அன்பானவர்களே, உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இன்றைய வாக்குத்தத்த வசனம், "ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்" (ஏசாயா 11:1) என்று கூறுகிறது. ஈசாய் என்பவர் தாவீதின் தகப்பனாவார். மேசியா ஒரு துளிராக ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. பாபிலோனுக்கு சென்ற பிறகு தாவீதின் ராஜரீக வம்சம் விழுந்து கிடந்ததை இந்த அடிமரம் குறிக்கிறது. அடிமரம் என்பதை மரணமாக கொண்டால், மரித்தவற்றை உயிர்ப்பிக்கும் வல்லமை தேவனுக்கு இருக்கிறது என்பதையும் குறிப்பதாக கொள்ளலாம். பல தலைமுறைகளுக்குப் பிறகு, மரியாளுக்கும் யோசேப்புக்கும் முன்னணையில் இயேசு பிறந்தார். இந்த உலகிற்கு ஜீவனை, பரிபூரணமாக அளிக்கும்படியாக அவர் வந்தார். ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து நெடுங்காலம் எதிர்பார்க்கப்பட்டிருந்த துளிர் இயேசு ஆவார். தாவீதின் அரச வம்சம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கர்த்தர், இயேசுவுக்கு தாவீதின் சிங்காசனத்தை மறுபடியும் அளித்தார்.

கிளையாகிய இயேசு, சிலுவையில் தொங்கியதினிமித்தம், மனுக்குலத்தின் பாவங்களை அகற்றி உலகிற்கு ஜீவனை அளித்தார். வேதாகமம், "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று கூறுகிறது. ஆனாலும் ஆண்டவர், மரணத்திலிருந்து ஜீவனை அளித்தார். அடிமரம், கிளையாகி செழித்தது. அது இயேசு செய்த ஊழியத்தின் மறுரூபமாக்கும் திறனாகும். வெறுக்கப்பட்ட தாவீதின் மரம் இறுதியாக ஒரு துளிரை விட்டது. அது மரமாக வளர்ந்தது; அதன் இலைகள் தேசங்களுக்கு க்ஷேமத்தை கொடுக்கின்றன. அடிமரத்திலிருந்து எழும்பும் இந்தத் துளிர், நிலைமை இயல்பாக எவ்வளவு செத்ததாக காணப்பட்டாலும், தேவனால் இன்னும் உயிர்கொடுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. உங்கள் வாழ்க்கை எப்படி காணப்பட்டாலும், நீங்கள் மறுபடியும் உயிரடைய முடியும். மனந்தளராதிருங்கள். ஒருபோதும் விட்டுவிடாதிருங்கள். வெளியேற வழியே இல்லை என்று நீங்கள் நினைத்தாலும் தேவன் உங்களுக்கானவற்றை இன்னும் செய்து முடிக்கவில்லை என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் இன்னும் கிரியை செய்துகொண்டிருக்கிறார். செத்துப்போன யாவற்றுக்கும் ஜீவன் அளிக்கிறார். அவரது பலத்த கரத்தினால் உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்.

அன்பானவர்களே, இயேசு அதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தார். உங்களை உற்சாகப்படுத்தும்படியாய் ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். திருப்பூரை சேர்ந்த செல்வராஜ் என்ற சகோதரரும் அவரது அன்னாள் வள்ளியம்மாளும் தேவனுடைய அற்புத வல்லமையைக் குறித்து சாட்சி கூறினார்கள். 2018ம் ஆண்டு சகோதரி வள்ளியம்மாள் தீவிர இருதய வலியினால் பாதிக்கப்பட்டார்கள். மருத்துவர்கள், அவர்கள் இருதயத்தில் இரத்தக் கசிவு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் கூட உயிரைக் காப்பாற்ற முடியாது என்று கூறினார்கள். அவர்கள் மனமுடைந்துபோனார்கள். இன்னொரு மருத்துவமனைக்குச் சென்றார்கள். அங்கும் எந்த நம்பிக்கையும் கிடைக்கவில்லை. அறுவைசிகிச்சைக்கு எட்டு லட்சம் செலவாகும் என்றார்கள். பயந்து போய் ஆறு ஆண்டுகள் மருந்துகளை சார்ந்திருந்தார்கள். வழிபடும் பல இடங்களுக்குச் சென்றனர். யாருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய இயலவில்லை. தெரிந்த ஒருவர் பெதஸ்தா ஜெப மையத்திற்குச் செல்லும்படி கூறினார். அங்கே ஜெப வீரர் ஒருவர் அவர்களுக்காக ஜெபித்தார். அடுத்த ஏழு ஆண்டுகள் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் (ஸ்கேன்) வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றுவதை காட்டின. மருத்துவர்கள் வியந்தனர். இறுதியாக அவர்கள் பூரணமாக குணமாகிவிட்டதாக அறிவித்தனர். இனி எந்த ஆபத்தும் இல்லை; அறுவைசிகிச்சை தேவையில்லை என்றனர். முற்றிலுமாக தேவ கிருபையினால் அந்த சகோதரி குணம்பெற்றார்கள். இன்று அவர்கள் குடும்பமாக ஆசீர்வாதமாக, நன்றியறிதலுடன், சொல்லிமுடியாத ஈவுக்கு, மேசியாவாகிய இயேசுவுக்கு, சுகத்தையும் அற்புதங்களையும் அளிக்கும் கிளைக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறார்கள். இன்று ஆண்டவரின் உயிர்த்தெழுதலின் வல்லமை உங்கள்மேல் வருவதாக. தேவனுக்கு துதியுண்டாகட்டும்.

ஜெபம்:
பரம தகப்பனே, ஈசாயின் அடிமரத்திலிருந்து எழும்பும் கிளையாகிய இயேசு என்ற மேசியாவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லாம் செத்துப்போனதுபோல் காணப்பட்ட என் வாழ்வுக்கு நீ உயிர் கொடுத்தீர். உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமை என் வாழ்வில் இன்று பாய்ந்து வருவதாக. உடைந்த என் உள்ளத்தையும் விடாய்த்த என் ஆத்துமாவையும் தயவாய் உயிர்ப்பியும். என் பயமான தருணங்களை மறுபடியும் ஆனந்தக் களிப்பாக மாற்றும். ஆண்டவரே, என்னை குணமாக்கும். உமக்குள்ளான என் நம்பிக்கையை திரும்ப தாரும்; விசுவாசத்தை புதுப்பியும். உம்முடைய கிருபையின், சுகத்தின் கனி எனக்குள் உண்டாகட்டும். உம்முடைய கிருபைக்கு என் வாழ்க்கை சாட்சியாகட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.