எனக்கு அருமையானவர்களே, இன்றைக்கும் செப்பனியா 3:17-ஐ தியானிக்கப்போகிறோம். "உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார். அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார்". ஆம், நம்முடைய ஆண்டவர் நமக்கு தூரமானவரல்ல. அவர் நம் நடுவில்தான் இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்ததினிமித்தம், அவர் நம்மை இரட்சிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். அவர் நம்மை கண்டிக்கிறவரல்ல. அவர் நம்மில் அன்புகூருவது மட்டுமல்ல, நம் பேரில் கெம்பீரமாய் மகிழ்ந்து களிகூருகிறார். எப்படி அவர் நம்மிடத்தில் கெம்பீரமாய் களிகூருகிறார்? ஏசாயா 62:5-ல் நாம் அதைப் பார்க்கிறோம். மணவாளன் மணவாட்டியின்மீது மகிழ்ச்சியாய் இருப்பதுபோல, தேவன் உங்கள்மீது மகிழ்ச்சியாயிருப்பார். ஆம் பிரியமானவர்களே, ஒரு புதுமணத் தம்பதியர் எப்படி ஒருவரையொருவர் அளவில்லாமல் நேசிக்கிறார்களோ, அதே அன்பு, அதே நேசம் ஆண்டவர் உங்கள்மீது வைக்கிறார். அது, ஆழமானது, அகலமானது, உயரமானது. அவர் தம்முடைய அன்பினிமித்தமாக உங்கள் இருதயத்திலே வந்து அமருகிறார்.

லூக்கா 24-ம் அதிகாரத்தில் பார்க்கும்பொழுது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தப்பின்பு, அவருடைய சீஷர்கள் மிகுந்த துக்கத்தோடு காணப்பட்டார்கள். இயேசுவை நாம் இனிமேல் பார்க்கவே முடியாதோ என்ற துக்கம். எம்மாவூர் கிராமத்தில், அவர்கள் நடந்துபோய்க்கொண்டிருந்தபொழுது, இயேசு அவர்களுக்கு முன்பாக தோன்றினார். ஆனாலும், அவர்கள் அவரை அறியாதபடிக்கு, அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. இயேசு திரும்பவும் உயிர்த்தெழுவார், என்ற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களே என்று அவர் அவர்களை கண்டிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர்களிடத்திலே அன்புகூர்ந்தார். அவர்களிடத்தில் தன்னை விவரித்து விளக்கிச் சொன்னார். முதலிலிருந்து கடைசி வரைக்கும் வேதாகமத்திலே தன்னைக் குறித்து எழுதப்பட்ட வேத பகுதிகளை அவர் அவர்களுக்கு விளக்கிக் காட்டினார். அப்பொழுது அந்த இரண்டு சீஷர்களும் ஒருவரையொருவர் பார்த்து, வேத வாக்கியங்களை இயேசு நமக்கு விளக்கிக் காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள் கொழுந்துவிட்டு எரியவில்லையா? என்று சொன்னார்கள்.

ஆம் பிரியமானவர்களே, அப்படிப்பட்ட ஆழமான அன்பு கொண்டவர்தான் நம்முடைய இயேசு. அதற்காகவே நாம் ஒவ்வொருநாளும் வேதத்தை வாசிக்கிறோம். அதன் மூலமாக நாம் இயேசுவை நம்முடைய இருதயங்களிலே ஏற்றுக்கொள்கிறோம். அதினிமித்தம் அவருடைய அன்பினால் அதிகமதிகமாக நாம் நிறைந்துகொள்கிறோம். ரோமர் 10:17 சொல்லுகிறது, "விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும்" என்று சொல்லுகிறது. ஆம் பிரியமானவர்களே, ஒவ்வொருநாளும் வேதத்தை வாசிக்கும்பொழுது, வசனத்தின் மூலமாக இயேசுவை உங்களுக்குள் எடுத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது ஆண்டவருடைய அன்பினால் நீங்கள் நிரம்புவீர்கள். ஒரு தாயைப் போல அவர் உங்களை நேசிப்பார். உலகத்திலே பாடுகள் உண்டு. வேதனைகள் உண்டு. ஆனால், அதன் மத்தியில் ஆண்டவர் நமக்கு சமாதானத்தைத் தருவார். இயேசு என்னோடு இருக்கிறார். என் நடுவில் இருக்கிறார். என்று நீங்கள் தைரியமாய் சொல்லும்படி கிருபை செய்வார். கர்த்தர் தாமே தமது அன்பினிமித்தம் உங்களுக்குள்ளே அமர்ந்திருப்பாராக.

ஜெபம்: 
அன்புள்ள ஆண்டவரே, என்மீது நீர் அன்புள்ளவராய் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என்னை நேசிக்கிறவர் மாத்திரமல்ல, எனக்குள் இருந்து களிகூர்ந்துகொண்டிருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்புவீராக. நான் அமிழ்ந்துபோகாதபடி என்னை ஆற்றித் தேற்றுவீராக. என்னுடைய நித்திரை இன்பமாய் இருக்க என்னை உம்முடைய சமாதானத்தினால் நிறைப்பீராக. உம்முடைய அன்பு எனக்குள் பொங்கி வழிவதாக. நீர் எனக்குள் இருந்து களிகூர்ந்துகொண்டிருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.