அன்பானவர்களே, இன்றைக்கு இந்த மகத்தான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வது மகிழ்ச்சியாயிருக்கிறது. தேவன், "பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்" (2 சாமுவேல் 7:9) என்று வாக்குப்பண்ணுகிறார். எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! தேவனால் நமக்கு நற்பெயரை அளிக்கவும், கனத்தில் உயர்த்தவும் முடியும். ஆனால், தங்கள் பெயரை, நற்பெயரை உயர்த்த முயல்கிறவர்களுக்கு அவர் அப்படிச் செய்வதில்லை; மாறாக, தங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுக்க மனதாயிருக்கிறவர்களுக்கு அப்படிச் செய்வார். நாம் மக்கள் என்ன சொல்வார்கள்; சமுதாயம் நம்மை எப்படிப் பார்க்கும் என்று கவலைப்பட்டால், தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்து பெரிய மீனின் வயிற்றுக்குள் விழுந்த யோனாவைபோலாவோம். ஆனால், தேவனை முற்றிலும் நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவரே நம் பெயரை காத்து, அதைப் பிரகாசிப்பண்ணுவார்.
அன்பானவர்களே, இந்த உலகில் அநேகர் புகழை பெற விரும்பி, தங்களுக்கென ஒரு பெயரை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். ஆம். ஆனால், பெயர் பெரிதாகும்படி அவர்கள் உயரும்வேளையில், மறைவான பாவமோ, பலவீனமோ வெளிப்பட்டு, அவர்கள் நற்பெயர் குலைந்துபோகும். தங்கள் சொந்த பெயரையே அவர்களால் என்றென்றைக்கும் பாதுகாக்க முடியாமல் போகும். ஆனால், தேவனின் கரங்களில் தங்கள் வாழ்க்கையை, "ஆண்டவரே, என்னை பாதுகாத்துக்கொள்ளும். என்னை பெரியவனாக்கும். நான் உமக்குக் கீழ்ப்படிய மாத்திரமே விரும்புகிறேன்," என்று கூறுகிறவர்கள் தேவனால் கனப்படுத்தப்படுவார்கள். பவுல் நமக்கு உதாரணமாயிருக்கிறார். அடிக்கப்பட்டாலும், சிறைப்படுத்தப்பட்டாலும், மரணத்தைக் குறித்து அச்சுறுத்தப்பட்டாலும் அவர் சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசங்கித்தார். தன்னுடைய சொந்த பெயரைக் குறித்து அவர் அக்கறைப்படவில்லை. இயேசுவின் நாமத்தை உயர்த்துவதிலேயே கவனமாக இருந்தார். ஆகவேதான் விசுவாச வரலாற்றில் அவர் பெயர் பிரகாசிக்கிறது.
பவுலிடமிருந்தும் யோனாவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்வோம். மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, நம் சொந்த பெயரையும் கௌரவத்தையும் இயேசுவின் கரங்களில் ஒப்படைப்போம். அவரால் மாத்திரமே அவற்றை பாதுகாக்க முடியும். நாம் அவரை உண்மையாய் பின்பற்றும்போது, அவர் தம் நாமத்தை நம் மூலமாக பெரிதாக்குவதோடு, நம் பெயரையும் மனுஷருக்கு முன்பாக கனம் பண்ணுவார். நம்முடைய புகழுக்காக நாம் வாழாமல், அவருடைய மகிமைக்காக வாழ்வோம். அப்போது அவருடைய வேளையில் நம்மை பிரகாசிக்கப்பண்ணுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய விலையேறப்பெற்ற வார்த்தைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என் பெயரை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னுடைய கௌரவத்தையும் கனத்தையும் பாதுகாத்தருளும். மக்கள் என்ன சொல்வார்கள் என்று பயப்படாதிருக்க எனக்கு உதவி செய்யும். பவுலைபோல உம்மை பின்பற்ற தைரியத்தை எனக்குத் தாரும். யோனாவின் ஆவியை என் உள்ளத்திலிருந்து அகற்றும். உம்முடைய சித்தத்தையும் திட்டத்தையும் மாத்திரம் கனம் பண்ண எனக்கு கற்றுத்தாரும். உம்முடைய மகிமைக்காக என் பெயரை பிரகாசிக்கப்பண்ணும். உலகிற்கு என் வாழ்க்கை உம் நாமத்தை காட்டுவதாக அமையட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.