இந்த மாதத்தில், தேவன், "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19) என்ற வாக்குத்தத்தத்தை தருகிறார். நம் தேவன், அருளிச்செய்கிற அன்பான தகப்பனாயிருக்கிறார். நன்மையானவை எல்லாம், பரிபூரணமான ஈவுகள் எல்லாம் அவரிடமிருந்தே வருகின்றன (யாக்கோபு 1:17). அவர் குறைவிலிருந்து கொடுப்பதில்லை; மாறாக, தமது ஐசுவரியத்திலிருந்து கொடுக்கிறார். அவர் உதாரகுணமுள்ளவராகவும், கனிவு கொண்டவராகவும், தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்க பிரியமானவராகவும் இருக்கிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. பூமிக்குரிய பெற்றோர், நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதா தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை கொடுப்பது நிச்சயம் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 7:11). நமக்கு சிறந்தவற்றை தருகிறதற்கு அவர் விரும்புகிறார். அவர் உலகப்பிரகாரமான நன்மைகளை மட்டும் தருகிறவரல்ல, எல்லாவற்றையும் விட சிறந்த பரிசுத்த ஆவியையும் தருகிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் அளவில்லாமல் நிறைந்திருந்தார் (யோவான் 3:34). அதே ஆவியானவர் இன்றைக்கும் உங்களுக்குக் கிடைக்கிறார். கேட்கிற எவனுக்கும் அவர் கொடுக்கிறார் (லூக்கா 11:13). தாகமாயிருக்கிறவன் எவனோ, அவன் வந்து தம்மிடம் பானம்பண்ணும்படி அவர் அழைக்கிறார். அப்போது ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு ஓடும் என்கிறார் (யோவான் 7:37-39). அது பரிசுத்த ஆவியின் நதி. இன்றைக்கு தேவன் உங்களை புதுமையும் வல்லமையுமான வழியில் நிரப்ப விரும்புகிறார்.
1980ம் வருடம் எனக்கு 18 வயதாயிருந்தபோது, இயேசு என் வாழ்க்கையை மாற்றினார். நான், "ஆண்டவரே, பரிசுத்தமாய் வாழ எனக்கு பெலனில்லை," என்று அழுதேன். ஆவியானவர் நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார் (ரோமர் 8:26). ஒருநாள் இரவு முழுவதும் நான் ஜெபித்தேன். அடுத்த காலை, சந்தோஷம் எனக்குள் நிரம்பி வழிந்தது. தேவ பிரசன்னம் என்னை நிறைத்ததால் நான் அசைந்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னை நிறைத்ததால், நான் நவமான பாஷைகளை பேசினேன். என் இருதயம் தேவனுடைய ஆலயமாயிற்று. அன்றிலிருந்து பரிசுத்த ஆவியானவர் என்னுடைய நெருங்கிய நண்பராக, என்னை அனுதினமும் வழிநடத்துகிறார். நீங்களும் இந்த சந்தோஷத்தை பெற்றுக்கொள்ளலாம். தேவன் உங்களை நிரப்புவதற்கு, உங்களுக்கு அருளுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.
தேவன், விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுத்து நிறைவான அறுவடையை பெறும்படி செய்கிறார். அவர் ஜீவனை அருளுகிறார். இயேசு, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான் 11:25) என்று கூறுகிறார். நீங்கள் ஜீவனற்றதுபோல், பாவத்தில் பிடிபட்டதுபோல் உணர்ந்தாலும், அவர் உங்களை எழுப்பி பரிசுத்தத்தில் நடக்கப்பண்ணுவார். இயேசு பரிபூரண ஜீவனை தரவே வந்தார் (யோவான் 10:10). நீங்கள் அவரை கிட்டிச்சேர்ந்து நடப்பதை உலகத்தில் எந்தக் காரியத்தாலும் அழிக்க முடியாது.
நாம் எப்படி தேவனிடமிருந்து பரிபூரணத்தை பெற்றுக்கொள்ளலாம்? இயேசு, "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்" (லூக்கா 6:38) என்று சொல்லுகிறார். உங்கள் தேவைகளின் மத்தியில் நீங்கள் கொடுக்கும்போது, மற்றவர்கள் உங்களை ஆசீர்வதிக்கும்படி செய்வார். தசமபாகங்களை அவரிடம் கொண்டு வரும்போது வானத்தின் பலகணிகளை திறப்பார் (மல்கியா 3:10). ஆண்டவரை உங்கள் ஆஸ்தியாலும் முதற்பலனாலும் கனம் பண்ணினால், அவரது பெருக்கம் உங்களுக்குக் கிடைக்கும் (நீதிமொழிகள் 3:9). உங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கொடுப்பதே ஆசீர்வாதத்திற்கான காரணமாயிருக்கும். நீங்கள் தேவனை முகமுகமாய் காணாமல் இருக்கலாம்; ஆனால், ஆத்துமாக்களை ஆறுதல்படுத்துகிற, சுகப்படுத்துகிற, இரட்சிக்கிற ஊழியத்திற்கு கொடுக்கலாம். இந்த ஊழியங்கள் தேவனை சார்ந்திருக்கின்றன. நீங்கள் கொடுப்பதை அவர் பெருகப்பண்ணுகிறார். தன் படகை இயேசுவுக்குக் கொடுத்த பேதுரு, அதிக மீன்களைப் பிடித்ததுபோல, யார் தமது ஊழியத்திற்குக் கொடுக்கிறார்களோ அவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்.
ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சகோதரி லதா பாலன் ஆச்சாரியாவும் அவர்கள் கணவரும் மும்பையில் மிகுந்த வறுமையின் மத்தியில் வசித்து வந்தார்கள். ஒருநாள் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்து தேவனுடைய அன்பை உணர்ந்தார்கள். அவர்கள் சில நாணயங்களை காணிக்கையாகக் கொடுத்தார்கள். மேடையில் எழுதப்பட்டிருந்த 'உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' என்ற வாசகம் அவர்கள் கண்களில்பட்டது. விரைவிலேயே அவர்கள் கணவருக்கு நல்ல வேலை கிடைத்தது; அவர்கள் மகள் தேர்வில் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்றாள். இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு அவர்கள் உண்மையாய் கொடுத்தார்கள்; தேவன் அவர்கள் வருமானத்தை பெருகப்பண்ணி, வீட்டையும் காரையும் கொடுத்தார்; கனத்தை திரும்ப கொடுத்தார். ஆம், தேவன் உங்களுக்கும் அப்படியே செய்வார். கொடுங்கள், அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும். அவரை நம்புங்கள்; அப்போது அவர் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக அருளிச்செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் வேண்டிய எல்லாவற்றையும் அருளிச்செய்கிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என் தேவைகள் எல்லாவற்றையும் கிறிஸ்து இயேசுவுக்குள் அருளிச் செய்வதாக வாக்குக்கொடுத்திருக்கிறீர். இப்போது உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னை அளவில்லாமல் நிரப்பும். ஜீவத்தண்ணீருள்ள நதிகள் இப்போதே எனக்குள் பாய்ந்து செல்லட்டும். என்னுடைய குறைவின்மீது அல்ல; உம்முடைய பரிபூரணத்தின்மேல் நம்பிக்கை வைப்பதற்கு எனக்கு உதவும். என்னுடைய தேவைகளின்போதும், உற்சாகமாகக் கொடுக்க எனக்குக் கற்பித்தருளும். வானத்தின் பலகணிகளைத் திறந்து, உம்முடைய நிறைவான ஆசீர்வாதங்களை என்மேல் ஊற்றும். ஆண்டவரே, நான் உம்முடைய பரிசுத்தத்தில் நடந்து, உம்முடைய பரிபூரண ஜீவனை பெற்றுக்கொள்ள உதவும். எனக்கு இருக்கிறவற்றைக் கொண்டு நான் உம்மை கனப்படுத்தும்படி வழிநடத்தும். எனக்கு நீர் உண்மையுள்ளவராக, ஆசீர்வதிக்கிறவராக, எல்லாவற்றையும் அருளிச்செய்கிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.