எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்" (எரேமியா 33:15) என்ற வசனத்தைத் தியானிப்போம். அவ்வண்ணமாகவே, எரேமியா 33:26, "அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்" என்று கூறுகிறது. என் தேவ பிள்ளையே, இந்த உலகத்தில் நீங்கள் அநேக உபத்திரவங்கள், பிரச்னையினூடாக கடந்து சென்று கொண்டிருக்கலாம். பணமோ, ஆரோக்கியமோ, குடும்பத்தில் சமாதானமோ தேவைப்படலாம். உங்களை நீங்கள் அதிகமாய் வருத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், நான் எப்போதும் சொல்வதுபோல் தேவனையே நோக்கிப் பாருங்கள். தப்பிப்பதற்கு அது ஒன்றே வழி. தேவன் மாத்திரமே உங்கள் நம்பிக்கை. அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்.

அவர் உங்களை ஆசீர்வதிக்க எவ்வளவாய் வாஞ்சிக்கிறார்! வேதம், " எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்" (ரோமர் 8:30) என்று கூறுகிறது. உங்களுக்கு புதிய வாழ்க்கையை, முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கையை, அவரோடு நெருங்கிய தொடர்புள்ளதும், அவருக்குப் பிரியமானதாய் எல்லா காரியங்களையும் செய்கிறதுமான வாழ்க்கையை தருவதற்கு தேவன் விரும்புகிறார். சவுல், பவுலாய் மாறினான். சமாரிய ஸ்திரீ அவருடைய விலையேறப்பெற்ற பாத்திரமானாள். தேவனை நோக்கிப் பார்த்து சகேயுவும் அவன் குடும்பத்தினரும் ஆசீர்வாதம் பெற்றனர். ஆகவே, அருமையான பிள்ளையே, தேவனை நோக்கிப் பாருங்கள். தேவனை பற்றிக்கொள்ளுங்கள். வேறு வழியே இல்லை.

இந்த உலகத்தில் நீங்கள் அநேக பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம்; இருளான தருணங்களை கடந்து செல்லலாம். ஆனால் அந்த வேளைகளிலும் தேவனை பற்றிக்கொண்டு, எப்போதும் அவரையே நம்புங்கள். தேவனுடைய வார்த்தையை வாசித்து அவரது ஆசீர்வாதங்களுக்கு உரிமை பாராட்டுங்கள். ஆண்டவர், தாம் வாக்குக்கொடுத்தபடியே அவரது வேளையில் உங்களை விடுவிப்பார். இருள் உங்களைச் சூழ்ந்திருப்பதாய் நீங்கள் உணர்ந்தாலும் கவலைப்படாதிருங்கள்; ஜெபித்து அவரையே பற்றிக்கொள்ளுங்கள். ஆண்டவர் அற்புதமான வழியில் உங்களை விடுவிப்பார். அப்போது உங்கள் இருதயத்தில் சமாதானத்தையும், நிரம்பி வழியுமளவுக்கு சந்தோஷத்தையும் பெறுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய நித்திய நம்பிக்கையும் அடைக்கலமுமாயிருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உபத்திரவங்களிலும் இருளிலும் உம்மையே இறுக்கமாகப் பற்றிக்கொள்ள எனக்கு உதவும். உம்முடைய வாக்குத்தத்தங்களில் என்னை நாட்டி கனி கொடுக்கும்படி செய்யும். உம்முடைய இரக்கமும் நீதியும் என் வாழ்க்கையில் பிரகாசிப்பதாக. வேதாகமத்தில் சவுலையும் சகேயுவையும் நீர் மாற்றியதுபோல என்னையும் மறுரூபமாக்கும். உம்முடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தெய்வீக பெலனையும் தயவாய் எனக்கு அருளிச்செய்து எப்போதும் உம்மையே நம்பும்படி காத்துக்கொள்ளும். கர்த்தாவே, என் உபத்திரவங்களிலிருந்து அற்புதமாய் என்னை விடுவித்தருளும்; என் வாழ்க்கை உம் பரிசுத்த நாமத்துக்கு மகிமையை கொண்டு வரவேண்டுமென்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.