நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்" (நியாயாதிபதிகள் 6:12) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனம். அருமையானவர்களே, கர்த்தராகிய தேவன் நம்மோடு இருக்கும்போது, நமக்கு இந்த ஆச்சரியமான வாக்குத்தத்தம் நிறைவேறுவதை காணலாம். தேவனால் நம்மை பலத்த பராக்கிரமசாலியான மனுஷனாக, மனுஷியாக மாற்ற முடியும். வேதம், "பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்" (சகரியா 10:7) என்று கூறுகிறது.

இந்தச் சத்தியத்திற்கு தாவீதின் வாழ்க்கை அருமையான உதாரணமாகும். வேதம், தாவீதை, பராக்கிரமசாலி என்று கூறுகிறது (1 சாமுவேல் 16:18). ஆனாலும், தாவீது எளிமையான மேய்ப்பனாக இருந்தான். அவன் எளிய பின்னணியிலிருந்து வந்தான்; மற்றவர்களின் பார்வைக்கு முக்கியமல்லாதவனாக காணப்பட்டான். ஆனாலும் தேவன் அவன் தகுதியைக் கண்டு அவனை பலமான பராக்கிரமசாலியாக்கினார். பிறகு, தாவீது, இராட்சதனாகிய கோலியாத்தை எதிர்கொள்ளச் சென்றபோது, அவனிடம் எந்தப் பட்டயமும் இல்லாதிருந்தது. அவன் ஒரு கவணையும் கல்லையுமே கொண்டு சென்றான். கோலியாத்தோ வலிமையான சேவகன். பாதுகாப்புக்கு கனத்த கேடகத்தையும் பிடித்திருந்தான்; பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தான். ஆனாலும் தாவீது, கர்த்தரை நம்பினான். வேதம், "தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்" (1 சாமுவேல் 17:50) என்று கூறுகிறது. இங்கே வெற்றியை அருளியது தாவீதின் பெலனல்ல; அவன் வாயிலாக செயல்பட்ட தேவனுடைய வல்லமையே வெற்றியை தந்தது.

அருமையானவர்களே, இயேசு நம்மோடு இருக்கும்போது, அவர் நம்மை பெலப்படுத்துவார். தாவீது, திடநம்பிக்கையுடன், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" என்று கூறுகிறான். கர்த்தர், உங்களுக்கு மேய்ப்பராகும்போது, அவர் உங்களை வழிநடத்துகிறார்; பாதுகாக்கிறார்; பெலப்படுத்துகிறார்; உங்கள் வாழ்க்கையை முற்றிலுமாய் ஆசீர்வதிக்கிறார். அவர் உங்கள் பட்சத்தில் இருக்கும்போது, உங்களால் எல்லா சவால்களையும் மேற்கொள்ளமுடியும்; அவரது மகிமைக்காய் பயங்கர பராக்கிரமசாலியாக முடியும். ஒருவேளை இன்று நீங்கள் பெலவீனமாக, அதைரியமாக, பெலன் குன்றியதுபோல் உணரலாம். கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என்று எண்ணலாம். உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணித்தால், தாவீதைப் பெலப்படுத்தியதுபோன்றே உங்களையும் பெலப்படுத்துவார். உங்களை ஜெயம்பெறப்பண்ணுவதற்கு அவரது சமுகம் மாத்திரமே போதுமானதாகும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் மேய்ப்பராகவும், பெலனாகவும், அடைக்கலமாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பெலவீனமான மனுஷியாகவும் / மனுஷனாகவும், தகுதியில்லாதவளாகவும் / தகுதியில்லாதவனாகவும் காணப்பட்டாலும் என்னை பெலப்படுத்த உம் சமுகமே போதுமானது என்று விசுவாசிக்கிறேன். என்னை உம் வல்லமையால் நிரப்பி, உம் மகிமைக்கென்று பயங்கரமான பராக்கிரமசாலியாக மறுரூபமாக்கும். எல்லா சவால்களையும் மேற்கொள்ள என் இருதயத்தை பெலப்படுத்துவதோடு, பயத்தையும் அதைரியத்தையும் என்னை விட்டு அகற்றும். உம் ஐசுவரியத்தின்படி என் தேவைகள் யாவற்றையும் அருளிச்செய்யும்; போராட்டங்கள் எல்லாவற்றிலும் எனக்கு ஜெயத்தை தந்திடும். உம் பலத்த கரம் என்மேல் அமர்ந்து, எல்லா சூழ்நிலையிலும் முழுவதுமாக உம்மை நம்புவதற்கு உதவி செய்யும். அனுதினமும் உம் பெலத்தில் நடந்து உம் நாமத்திற்கு மகிமையை கொண்டுவருவதாக என் வாழ்க்கை விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.