அன்பானவர்களே, மறுபடியுமாக உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். பலர், இன்றைய ஆசீர்வாதம் வீடியோ செய்திகள் வாயிலாக பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களைப் பற்றிய சாட்சிகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றீர்கள். அவற்றையும், உங்கள் மின்னஞ்சல்களையும், பின்னூட்டங்களையும் வாசித்து தேவன் உங்கள் வாழ்வில் செய்த நன்மைகளை அறிந்து சந்தோஷப்படுகிறோம். தினமும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை தொடர்ந்து சுதந்தரிக்கும்போது, அவர் உங்கள் வாழ்வில் செயல்படுவதை காண்பீர்கள். இன்றைக்கு, "உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது" (எரேமியா 15:16) என்ற வாக்குத்தத்தை தேவன் தருகிறார். ஆம், அன்பானவர்களே, தேவன் உரைக்கும் வார்த்தைகள் நமக்கு சந்தோஷத்தை அளிக்கின்றன; நம் உள்ளத்தை மகிழ்ச்சியாக்குகின்றன. ஆனால், இந்த வசனத்தில், 'உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்' என்று ஒரு பகுதி கூறுகிறது. அதனால்தான், அவை தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாக எரேமியா கூறுகிறான்.
இன்றைக்கு உலகத்தில், நாம் மனவுளைச்சல் அடையும்போது, கொண்டாட்டத்தின்போது, நம் துக்கத்தை மறப்பதற்கு விரும்பும்போது, நம் போனில், நல்ல உணவு கிடைக்கும் உணவகத்தை தேடுகிறோம். நன்றாக சாப்பிட்டால் பிரச்னைகளை மறக்க முடியும் என்று நினைக்கிறோம். அதன் பிறகு, "என் ஆத்துமாவுக்கு ஏற்ற உணவு இது," என்று பதிவிடுகிறோம். நம் எல்லா துக்கம், துயரம், மனவுளைச்சலுக்கு மேலாக அது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது. ஒருவேளை, நீங்கள் வேலையில் மனவுளைச்சலின் வாயிலாக, உறவுகளில் தோல்வியின் வழியாக, குடும்பத்தில் நெருக்கடியின் வாயிலாக அல்லது பண கஷ்டத்தின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கலாம். எல்லா மனவுளைச்சலையும் மறப்பதற்கு, "நான் கொஞ்சம் பிரியாணி சாப்பிடட்டும்," என்று நீங்கள் கூறலாம். அந்தத் தருணத்தில் அது கொஞ்சம் சமாதானமாக உணரச் செய்யலாம். சாப்பிட்டதற்குப் பிறகு, ஆழ்ந்து தூங்குவோம். ஆனால் எழுந்ததும் அந்த மனவுளைச்சலும் துக்கமும் திரும்பவும் வரும்; நம் மனம் மீண்டும் குழப்பத்தினாலும் நெருக்கடியினாலும் நிரம்பும்.
ஆனால், அன்பானவர்களே, வேதம், "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்," (மத்தேயு 4:4) என்று கூறுகிறது. இந்த வார்த்தைகள் நம் வாழ்வில் எவற்றைச் செய்யும்? வேதம், "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது," (யோவான் 6:63) என்று கூறுகிறது. நாம் இந்த ஜீவனால் நிரம்பியிருக்கும்போது, நம் உள்ளங்களில் பொங்கி வழிந்து, கர்த்தரின் சந்தோஷத்தால் நிரப்பிடும் வாடாத நித்திய மகிழ்ச்சியை அடைவோம். ஆகவே, இன்று தேவனுடைய வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்ளும்போது, அவருடைய வார்த்தைகளை ஆத்துமாவுக்குள் கொண்டு செல்லுங்கள். எரேமியா தீர்க்கதரிசி கூறுகிறவண்ணம், அந்த வார்த்தைகளை நாம் புசிக்கும்போது, அவை நம்மை சந்தோஷத்தால், தெளிவினால், பெலனால் நிரப்பிடும். அது நம்மை உறங்கவிடாமல், சத்துவத்தை தந்து, நாம் செய்யவேண்டியவற்றை செய்யும்படி வழிநடத்தும். ஆகவே, இன்று கர்த்தரின் வார்த்தையை உட்கொள்ளுங்கள்; வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் அவரோடு நடக்கும்போது தேவன் உங்களுக்குச் சந்தோஷத்தை அருளிச்செய்வார். ஆம், இன்றே இந்த ஜீவனை பெற்றுக்கொள்ளுங்கள்; சந்தோஷமாயிருப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் வாக்குத்தத்தங்கள் யாவற்றையும் நினைக்க எனக்கு உதவி செய்யும். உம் வார்த்தையை விசுவாசிக்கவும், என் வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளவும் உதவி செய்யும். உம் வார்த்தையை நான் தியானிக்கும்போது, அது எனக்கு அப்பமாகவும், என் ஆத்துமாவுக்கு மெய்யான போஜனமாகவும் விளங்கட்டும். இன்றைக்கு உம் வார்த்தையை நான் விசுவாசித்து, கீழ்ப்படிவதால் அது என் சந்தோஷமாவதாக; என் இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புவீராக. உம்மை நம்பவும், தினமும் உம் வார்த்தையின்படி வாழவும் எனக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


