அன்பானவர்களே, இன்றைக்கு சிறுகுழந்தையைபோல நம்மை சுமந்து செல்வதற்கு ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். "தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்" (யோபு 5:10) என்ற வாக்குத்தத்தத்தை நமக்கு தருகிறார். ஆம், வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருப்பதாக, உதவியின்றி போராடுவதாக யாராவது நினைத்தால், ஆண்டவர் அவர்களை உயரத்தில் அமர்த்துகிறார். ஆனால், உலகம் அப்படி செயல்படவில்லை. ஒருமுறை, ஒரு தேசத்தையும் அங்குள்ள அரசாங்கத்தையும் குறித்து யாரோ ஒருவர் கூறிய கருத்தைக் கேட்டேன். அந்த அரசாங்கம் ஒரு நோக்கத்துடனே மக்களை மட்டம் தட்டி வைத்துள்ளதாக கூறினார். படிப்பறிவு கொடுக்காமல், வறுமையில் வாழும்படி, உயர்வதற்கு வாய்ப்பு அளிக்காமல் வைத்திருப்பதாக கூறினார். ஆனாலும் ஊழல் செய்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பணத்தை, சொத்துகளை, நிலத்தை எடுத்து, அதிகாரத்தில் இருப்பவர்கள் ஐசுவரியவான்களாகும்படி, ஆளுகை செய்யும்படி, அரசாங்கத்தை நம்பி பிழைக்கும்படி மக்களை வெறுங்கையாக விட்டு வைத்திருக்கிறார்கள்.
உலகம் இப்படி செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் தேவனுடைய உள்ளம் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. அவர் தாழ்ந்தவர்களை உயர்த்தி, துக்கப்படுகிறவர்களை தூக்கியெடுப்பார். தம் பிள்ளைகள் ஒடுக்குதலின் கீழ் இருப்பதையோ அல்லது தாழ்ந்த நிலையில் இருப்பதையோ அவர் விரும்புவதில்லை. "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" என்று கள்ளனிடம் சிலுவையில் கூறியதுபோல, அவர் பரலோகத்தில் நமக்கென்று மகிமையான இடத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். தம் பிள்ளைகளை, தம்முடன் உயர்வான இடத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனாலும் தேவன் உங்களை உயர்த்தும்போது, அவருக்கு முன்பாக தாழ்மையாக இருக்கவும், உள்ளத்தில் தாழ்மையை கொண்டிருக்கவும் மறவாதிருங்கள். அப்போது அவர் மறுபடியுமாய் உங்களை உயர்த்துவார். பெருமை உங்கள் ஆவிக்குள் நுழைந்து நீங்கள் உங்களையே உயர்த்தினால், ஆண்டவரால் உங்களை உயர்த்த இயலாது. தேவன் உங்களை தொடர்ந்து உயர்த்துவதற்கு பரிசுத்தமும் தாழ்மையும் வழியுண்டாக்கும்.
ஆகவே, தாழ்ந்தவர்களை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள். அவர்களை தாழ்வாக எண்ணாதீர்கள். ஏனெனில் தேவன் அவர்களை உயரத்தில் அமர்த்த தீர்மானித்துள்ளார். அவர்களை நேசியுங்கள். பாதையில் அவர்களை பார்க்க நேரிடும்போது அவர்களுக்காக ஜெபியுங்கள்; உதவுங்கள். ஆண்டவர் தமது இருதயத்தை உங்களுக்குத் திறந்ததுபோல, தாழ்ந்தவர்களுக்காக உங்கள் இருதயத்தை திறந்திடுங்கள். இன்றைக்கு ஆண்டவரிடமிருந்து உயர்வு என்னும் ஆச்சரியமான ஈவை பெற்றுக்கொள்வோம்; அவரது கரத்தினால் உயர்த்தப்பட்டு சந்தோஷத்துடன் நடப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, தாழ்ந்தவர்களை உயரத்தில் அமர்த்தி, துக்கப்படுகிறவர்களை ஆறுதல்செய்கிற உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என்னுடைய வேதனையை, அனுதின போராட்டங்களை, மௌனமாக வடிக்கும் கண்ணீரை நீர் காண்கிறீர். என்னை உயரத்தில் அமர்த்துவதாகவும் உம்முடைய சமுகத்தில் மகிமையான இடத்தை ஆயத்தம்பண்ணுவதாகவும் வாக்குப்பண்ணுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னை உயர்த்துவதற்கு ஆயத்தமாக என் உள்ளத்தை தாழ்மையாகவும் என் ஆவியை சுத்தமாகவும் காத்துக்கொள்ளும். நீர் எனக்கு உதவியதுபோல், தாழ்விலுள்ளவர்கள்பேரில் அன்புகூரவும், அக்கறை காட்டவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், உதவவும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். உம்முடைய மனதுருக்கத்திற்கும் கிருபைக்கும் என் வாழ்க்கை சாட்சியாக விளங்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.