அன்பானவர்களே, இந்தப் புத்தாண்டில் உங்களை வாழ்த்துகிறதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்றைக்கும் தேவன் உங்களுக்கு ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார். வேதம், "கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்" (சங்கீதம் 10:17) என்று சொல்லுகிறது. ஆம், கர்த்தர், சிறுமைப்பட்டவர்கள்மேல் நினைவாயிருக்கிறார். "நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கிறேன். சிறிய பட்டணத்தில் அல்லது கிராமத்தில் பிறந்திருக்கிறேன்," என்று நீங்கள் கூறலாம். "நான் ஏன் இங்கே பிறந்தேன்? இங்கே எனக்கு என்ன நம்பிக்கை?" என்று கேட்கலாம். குடும்பத்தின் கடன்களால் பாரப்பட்டிருக்கலாம் அல்லது அளவுக்கு அதிகமான பொறுப்புகளை சுமந்து, "ஆண்டவரே, என் சிறுமையைப் பாரும்," என்று புலம்பலாம்.
அன்பானவர்களே, சிறுமையை மேற்கொள்வதற்கான பெலனை ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள்மேல் நினைவாயிருக்கிறார். உங்களிடம் அவர் வருகிறார். சிறுமைப்பட்ட இந்த நிலையிலும் கவலைப்படாதீர்கள். எல்லாவற்றின் மத்தியிலும் நீங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டதை எண்ணி மகிழுங்கள். சிறுமைப்பட்டவர்களின் வேண்டுதலுக்குச் செவிகொடுக்க தேவன் காத்திருக்கிறார் என்று இந்த வசனம் கூறுகிறது. உங்கள் விருப்பங்களைக் குறித்து யாரும் அக்கறை கொள்ளமாட்டார்கள் அல்லது அவை இந்தச் சூழ்நிலையில் ஒருபோதும் நிறைவேறாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஆண்டவர் உங்கள் விருப்பங்களைக் கேட்பதற்கு, உங்கள் கூப்பிடுதலுக்குச் செவிகொடுக்கக் காத்திருக்கிறார். உங்களை ஊக்கப்படுத்த, பெலப்படுத்த, வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அவர் இருக்கிறார்.
என் தாத்தா, மறைந்த Dr.டி.ஜி.எஸ். தினகரன், சுரண்டை என்னும் சிற்றூரில் பிறந்தார். அங்கே எந்த வசதியும், உள்கட்டமைப்பும் இல்லை. கனவோ, நம்பிக்கையோ இல்லை. ஏழ்மையாயிருந்த அவர், வியாதி, வறுமை, பிரச்னைகள் காரணமாக தம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளச் சென்றார். ஆனால், அவரது சித்தப்பா அவரை இயேசுவின் அன்பினிடமாய் திருப்பினார். அவர், ஆண்டவரிடம், "நீர் உம்மை எனக்காகத் தருவீரா? உம் வாழ்க்கையை எனக்குத் தருவீரா?" என்று கேட்டார். ஆண்டவர், அவரது உள்ளத்தை மிகுந்த அன்பினால் நிறைத்து, அவர் ஜெபத்திற்குச் செவிகொடுத்தார். அன்றிலிருந்து, அவரது வாழ்க்கை முடியும் வரைக்கும் ஆண்டவர் ஒருபோதும் அவரை விட்டு விலகவில்லை. வங்கியில் வேலை கொடுத்து அவரை ஆசீர்வதித்தார். பெரிய பதவிக்கு அவரை உயர்த்தினார்; ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்தினார்; தம் வல்லமையுள்ள ஊழியக்காரனாக்கினார். இன்று கோடிக்கணக்கானோர் அவரை நேசிக்கிறார்கள்; மரியாதை கொடுக்கிறார்கள்; தேவனுடைய ஊழியராக கனம்பண்ணுகிறார்கள். என்ன மாற்றம்! ஆகவே, அன்பானவர்களே, நீங்களும் ஆயத்தமாகுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் சிறுமைப்பட்டிருக்கும்போதும் நீர் என்மேல் காட்டும் அன்புக்காய் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உலகத்தால் நான் அலட்சியம் பண்ணப்பட்டாலும், நீர் என்னை பொக்கிஷமாய் வைத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் அன்பு என் வாழ்வில் பாய்ந்து, மிகுந்த நம்பிக்கையை அளித்து என்னை உற்சாகப்படுத்தட்டும்; உயர்த்தட்டும். இயேசுவே, நீர் இன்று எனக்குள் ஊற்றும் புதுப்பெலனுக்காக உமக்கு நன்றி. என் விருப்பங்களையும் என் நம்பிக்கையையும் உம் கரங்களில் எடுத்துக்கொள்கிறீர். உம் சித்தத்தின்படியே அவற்றை ஆசீர்வதிக்கிறீர். நீர், நீர்தாமே சகல வெற்றிக்குள்ளும் என்னை நடத்துகிறீர். நீர் என்னை பயன்படுத்துவீர்; பிரகாசிக்கப்பண்ணுவீர்; ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணுவீர் என்று அறிக்கையிட்டு இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


