எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவர்தாமே உங்களோடு பேசி, தம் சகல மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தந்து ஆசீர்வதிப்பாராக. "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" (யோவான் 14:26) என்று ஆண்டவர் கூறுகிறார். சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனையும் என்றென்றைக்கும் நம்மோடிருக்கும்படியாக பிதா அளிப்பார் என்றும் வேதம் கூறுகிறது (யோவான் 14:16). நம் குடும்பத்தில், ஆண்டவர் தம் மிகுந்த இரக்கத்தால், இப்படி நம்மை தம் வல்லமையினால் நிரப்புகிறார். ஆரம்பத்தில் என் கணவர் Dr.டி.ஜி.எஸ். தினகரன், தேவ வல்லமையை பெற்றுக்கொண்டார்; இயேசு அழைக்கிறார் ஊழியமும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு சிறிது காலம் கழித்து, நானும் தேவ வல்லமையைப் பெற்றுக்கொண்டேன். அவ்வாறே ஒருவர் பின் ஒருவராக குடும்பத்தினர் அனைவரும் தேவ வல்லமையைப் பெற்றுக்கொண்டோம். இன்று வரை என் பேரப்பிள்ளைகளும்கூட தேவ வல்லமையைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். தேவ வல்லமை நமக்கு அருளப்படும்போது, நாம் மிகவும் மகிழ்கிறோம்; ஆண்டவருக்குள் களிகூருகிறோம்.

மே 21ம் தேதி, நாங்கள் இழந்த என் அருமை மகள் ஏஞ்சலை நினைவுகூருவது வழக்கம். ஒருநாள் காலை வழக்கம்போல், நாங்கள் துக்கத்தோடு ஜெபம் செய்தோம். அன்று ஆண்டவர் எங்களை தம் வல்லமையால் மேலும் மேலும் நிறைத்தார். துக்கிப்பதற்குப் பதிலாக நாங்கள் ஆண்டவருக்குள் களிகூர்ந்தோம். ஆண்டவர், "நான் எப்போதும் உங்களோடு இருக்கிறேன். நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட தேவையில்லை. உன் மகள் என்னோடு இருக்கிறாள். நான் உனக்கு ஏராளமான பிள்ளைகளை தருவேன். எப்போதும் உனக்கு முன்னே சென்று உன்னை களிகூரப்பண்ணுவேன்," என்று கூறினார். ஆம், அதற்குப் பிறகு, நாங்கள் களிகூர்ந்தோம். ஆயிரமாயிரம் பேர் தேவ வல்லமையைப் பெற்றுக்கொண்டனர்; அவர்களும் களிகூருகின்றனர்.

வேதம், "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்," (ஏசாயா 40:29) என்று கூறுகிறது. ஆம், அன்பானவர்களே, உங்களுக்கு அன்பானோரை இழந்ததினால் துயரப்படுகிறீர்களா? தேவ வல்லமையினால் நிரம்புங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தை பெலப்படுத்துவார்; உங்களை பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தால் நிரப்புவார். துயரப்படுவதற்குப் பதிலாக நீங்கள் எந்நேரமும் கர்த்தருக்குள் களிகூரலாம். அவளை இழந்தபிறகு இத்தனை ஆண்டுகளில் ஆண்டவர், இயேசுவின் நாமத்தில் எங்களுக்கு ஏராளமான பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறார். ஆண்டவர்தாமே உங்களை அதேவண்ணம் நிரப்பி தம் மகிமைக்காய் பயன்படுத்துவாராக. துயரத்திற்குப் பதிலாக ஆண்டவர் உங்களை பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தால் நிரப்புவாராக.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இன்றைக்கு உம் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் என்னை நிறைத்திடும். துக்கத்தின் எல்லா வேளைகளிலும் ஆறுதல் அளிக்கும் உம் சமுகத்தை நான் உணருவதற்கு உதவும். பெலவீனமான என் உள்ளத்தைப் பெலப்படுத்தி, எனக்குள் இருக்கும் எல்லா பயத்தையும் பாரத்தையும் அகற்றும். உம் சந்தோஷம் எனக்குள் நிரம்பி வழிவதாக; நான் பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்யும். என் வேதனையை, அநேகருக்கு நம்பிக்கையை அளிக்கும் சாட்சியாக பயன்படுத்தும். என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.