அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய பரிபூரண வாக்குத்தத்தத்திற்குள் நீங்கள் நடத்தப்படும்படி அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள். வேதம், "நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்" (ஆதியாகமம் 21:22) என்று கூறுகிறது. ஆம், நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் தேவன் உங்களுடன் இருக்கப்போகிறார். ஆனால், இந்த எண்ணத்தில் சந்தேகத்தை விதைத்து பிசாசு அதைரியப்படுத்துவான். அவன் தேவ ஜனங்களிடம், "தேவன் உன்னோடு இருக்கமுடியாது. அவருடைய ஆசீர்வாதங்களை பெறுவதற்கு நீ தகுதியானவனா(ளா)? தேவன் ஒத்தாசை செய்யுமளவுக்கு உனக்கு தகுதி இருக்கிறது என்று எண்ணுகிறாயா? நீ பாவியான மனுஷன்/மனுஷி. அவர் எதிர்பார்க்கும் தகுதி உனக்கு இல்லை," என்று கூறுவான். இதுபோன்ற எண்ணங்களை நமக்குள் ஓடச்செய்வதால், இந்த வசனத்தை நம்மை விசுவாசிக்கக்கூடாமல் செய்வான். ஆனால் தமது இரக்கத்தின் காரணமாக நம்மோடு இருக்கும்படியாக தேவன் வருகிறார். நாம் முதலில் அவர்மேல் அன்புகூர்ந்ததினால் அல்ல; அவர் நம்மீது முதலில் அன்புகூர்ந்ததினால் வருகிறார். நம்மீது அவர் முதலாவது அன்புகூர்ந்ததினால் நாம் அவரை நேசிக்கிறோம். அவர் தமது ஜீவனை நமக்காக தந்தார். ஆகவே அதைப்பற்றிக்கொள்ளுங்கள். "இயேசுவே, நீர் உம் ஜீவனை எனக்கு தந்ததால், என்னை உம்முடைய இரத்தத்தால் கழுவியதால், என்னோடு தங்கியிருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்," என்று சொல்லுங்கள். நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உங்களோடு இருப்பதை அறிந்து கொள்வீர்கள்.

தேவன் நம்மோடு இருக்கும்போது, பாதை தவறும்படி நாம் செய்யும் தவறான காரியங்களை அவர் திருத்துவார். அவர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதத்தின் பாதையில் ஜெயமாக நம்மை நடத்துவார். இதுதான் அவரது சித்தம் என்பதை உங்கள் இருதயம் புரிந்துகொள்ளும்படி செய்வார்; பெரிதான சமாதானம் உங்களை நிரப்பும். இந்தப் பாதையில்தான் தேவன் உங்களை நடத்தப்போகிறார். அப்படிப்பட்டதான வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ள உங்களை வழிகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவர் அவற்றை நேராக்குவார். நீங்கள் எதைச் செய்தாலும் அவரிடம் ஒப்படையுங்கள்; அப்போது அவர் உங்களோடிருப்பார்.
சமீபத்தில் என் மகன் ஜேடன் பிறப்பதற்கு முன்பு, அவன் வயிற்றில் இருந்தபோதே, என் மனைவி ஷில்பாவும் நானும் அவனை ஆண்டவருக்கு ஒப்படைத்து, "ஆண்டவரே, உமக்கு பிரியமானபடி அவன் வாழ்க்கையை நடத்துவீராக. நீர் திட்டம் பண்ணியுள்ள பாதைகளில் அவனை நடத்தும். அவன் வாழ்வில் உமக்குச் சித்தமானவற்றை செய்யும்," என்று ஜெபித்தோம். தேவன் ஏற்ற காப்பீட்டை, ஏற்ற மருத்துவரை கண்டுபிடிக்கும்படி எங்களை நடத்தினார். அவனை சுமப்பதற்கு ஷில்பாவுக்கு உதவி செய்து, எல்லா வழிமுறைகளையும் ஆசீர்வதித்து, பிரசவிக்கப்பண்ணினார். அவன் ஆரோக்கியமான குழந்தையாக பிறக்கும்படி செய்தார். எல்லாவற்றையும், ஒவ்வொன்றாக தேவன் கரிசனையாய் கவனித்தார். எல்லாவற்றையும் நாங்கள் பெற்றுக்கொள்ளும்படி வைத்தார். நாங்கள் செய்த எல்லாவற்றிலும் தேவனை கண்டோம். அவர் உங்களுடன் வரவும் காத்திருக்கிறார் என்று நிச்சயமாக கூறுகிறேன். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, நான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் என்னுடன் இருப்பதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு தகுதியில்லை என்று சத்துரு சந்தேகங்கிளப்பினாலும் உம்முடைய இரக்கத்தினால் அன்பினாலுமே நான் நிற்கிறேன் என்பதை நினைவுப்படுத்துகிறீர். இயேசுவே, உம் ஜீவனை எனக்காக தந்ததற்காகவும், என்னை உம் இரத்தத்தினால் கழுவியதற்காகவும், எப்போதும் என்னோடு இருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தவறான பாதையில் செல்லாமல் என்னை காத்து, நீர் எனக்கென்று ஆயத்தம் செய்திருக்கிற ஜெயமும் சமாதானமுமான பாதையில் என்னை நடத்துவீராக. இன்றைக்கு என் வழிகள் எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்; நீர் பாதையை நேராக்குவீர் என்று நம்புகிறேன். நான் செய்கிற எல்லா காரியங்களிலும் நீர் இருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.