அன்பானவர்களே, தினமும் ஆண்டவரோடு நடக்கும்படி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கும் அவர் விசேஷித்த வசனத்தை உங்களுக்காக வைத்திருக்கிறார். வேதம், "தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்" (சங்கீதம் 145:18) என்று கூறுகிறது.எவ்வளவு ஆறுதலான வாக்குத்தத்தம்! தேவன் உங்களுக்கு தூரமாக இல்லை. அவர் அருகில், விசுவாசத்தோடு அவரது நாமத்தை உச்சரிக்கும்போது உங்களுக்கு சமீபமாய் நிற்கிறார். உங்கள் இருதயம் பாரப்பட்டிருக்கும்போது, கண்ணீர் புரண்டோடும்போது, பெலன் குன்றும்போது, ஆண்டவர் குனிந்து உங்கள் கூப்பிடுதலுக்குச் செவிகொடுக்கிறார். உங்கள் பாடுகளின்போது, வேதனையின்போது, செவிகொடுக்க யாருமில்லையே என்று நீங்கள் நினைக்கும்போது உங்களைக் கிட்டிச்சேர்க்கிறார். "விட்டுவிடலாம்" என்று நீங்கள் மனஞ்சலிக்கும்போது, ஆண்டவர், "நான் உனக்குச் சமீபமாயிருக்கிறேன்" என்று கூறுகிறார். அவர் தொலைவில் இருக்கும் தேவனல்ல; ஒருபோதும் உங்களை விட்டுவிலகாமல், நெருக்கமாக உங்களைப் பிடித்திருக்கும் அன்பான தகப்பன் அவர்.
என்னுடைய சின்ன குழந்தைகள் அழுதால் என் மனைவி செய்வதை கவனித்திருக்கிறேன். என் மகனோ, மகளோ சிறிதாக விசும்பினாலும், அவள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிப்போவாள். ஒரு தாயால், தன் குழந்தை அழும்போது வெறுமனே நின்று கொண்டிருக்க முடியாது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு அந்தத் தாய், குழந்தையை தேற்றுவதற்காக செல்வாள். நம்மீது ஆண்டவர் அவ்வளவு இரக்கமான அன்பு வைத்திருக்கிறார். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும் தருணத்தில் அவர் ஓடோடி வருகிறார். அவர் தாமதிக்கமாட்டார். அருகே வருகிறார்; ஆறுதல் செய்கிறார்; பதில் கொடுக்கிறார்; சமாதானமும் அருளுகிறார். அநேகர் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், வாசல் மூடப்பட்டிப்பதாக தோன்றினால் மட்டுமே ஜெபிக்கின்றனர். ஆனால், தேவன், அவரோடு ஆழமான உறவில் வாழும்படி, ஆபத்தில் மட்டுமல்ல, தினமும் உண்மையாகவும் ஊக்கமாகவும் தம்மை நோக்கிக் கூப்பிடும்படியும் அழைக்கிறார். அதுவே மெய்யான விசுவாச பயணமாக இருக்கிறது. வேதம், "தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்" (யாக்கோபு 4:8) என்று கூறுகிறது. உங்கள் இருதயம் உண்மையாக இருக்குமானால், உங்கள் ஆவி அவர்மேல் தாகமாயிருக்குமானால் அவர் முன்னெப்போதையும் விட சமீபமாக வருவார்.
அன்பானவர்களே, நீங்கள் தொடர்ந்து தேவனை கிட்டிச் சேர்ந்தால், அவரே உங்களுக்குப் பெலனாவார். தானியேலுக்கு உபத்திரவம் நேர்ந்தபோது மாத்திரமல்ல, தினசரி பழக்கமாக மூன்று வேளை ஜெபித்தான். கர்த்தரை அவன் ஆழமாக நேசித்ததால் அவரை தேடினான். சிங்கங்களின் கெபியிலும் தேவ பிரசன்னம் அவனைச் சூழ்ந்திருந்தது. தேவனுடன் நெருங்கி ஜீவிக்கிறவர்களின் இரகசியம் இதுவாகவே இருக்கிறது. அவர்கள், அவரது பிரசன்னத்தை, அவர் அருளும் பதில்களை, அவரது தயையை அனுதினமும் அனுபவிக்கிறார்கள். குடும்ப ஜெபத்தில் இதை நானே பலமுறை அனுபவித்திருக்கிறேன். நாங்கள் 'ஆமென்' சொல்லுவதற்கு முன்பாகவே பதில், ஒரு தொலைபேசி அழைப்பிலோ, செய்தியிலோ அல்லது வாசற்படியில் யார் மூலமாகவோ வந்து சேர்ந்திருக்கிறது. நம் ஆண்டவர் அவ்வளவு சமீபமாயிருக்கிறார். உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற தம் பிள்ளைகளை நெருங்கி வர அவர் விரும்புகிறார். இன்றைக்கு உங்களை நெருங்கி வருவதற்கு ஆண்டவர் விரும்புகிறார். நீங்கள் தனியே இல்லை. உங்களால் அவரைக் காண முடியாவிட்டாலும் அவர் உங்களுக்கு அருகிலே இருக்கிறார்; உங்களுக்கு பதில் அளிக்க, நினைப்பதற்கு மேலாக உங்களை ஆசீர்வதிக்க ஆயத்தமாயிருக்கிறார்.
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, எனக்குச் சமீபமாக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய கூப்பிடுதலுக்கும் பெருமூச்சுக்கும் நீர் செவிகொடுப்பதற்காக நன்றி. தினமும் உம்மேல் தாகமாயிருக்கும் இருதயத்தை எனக்குத் தந்தருளும். உபத்திரவத்தின்போது மட்டுமல்ல, அன்பினால் உம்மை தேடுவதற்கு உதவி செய்யும். ஆண்டவரே, என்னை கிட்டிச் சேரும்; ஒருபோதும் என்னை விட்டு விலகாதிரும். உம்முடைய பிரசன்னம் என் வீட்டையும் இருதயத்தையும் நிரப்பட்டும். நான் ஜெபித்து முடிப்பதற்கு முன்பாகவே பதில் அளித்தரும். நான் உம்மில் நம்பிக்கையாயிருக்கிறபடியால் என் வாழ்வில் அற்புதங்களைச் செய்வீராக. இன்றைக்கு நான் நற்செய்திகளை கேட்க கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.