திலும் மரங்களை கொண்டு வேலைப்பாடு செய்தான் (1 இராஜாக்கள் 6:29). இந்த மரங்கள் செல்வசெழிப்பை குறிக்கும். இவை பழங்களை, நார்களை, கட்டடவேலைகளுக்கான பொருள்களை, மருந்துகளை பயனுள்ள அநேக பொருள்களை கொடுக்கும். இன்றும் கிறிஸ்தவர்கள், பனையோலைகளை குருத்தோலை ஞாயிறன்று இயேசு கிறிஸ்துவின் வெற்றி பவனியை குறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே, ஆண்டவர், "பனையைப்போல செழிப்பாய்," என்ற கூறுவது, அழகிற்கான, கனி நிறைந்து காணப்படுவதற்கான, வெற்றிக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது.

கேதுரு மரத்தின் சிறப்பம்சம் என்ன? அது ஆழமாக வேரூன்றி, 50 அடி அகலத்திற்கு கிளை பரப்பும். அது 120 அடி உயரத்திற்கு வளரும். அது உயரமாக, உறுதியாக, கம்பீரமாக நிற்கும். ஆகவேதான் அதை மரங்களின் ராஜா என்கிறோம். அதைப்போல தேவ பிள்ளையாகிய நீங்கள் தேவனுடைய சத்தியத்தில் வேரூன்ற வேண்டும். "நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 62:22). கேதுரு மரங்கள் ஆயிரம் ஆண்டை தாண்டியும் வாழும். அவை அவ்வளவு நீண்டகாலம் செழிப்பாக வாழக்கூடியவை. ஆகவேதான் ஆண்டவர், "பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவாயாக" என்று வாக்குக்கொடுக்கிறார். ஆண்டவர்தாமே இந்த வலிமையான மரங்களைப்போல நீங்கள் செழித்து வளர உதவி செய்வாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் அன்பாக கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக (சங்கீதம் 92:12) உமக்கு நன்றி. நான் பனையைப்போல செழிப்பதற்கு, அழகாக, பயனுள்ளதாக, ஜெயத்துடன் விளங்குவதற்கு வாஞ்சிக்கிறேன். என்னுடைய வாழ்க்கை ஒவ்வொரு காலத்திலும் மிகுந்த கனிகளை தருவதாக, அநேகருக்கு பயனுள்ளதாக அமையட்டும். கேதுருவைப்போல ஆழமாக வேரூன்ற உதவும். என்னுடைய விசுவாசம் உமக்குள் உறுதியானதாக, அசையாததாக, சத்தியத்தால் நிறைந்ததாக அமைவதாக. இயேசுவே, நீதியின் சூரியனாக என்மேல் பிரகாசியும். உமது கிருபையால் உயரமாகவும், உம் அன்பினால் செழிப்பாகவும் அர்த்தமுள்ள நீடித்த வாழ்க்கை வாழும்படியும் அருள்செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.