எனக்கு அருமையானவர்களே, இந்த 2026ம் ஆண்டிலும் தேவன் உங்களை எழுந்திருந்து கட்டும்படி செய்வார். உங்களுக்கானவையெல்லாம் தேவனால் கட்டப்படும். "கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்" (2 சாமுவேல் 7:11) என்று வேதம் கூறுகிறது. உங்கள் இருதயத்தை, உங்கள் வீட்டை, உங்கள் குடும்பத்தைத் தம் வீடாக ஸ்தாபிப்பார். ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டாரையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் ஆசீர்வதித்ததுபோல, உங்கள் வீட்டையும் அவர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களுக்காக ஒரு வீட்டை உண்டாக்குவார். முதலாவது, அவர் உங்கள் பிள்ளைகளை நிலைக்கப்பண்ணுவார். தேவன், தாவீதிடம் அவன் குமாரனாகிய சாலொமோனைக் குறித்து, "அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்," என்று உரைக்கிறார் (2 சாமுவேல் 7:13). தேவனுக்கு வீட்டைக் கட்டும்படி உங்கள் பிள்ளைகளும் மறுரூபமாக்கப்படுவார்கள். அவர்கள் இருதயங்கள் தேவனிடமாய் திரும்பும். அவர்கள் ஆவி, தேவனுடைய சித்தத்தைச் செய்யும்படியாக தேவ ஆவியுடன் இணைக்கப்படும். தேவன் அவர்களை உயரப்பண்ணுவார்; செழிக்கப்பண்ணுவார்; அவர்கள் தகப்பனாயிருப்பார்; அவர்கள் அவருக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பார்கள். பயப்படாதிருங்கள்.
தேவன், எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவார்? ஒரு அஸ்திபாரத்தின்மேல் கட்டுவார்; அந்த அஸ்திபாரம் இயேசுவாயிருப்பார். இயேசுவே அஸ்திபாரம் என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 3:11). ஆகவே, உங்கள் வீடு, உங்கள் இருதயம், உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் குடும்பம் ஒருபோதும் அசைக்கப்படாது. தாவீது, "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை," என்றும், "ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்," என்றும் கூறுகிறான் (சங்கீதம் 16:8; 46:4,5). நீங்கள் தேவனுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவீர்கள். இந்த ஊழியத்தின் பங்காளரான உங்கள் மூலம், ஆயிரக்கணக்கானோர் தேவனுடைய ஆலயங்களாவார்கள்; மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் சந்தோஷமுண்டாவதால், பரலோகமே மகிழும். ஆகவே, நீங்கள் அசைக்கப்படுவதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பானை கடும் பூமியதிர்ச்சி தாக்கியது. ஒரே ஒரு செல்வந்தனின் மாளிகை தவிர மற்ற எல்லா கட்டடங்களும் விழுந்துபோயின. அந்தக் கட்டடம் மட்டும் எப்படி நிற்கிறது என்று அஸ்திபாரம் ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூலைக்கல்லின் அருகே தோண்டியபோது, பல பொற்காசுகள் வேலைக்காரன் ஒருவன் மேல் கொட்டப்பட்டு, அஸ்திபாரம் போடப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர். அந்த மாளிகை எழும்புவதற்காக அந்த வேலைக்காரன் தன் உயிரையே தியாகம் செய்தான். இது சரித்திரம். ஆனால், சத்தியம் இன்னும் மேலானது. தேவன்தாமே இறங்கிவந்து, நாம் தேவ ஆலயங்களாகக் கட்டப்படும்படி தம்மைத்தாமே பலியாக்கினார். "அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்" என்று வேதம் கூறுகிறது (எபேசியர் 2:20). உங்கள் குடும்பம் முழுவதுமே பரிசுத்த ஆவியினால் கட்டப்படும். அதன்பிறகு தேவன், ஜீவனுள்ள கற்களினால் கட்டுவார். நீங்கள் செத்தக் கற்களல்ல; ஜீவனுள்ள கற்களாயிருக்கிறீர்கள் (1 பேதுரு 2:6). இயேசு, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்," என்று கூறியுள்ளார் (யோவான் 11:25). புயல்கள் வீசலாம்; நெருப்பு எரியலாம்; ஆனால், உங்களுக்குள் இருக்கும் ஜீவன் இயேசுவிடமிருந்து வருவதால் அது ஒருபோதும் எடுக்கப்படாது (யோவான் 6:63).
உங்களுக்குள் இருக்கும் தேவ ஆவியானவர், ஜீவனையும் உயிர்த்தெழுதலையும் கொடுக்கும் தேவ வசனத்தை அளிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு, புற்றுநோயால் மரித்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணிக்காக ஜெபிக்கும்படியாக என் நண்பரின் குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். அப்போது நான் 23 வயது வாலிபனாயிருந்தேன். போதகர், கடைசியாக திருவிருந்து கொடுக்கும்படி வந்திருந்தார். அந்தப் பெண்மணி வேதனையில் முணங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கணவரும் பிள்ளைகளும் அழுதுகொண்டிருந்தார்கள். திடீரென என்னை தேவனுடைய வார்த்தையை பகிர்ந்துகொள்ளும்படி கூறினார்கள். ஆயத்தமே இல்லாமல் சென்றிருந்த என்னை பரிசுத்த ஆவியானவர் யாக்கோபு 5:14,15 ஆகிய வசனங்களை கூறும்படி ஏவினார். நாங்கள் அவர்களுக்கு எண்ணெய் பூசி, சுகம்பெற வேண்டுமென்று விசுவாசத்துடன் ஜெபித்தோம். நான் இயேசுவின் நாமத்தில் வியாதியை சபித்தேன். உடன்தானே அந்தப் பெண்மணி படுக்கையிலிருந்து எழுந்தார்கள்; குணம் பெற்றார்கள்; சந்தோஷமடைந்தார்கள்; தன் பிள்ளைகளைத் தழுவிக்கொண்டார்கள். தேவ ஆவியின் வல்லமை உங்களை ஜீவனுள்ள கற்களாக்குகிறது. ஆகவே, பயப்படாதிருங்கள்.
இறுதியாக, தேவன் உங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலை அமைக்கிறார். வேதம், "அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்," என்று கூறுகிறது (சங்கீதம் 147:14). சாத்தான் தேவனிடம், "நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று," என்று முறையிடுகிறான் (யோபு 1:10). தேவன், உங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலை அமைத்திருப்பதைப் பார்த்ததும் சாத்தான் இப்படியே கதறுகிறான். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு தனித்தனியாக ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அருகே வந்த ஒரு பெண்மணி, "இவரைச் சுற்றி நெருப்பு இருக்கிறது; எரிகிறது," என்று அலறினார்கள். நான் அவர்களைத் தொடாமல் மனதுருக்கத்தோடு, இயேசுவின் நாமத்தில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று ஜெபித்தேன். அவர்கள் விழுந்தார்கள்; விடுதலையடைந்தார்கள்; பூரண குணத்தோடு, சமாதானத்துடன் எழுந்தார்கள். அன்பானவர்களே, உங்களைப் பாதுகாக்கும்படியே அக்கினி இருக்கிறது. "உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக," என்று வேதம் கூறுகிறது (2 சாமுவேல் 7:29). பயப்படாதிருங்கள். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்; அவர், நீங்கள் எழுந்திருந்து கட்டும்படி பெலப்படுத்துவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் இருதயத்தை, என் வீட்டை, என் குடும்பத்தை உம் அன்பின் கரங்களில் அர்ப்பணிக்கிறேன். என் வாழ்வுக்கும் குடும்பத்துக்கும் திடமான அஸ்திபாரமாக விளங்குவீராக. உம் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஜீவனுள்ள கற்களாக எங்களைக் கட்டுவீராக. நீர் வாக்குக்கொடுத்தபடியே தயவாய் எங்களை அக்கினி மதிலால் சூழ்ந்துகொண்டு உம் சமாதானத்தால் எங்களை நிரப்புவீராக. எங்கள் வாழ்வில் நீர் ஸ்தாபித்திருக்கிறவற்றை எதுவும் அசைக்காதிருக்கட்டும். உம் நாமத்திற்கு மகிமை கொண்டு வரும்படியாக எங்களைப் பயன்படுத்தும். ஸ்தோத்திரம் செலுத்தி உம் ஆசீர்வாதங்களை இயேசுவின் வல்லமையான நாமத்தில் பெற்றுக்கொண்டு ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


