அன்பானவர்களே, இன்றைக்கு இயேசு கூறியுள்ள, "வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 1:51) என்ற வசனத்தை தியானிப்போம். பழைய ஏற்பாட்டில் யாக்கோபு, தேவ தூதர்கள் வானத்திற்கு ஏறுகிறதையும் இறங்குகிறதையும் சொப்பனத்தில் கண்டதை இந்த வசனம் எதிரொலிக்கிறது. இதன் அர்த்தம் என்ன? இயேசுவே பூமிக்கும் பரலோகத்திற்கும் இடையே மெய்யான பாலமாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் மூலமாகவே நாம் இரட்சிப்பை பெறுகிறோம்; அவர் மூலமாகவே நம்முடைய வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டங்களும் நோக்கங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன; நிறைவேறுகின்றன.

சீனாவில் பரலோகத்தின் வாசல் என்ற இடம் இருக்கிறது. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு செல்லுகின்றனர். 2023ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 50 லட்சம் பேர் 999 படிகளும் ஏறி உச்சியில் நின்றனர். வானத்துக்கும் பூமிக்கும் இடையேயான பாலம் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் சென்றனர். ஆனால், நீங்களும் நானும் பரலோகத்தை பார்ப்பதற்கு கஷ்டப்பட்டு ஏற வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதே நற்செய்தி. இயேசுவை விசுவாசிப்பதால் நமக்கு மெய்யான நித்திய பாலத்தை பயன்படுத்துகிறதற்கு அனுமதி இருக்கிறது. அவரே நமக்காகப் பரிந்துபேசுகிறவர் (1 யோவான் 2:1). மனந்திரும்பிய கள்ளனுக்கு சிலுவையில் அவர், "இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்," என்று வாக்குப்பண்ணியபடி, எங்கெல்லாம் நாம் தடுமாறுகிறோமோ, அங்கெல்லாம் நமக்காக பரிந்துபேச அவர் ஆயத்தமாயிருக்கிறார்.

நாம் மனந்திரும்பும்போது, இயேசு நம்மை சீர்ப்படுத்துகிறார். நாம் பெலவீனராயிருந்தால் அவர் நம்மை பெலப்படுத்துகிறார். அனுதினமும் நாம், "ஆண்டவரே, இன்றைக்கு என்ன செய்யும்படி என்னை வைத்திருக்கிறீர்? எப்படி உம்முடை ய சித்தத்திற்கேற்றபடி நான் வாழலாம்?" என்று கேட்போம். அவர் நம்மை சோதனைக்கு விலக்கி நடத்துவார்; தம்முடைய வெளிச்சத்தில் வைத்துக்கொள்வார்; பரலோக பாதையில் நம்மை வழிநடத்துவார். ஆகவே, அன்பானவர்களே, அவரை நம்புங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் அவரை ஈடுபடுத்துங்கள். தேவ சமுகத்திற்கு நம்மை பாதுகாப்பாக கொண்டு செல்லும் பாலமாக இருக்க அவரை அனுமதியுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையே பாலமாக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இரட்சிப்பை எனக்குத் தந்து, எனக்காக பரிந்துபேசி, நித்திய ஜீவனுக்கான பாதையில் என்னை வழிநடத்துவதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நான் தவறும்போது, பெலவீனமாக உணரும்போது, என்னை பெலப்படுத்தும். தினமும் உம்மை நம்புவதற்கு, உம்முடைய சித்தத்தை நாடுவதற்கு, உம்முடைய பாதையில் நடப்பதற்கு உதவும். உம்முடைய அன்பு என் வாழ்வில் விளங்கட்டும். பரலோகம் உம் மூலமாகவே எனக்குத் திறந்திருக்கிறது என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்க உதவும். என்னுடைய அருமையான இரட்சகரும், எனக்காகப் பரிந்துபேசுகிறவரும், பாலமுமான உம்மை முழுமையாக விசுவாசிக்கிறேன், ஆமென்.