அன்பானவர்களே, இன்றைக்கு பெரிய வெள்ளிக்கிழமையை அனுசரிக்கிறோம். இன்றைய தினம்தான் இயேசு, நம் அனைவருக்காகவும் மரித்தார். "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்" (கலாத்தியர் 5:24) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். ஆம், நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள். இயேசு நமக்காக மரித்ததுபோல, நாம் நம் பாவ சுபாவத்தை சிலுவையில் அறைந்திட வேண்டும். இயேசு, "நீ என்னைப் பின்பற்றி வர விரும்பினால், உன்னைத்தான் வெறுத்து, உன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா" என்று கூறுகிறார். நம்மை நாமே வெறுப்பது என்றால் என்ன அர்த்தம்? வேதம், "நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்" என்று கூறுகிறது (ரோமர் 6:6). ஆகவேதான் நாம் எவ்விதமான பாவத்தையும் மறுக்கவேண்டும். என் கணவர், Dr. பால் தினகரன், "பலவீனத்தில் சோதனை வந்தால், தைரியமாய் மகனே 'இல்லை' என்று சொல்; தைரியமாய் மகளே 'இல்லை' என்று சொல்" என்று ஒரு பாடலை பாடுவார். பிசாசு, எப்போதும் பாவத்துக்கு, 'சரி' என்று நம்மை ஒத்துக்கொள்ளச் செய்வதற்காக சோதிப்பான். தேவன் நம் பாவங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டதால், நாம் இனிமேல் பாவத்திற்கு அடிமைகள் அல்ல; ஆகவே, தைரியமாய் பாவத்துக்கு 'முடியாது' என்று சொல்லவேண்டும். ஆம், அவர் உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் அற்றுப்போகப்பண்ணினார்; அவற்றை தம் முதுகுக்கு பின்னே எறிந்துவிட்டார்.

வேதம், அவபக்திக்கும் உலக இச்சைகளுக்கும் தேவனுடைய கிருபை நம்மை மறுப்பு கூற வைக்கும் என்று சொல்லுகிறது (தீத்து 2:12). இக்காலத்தில் இச்சையடக்கத்துடன், நீதியாக, பக்தியுடன் வாழவும் அது நமக்குப் போதிக்கிறது. நாம் சோதிக்கப்படும்போதெல்லாம் பவுலைப்போல செயல்பட வேண்டும். "மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்," (1 கொரிந்தியர் 9:27) என்று அவன் கூறுகிறான். பாவம் செய்யாதபடிக்கு நம் சரீரங்களை நாம் எப்படி ஒடுக்க முடியும்? தேவனுடைய வார்த்தையின் வாயிலாக நம்மை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள முடியும். தினமும் வேதத்திலுள்ள வார்த்தைகளை வாசித்தால், கர்த்தர் நம்மைச் சுத்திகரிப்பார். இப்படிச் செய்து நம் சரீரத்தில், தேவன் தங்கியிருக்கும்படிபண்ணினால், அவர் பாவம் செய்யாதிருக்க நமக்கு உதவுவார். ஆகவேதான் வேதம், "ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்," (கலாத்தியர் 5:16) என்று கூறுகிறது. இதற்காகவே பரிசுத்த ஆவியானவர் நம் பெலவீனங்களில் நமக்கு உதவுகிறார். அவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுடன் நமக்காக வேண்டுதல் செய்கிறார்.

ராஜமுந்திரியைச் சேர்ந்த ஸ்வர்ணா என்ற அன்பு சகோதரி தன் சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். அவர்கள் கணவர் 13 ஆண்டுகளாக நெடுங்காலம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். அதனால் குடும்ப வாழ்வில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கணவர், அந்தப் பழக்கத்தை விட்டுவிட விரும்பினாலும், முடியாமல் தேவனை விட்டு இன்னும் தூரமாக போய்விட்டார். இருவருக்கும் மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அநேக பிரச்னைகள் ஏற்பட்டதால், தனித்தனியாக வாழ்வது என்று முடிவெடுத்தார்கள். இந்தச் சூழலில் 2025 பிப்ரவரி மாதம் இருவரும் ஏலூரு பங்காளர் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். கூட்டம் முடிந்தபிறகு நாங்கள் ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக ஜெபித்தோம். இந்தத் தம்பதியர் எங்கள் மகன் சாமிடம் ஜெபிப்பதற்காகச் சென்றுள்ளனர். ஜெபித்த பிறகு ஆண்டவர் அற்புதவிதமாக கணவரை தொட்டு, மதுப்பழக்கத்திலிருந்து விடுவித்துள்ளார். அவர்கள் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கினார்கள். ஆனாலும், தேவன் கிருபையாக அவர்கள் உயிரை காத்துக்கொண்டார். ஜெபத்திற்குப் பிறகு அவர்கள் கணவர், பாவத்தை மறுத்து தேவனை பின்பற்ற தொடங்கினார். இப்போது ஆண்டவர், கல்லூரி ஒன்றில் வேலையைக் கொடுத்து அவர்கள் கணவரை கனப்படுத்தியுள்ளார். அங்கே அவர் பேராசிரியராக பணியாற்றுகிறார்; சந்தோஷமாக இல்லற வாழ்வை நடத்துகிறார். அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவுக்கு சொந்தமானவர்கள், தங்கள் பாவ இச்சைகளையும் விருப்பங்களையும் சிலுவையில் அறைந்திருப்பார்கள். தேவன் உங்களுக்கும் உதவுவார். மதுவை மறுத்துவிடுங்கள்; சோதனையை மறுத்து விடுங்கள்; உங்கள் பாவ சுபாவங்கள் அனைத்தையும் மறுத்துவிடுங்கள். அன்பானவர்களே, இன்று ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார்.

ஜெபம்:
பரம தகப்பனே, என் வாழ்வில் சிலுவைக்கு இருக்கும் அதிகாரத்துக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று, எல்லா பாவத்தையும் சோதனையையும் மறுக்க முடிவு செய்துள்ளேன். என்னை மறுத்து உம்மை முழு மனதோடு பின்பற்ற எனக்கு மனதை தந்தருளும். தினமும் உம் வார்த்தையால் என்னை சுத்திகரித்து, பரிசுத்தமாக்குவீராக. பரிசுத்த ஆவியானவரே, என்னை வழிநடத்தும்; பெலவீனமான தருணங்களில் என்னைப் பெலப்படுத்தும். என் சரீரத்தை ஒழுங்குப்படுத்தவும், நீதியாய் நடக்கவும் எனக்கு உதவும். என்னை மீண்டும் பாவத்துக்குள் இழுக்கும் எல்லா சங்கிலிகளையும் முறித்திடும். என் வாழ்வில் அனுதினமும் உம் கிருபையும் சத்தியமும் விளங்கட்டும். என் விருப்பங்கள் எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டு எல்லாவற்றுக்கும் மேலாக உம் சித்தத்தை தெரிந்துகொள்கிறேன் என்று கூறி இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.