எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய வாக்குத்தத்த வசனம், "வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்" (சங்கீதம் 107:37) என்று கூறுகிறது. தம் பிள்ளைகளை கனிகளினாலும் பரிபூரணத்தினாலும் ஆசீர்வதிக்கவேண்டுமென்ற தேவனின் விருப்பத்தை இந்த வசனம் காட்டுகிறது. இதுபோன்ற ஆசீர்வாதத்தை நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? வேதத்தில் அதற்கான விடை உள்ளது (சங்கீதம் 107).
வேதம், "கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது," (சங்கீதம் 107:1) என்று கூறுகிறது. 31, 32 ஆகிய வசனங்கள் தேவனுடைய கிருபை என்றென்றைக்கும் இருக்கும் என்று நினைவுப்படுத்துகின்றன. தேவனுடைய ஆசீர்வாதங்களை நம் வாழ்வில் அனுபவித்திட ஸ்தோத்திரித்தல் முக்கியமானதாகும். தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டால் மாத்திரம் போதாது; அவர் செய்யும் நன்மைக்காக நம் இருதயத்தை நன்றியுள்ளதாக்கிக்கொள்ளவேண்டும்.
எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை ஸ்தோத்திரிக்கவேண்டும் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. அவரது அன்பின் கரத்திலிருந்தே நாம் எல்லா ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்கிறோம். நம்முடைய தினசரி உணவை உண்பதற்கு முன்பாகவும் நாம் நிதானித்து, தேவன் அதைத் தந்ததற்காகவும் நம் பேரில் அக்கறையாயிருப்பதற்காகவும் ஸ்தோத்திரிக்கவேண்டும். வழக்கமாக என் தாயார் செய்யும் ஒரு செயல் எனக்கு நினைவுக்கு வருகிறது. பென்சிலோ, பேனாவோ, புத்தகமோ, ஆடையோ எதை எனக்கு புதிதாக வாங்கினாலும் அதை முதலாவது ஆலயத்துக்குக் கொண்டு செல்லுமாறு கூறுவார்கள். அங்கே நாங்கள் அதை ஆண்டவருக்கு அர்ப்பணித்து, தேவன் அதை ஆசீர்வதிப்பார் என்ற விசுவாசத்துடன் ஜெபிப்போம். அது அவர்களின் எளிமையான, ஆனால் வல்லமையான விசுவாசத்தின் வெளிப்பாடாகும். எல்லா ஈவும் தேவனிடமிருந்தே வருகிறது என்றும், ஸ்தோத்திரத்தோடே அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் விசுவாசித்தார்கள்.
அவ்வண்ணமே, எனக்கு அன்பான தேவ பிள்ளையே, சிறிதோ, பெரிதோ ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்காகவும் தேவனை துதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அவரது செயலை நாம் ஒத்துக்கொள்வதோடு, உண்மையாய் அவரை ஸ்தோத்திரிக்கும்போது நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்க அவர் பிரியப்படுவார். தேவன், எளியவனை சிறுமையினின்று தூக்கி, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 107). தம்மை நம்புகிறவனை கர்த்தர் உயர்த்தி, அவனை தம் நன்மையினால் நிரப்புகிறார். தேவனுடைய பரிபூரண கிருபைக்கும் அருட்கொடைக்குமான வாசலை நன்றியுள்ள இருதயமே திறக்கும்.
ஆபிரகாமின் வாழ்வைப் பாருங்கள். அநேக ஆண்டுகள் அவனுக்குக் குழந்தை இல்லாத நிலையிலும் அவன் தேவனையும் அவரது வாக்குத்தத்தங்களையும் நம்பிப் பற்றிக்கொண்டான். தேவன் அவனுக்கு ஒரு குமாரனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால், தேவனின் ஆசீர்வாதம் அத்துடன் நின்றுவிடவில்லை. வேதத்தை வாசித்தோமானால், ஆபிரகாமின் சந்ததி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வரைக்கும் தொடர்ந்ததைக் காணலாம் (மத்தேயு 1:1-17). வாக்குத்தத்தத்தின் ஒரு குமாரனில் தொடங்கியது, ஆபிரகாம் தேவனையே சார்ந்துகொண்டதால் பெரும் பரம்பரையாக விளங்கியது. அன்பானவர்களே, ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்காகவும், பதில் கிடைத்த ஒவ்வொரு ஜெபத்திற்காகவும், சந்திக்கப்பட்ட ஒவ்வொரு தேவைக்காகவும், தேவ இரக்கத்தினால் நடந்த ஒவ்வொரு செயலுக்காகவும் அவரை ஸ்தோத்திரிக்க கற்றுக்கொள்வோம். நம் இருதயம் நன்றியால் நிறையும்போது, ஆண்டவர் நம் வாழ்க்கையை கனிநிறைந்ததாக்குவதோடு, நம்மையும் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அருமை பரம தகப்பனே, என் வாழ்வில் நீர் கிருபையாக பொழிந்துள்ள எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய நன்மைக்காகவும், அனுதினமும் என்னை தாங்கும் இரக்கத்திற்காகவும் நன்றியுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, என் ஸ்தோத்திரத்தை நீர் ஏற்றுக்கொண்டு, உம் அன்பையும் உண்மையையும் குறித்து ஆழமான உணர்வால் என் உள்ளத்தை நிரப்பியருளும். உம் பிள்ளைகளின் தேவைகளை உம் பரிபூரண சித்தத்திற்கேற்றாற்போல் அருளி, அவர்கள் வாழ்வு கனி நிறைந்ததாக, ஆசீர்வதிக்கப்பட்டதாக, செழிப்பானதாக அமையும்படி செய்திடும். உம் பிள்ளைகள் தொடர்ந்து உம்மில் களிகூரவும், தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உம் பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தவும் உதவும். அவர்கள் வாழ்க்கை உம் நன்மைக்கும் கிருபைக்கும் சாட்சியாக விளங்குவதாக என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


