எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய தினமாகிய செப்டம்பர் 4, என் அருமை மகன், என் சுதந்தரமாகிய பால் பிறந்தநாள். ஆண்டவர்தாமே அவனை ஆசீர்வதித்து, தம் மகிமைக்கென மேன்மேலும் பயன்படுத்துவாராக.
இன்றைய வாக்குத்தத்த வசனம், "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்" (கொலோசெயர் 3:15) என்று கூறுகிறது.
இந்த உலகில் பற்பல கவலைகளால் நாம் துயருகிறோம். பல எதிர்மறை காரியங்களும் பணத்தேவைகளும் நம்மை சூழ்ந்திருக்கின்றன. நாம் விரும்பும் பல காரியங்கள் நம் வாழ்வில் இல்லாதிருக்கலாம். குழந்தையோ, பணமோ, சமாதானமோ இல்லாதிருக்கலாம். அப்படிப்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் நம் உள்ளங்களை உபத்திரவப்படுத்தலாம்.
ஆனால், வேதம், "கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்," (எண்ணாகமம் 6:26) என்று கூறுகிறது. கர்த்தரின் முகம் உங்கள்மேல் காணப்படும்போது, இப்படிப்பட்ட தெய்வீக சமாதானத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
நாம் என்ன செய்யவேண்டும்? தேவனை விசுவாசித்து, அவருடைய சமுகத்தில் காத்திருக்கவேண்டும். "ஆண்டவரே, எனக்கு சமாதானமே இல்லை. என் வீட்டில் சமாதானம் காணப்படவில்லை. அப்பா, உமது சகல மகத்துவத்தோடும் வந்து என்னை நிரப்பும்; உம் சமுகத்தால் என்னை நிரப்பிடும்," என்று கூப்பிடுங்கள்.
வேதம், ஆண்டவராகிய இயேசு நம் மீறுதல்களுக்காக காயப்பட்டதாகவும், நம் அக்கிரமங்களுக்காக நொறுக்கப்பட்டதாகவும் கூறுகிறது; நமக்கு சமாதானத்தை உண்டாக்கும் ஆக்கினை அவர்மேல் வந்தது என்றும் எழுதப்பட்டுள்ளது (ஏசாயா 53:5). ஆகவே, அவர் பாதத்தில் காத்திருப்போம்.
இரண்டாவதாக, நாம் அவரை நோக்கிக் கூப்பிடவேண்டும். அப்போது ஆண்டவர் தம் தெய்வீக சமாதானத்தை நமக்குத் தந்தருள்வார். சமாதானமில்லையா? இப்போதே ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுவோம்; ஆண்டவர் தம் தெய்வீக சமாதானத்தால் நம்மை நிரப்புவார்.
ஜெபம்:
அருமையான பரம தகப்பனே, நீர் சமாதானத்தின் கர்த்தராயிருக்கிறீர். எங்களுக்கு சமாதானம் இல்லையென்பதால் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். தகப்பனே, பிசாசு அநேக உபத்திரவங்களை எங்கள் வாழ்வில் கொண்டு வந்துள்ளான்; எங்களுக்கு அநேக தேவைகள் உள்ளன. இவற்றால் நாங்கள் சமாதானத்தை இழந்துபோனோம். உம் பிள்ளைகள் கதறுகிறார்கள். தகப்பனே, உம் சகல மகத்துவத்தோடும் வந்து, கதறும் ஒவ்வொருவர் மேலும் உம் அருமையான கரத்தை வைப்பீராக. எல்லா புத்திக்கும் மேலான உம் தெய்வீக சமாதானத்தால் அவர்களை நிரப்புவீராக. கவலைகள், உபத்திரவங்கள் யாவற்றையும் அகற்றி அவர்கள் மகிழ்ந்து களிகூரும்படி செய்வீராக. உம் சமுகம் எல்லா இல்லத்தையும் உள்ளத்தையும் நிரப்புவதாக. இயேசு கிறிஸ்துவின் வாயிலாக எங்களுக்கு சமாதானத்தை அளிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


