அன்பானவர்களே, நீங்கள் இன்று ஆண்டவரை தேடுகிறபடியால் அவரது வெளிச்சம் உங்கள்மேல் பிரகாசிக்கும். இன்றைக்கு, "தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்" (நீதிமொழிகள் 30:5) என்ற வசனத்தின் வாயிலாக அவரது ஆச்சரியமான சத்தத்தைக் கேட்போம். அவரில் அடைக்கலம் காண்கிறவர்களுக்கு ஆண்டவர் கேடகமாயிருக்கிறார். உண்மையாகவே, தேவனுடைய வார்த்தைகள் புடமிட்டவையாக இருக்கின்றன. அவர் உரைக்கிற வார்த்தை ஒன்றும் கிரியை செய்யாமல் தரையில் விழாது. ஒரு வார்த்தைக் கூட நிறைவேறாமல் போகாது. தேவனுடைய வார்த்தையின் வாயிலாக அவர் உங்களோடு பேசும்போது, உங்கள் இருதயம் கொழுந்துவிட்டு எரியும். உங்களுக்கு ஆசீர்வாதம் வரும்படி களிகூர்ந்து அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு சந்தேகமோ, பயமோ இருக்காது.
ஆம், அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தை நம் வாழ்வில் நிறைவேறுவதற்கு சில காலம் ஆகலாம்; அது நிச்சயமாக வரும். அந்த நம்பிக்கையோடு, நம்மைக் குறித்து கர்த்தர் அந்த வார்த்தையை உரைத்ததற்காக களிகூருவதுடன் அதை நமக்கென்றும் எடுத்துக்கொள்வோம். இந்த வசனம் அவரை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார் என்றும் கூறுகிறது.
அவரை அண்டிக்கொள்வது என்றால் என்ன? தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து அவர் வார்த்தையைப் பெற்றுக்கொள்வதே ஆகும். அவரது வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, உண்மையாக தேவனை அண்டிக்கொள்கிறீர்கள். பாதுகாப்பாக இருப்பதாக எண்ணி ஒரு கட்டடத்துக்குச் செல்வதல்ல. நீங்கள் அடைக்கலம் பெற்றதாக நம்பி ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதல்ல. தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வதாகும். இந்த வார்த்தை உங்களைப் பாதுகாக்கும்; வசனத்தின்படியே எல்லா ஆசீர்வாதங்களையும் கொண்டு வரும். அதுவே தேவனில் அடைக்கலம் கொள்வதாகும். நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்போது, வெளிப்புற தாக்குதல்களுக்கு நீங்கலாக இருப்பதை எண்ணியே பாதுகாப்பு என்கின்றனர்.
வீட்டில் பெற்றோரிடம் நற்காரியங்களைக் கற்றுக்கொள்ளும்போது, சிறுபிள்ளைகள் தெருக்களில் காணப்படும் தவறான காரியங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். உலகில் கற்றுக்கொள்ளக்கூடிய தவறான வழிகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். அவ்வாறே தேவனுடைய வார்த்தை நல்லது செய்ய நம்மை ஊக்குவிப்பதோடு நம்மையும் சுகமாக காத்துக்கொள்ளும். அது நமக்குக் கேடகமாவதோடு, நம் ஜீவனை, நம் பாதையை பாதுகாக்கும். அவரது வார்த்தை கபடற்றது.
ஜெபம்:
பரம தகப்பனே, உம் வார்த்தை புடமிடப்பட்டது; எல்லா சூழ்நிலையிலும் மெய்யானதாகவும் வல்லமையானதாகவும் இருக்கிறது. உம் வாக்குத்தத்தங்களை அடைக்கலமாகக் கொண்டு உம்மிடம் வருகிறேன். சந்தேகமோ, பயமோ இல்லாமல் உம்மை நம்புகிறேன். ஆண்டவரே, உம் சத்தியத்தில் என் எண்ணங்களை வழிநடத்தி, அனுதினமும் சரியான பாதையில் என்னை நடத்தும். தீமையிலிருந்தும், வியாதியிலிருந்தும் என்னை பாதுகாத்தருளும்; உம் கிருபை என்னை சூழ்ந்துகொள்ளட்டும். தகப்பனே, உம் வசனத்தின்மீது எனக்கு ஆழமான தாகத்தை தாரும்; என் இருதயம் எப்போதும் உம் சத்தத்துக்குச் செவிகொடுக்கட்டும். உம் வார்த்தை எனக்குள் ஜீவித்து, அற்புதங்களை, ஆசீர்வாதங்களை தருவதோடு என் வாழ்க்கையையும் மறுரூபப்படுத்துவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


